சமூக போராளிகள் எங்கே? திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டவர்கள் தூங்குகிறார்களா? கொந்தளித்த இபிஎஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2023, 1:28 pm
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, புது அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர். சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பல பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில பேருக்கு சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அனைவருக்கும்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை கிராமத்தில் போலி மதுபானம் அருந்தி 5 பேர் இறந்துள்ளனர். இது துயரமான, வேதனையான செயலாக பார்க்க முடிகிறது.
ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு இந்த இரண்டு ஆண்டுகளில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்கின்றவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு காரணம் திமுகவை சேர்ந்தவர்களே. கள்ளச்சாராய விற்பனையிலும், போலி மதுபான விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ள ஒருவர், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்தன. இதையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய காரணத்தால் இன்றைக்கு 18 பேரின் உயிரை இழந்துள்ளோம்.
அதுபோல், செங்கல்பட்டு பெருங்கரணையில் 5 பேர் இறந்துள்ளனர். பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலே போலி மதுபானம் விற்பனை செய்தவர், அந்தப் பகுதியை சேர்ந்த சித்தாமூர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பனின் சகோதரர் அமாவாசை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தியும், போலி மதுபான விற்பனை செய்துள்ளதால், அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள்.
எங்கள் அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனியாக ஒரு குழுவை அமைத்து, கண்காணிக்கப்பட்டு வந்தது. கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தோம்.
ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில் கள்ளச்சாராய வியாபாரிகள், போலி மதுபான வியாபாரிகள் பெருகி இருக்கிறார்கள். இந்த இரண்டு நாளில் 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 1600 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அப்படி என்றால் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதும், போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் அரசுக்கும், காவல்துறைக்கும் தெரிந்திருக்கிறது.
இந்த இரண்டு நாளில் மட்டும் 1600 பேரை கைது செய்துள்ளார்கள் என்றால், இவர்கள் தினந்தோறும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால், பல்லாயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்படுவார்கள்.
இதற்கெல்லாம் முழு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திறமை இல்லாத பொம்மை போன்றும் நாட்டின் மீது அக்கறையில்லாத முதலமைச்சராகவும் ஸ்டாலின் செயல்படுவதால், விலை மதிக்க முடியாத உயிரை இழந்திருக்கிறோம்.
ஏராளமான பெண்கள் தாலியை இழந்து இருக்கிறார்கள். இன்றைக்கு நாடு கொந்தளித்து போய் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தடையில்லாமல் கள்ளச் சாராய விற்பனை, போபி மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத்தில்நான் குறிப்பிட்டு பேசும்போது இன்றைக்கு பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பேசினேன். முதலமைச்சர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 18 பேரை இழந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று கூறினார்கள். ஆனால் இப்போது சாராய ஆறுதான் தமிழகத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு பழமொழி சொல்வார்கள், கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு, இன்றைக்கு கள்ளச்சாராயம், போலி மதுபானம் குடித்தவர்கள் கண்ணையும் இழந்து விட்டார்கள். உயிரையும் இழந்து விட்டார்கள். இதற்கு நாட்டை ஆள்பவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
போலி மதுபான விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை இந்த அரசாங்கமே ஊக்குவிக்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். தமிழகத்தில் கஞ்சா போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. உடனே தமிழக டிஜிபி இந்த கஞ்சாவை ஒழிப்பதற்காக 2.0 என்ற திட்டத்தை அறிவித்தார். அதன்பின் 3.0 என்றார்கள். கடந்த வாரம் 4.0 என்று அறிவித்தார்கள். இதுவெல்லாம் அறிவிப்போடு நின்று விடுகிறது.
ஏனென்றால் பெரும்பாலானோர் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தோடு, அவர்களின் துணையோடு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்தான் இதை கட்டுப்படுத்த முடியவில்லை. அதுமட்டுமல்ல, அரசாங்கமே மதுபானத்தை அருந்துவதற்கு ஆதரவளிக்கிறது.
விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள், மால்களில் தானியங்கி எந்திரம் மூலம் மதுவை விற்பனை செய்கிறார்கள். மது குடிப்பதை குறைப்பதற்கு பதிலாக, அதிகப்படுத்துகிறார்கள். எல்லாவற்றிலும் ஊழல்.
இந்தத் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு மதுபாட்டிலுக்கு 10% கமிஷன் வாங்குவதாக பத்திரிக்கை செய்திகள் வந்துள்ளது. அவரிடம் கேட்டால் நான் மேலிடம் வரை பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்கிறார். மது விற்பனையிலும் ஊழல் செய்துள்ளனர்.
இப்படி ஊழல் செய்த காரணத்தால் தான், 30 ஆயிரம் கோடி என்ன செய்வதென்று தெரியவில்லை என, அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். அவர் சாதாரணமானவர் அல்ல, பொருளாதார மேதை, பொருளாதார நிபுணர், விஷயம் தெரிந்தவர். அவரே இந்த செய்தியை ஆடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்.
அப்படி என்றால் இப்படிப்பட்ட செயல் மூலமாக இந்த இரண்டு ஆண்டில், எவ்வளவு பணத்தை திரட்டி இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.
இது மட்டுமில்லாமல் சமூகப் போராளிகள் என்று இந்த ஆட்சியில் பல பேர் கூறிக்கொண்டு இருந்தார்கள். சாராயத்தை தடுப்பதை பற்றி அவர்கள் பாட்டெல்லாம் பாடினார்கள்.
அவர்கள் இப்போது எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. சமூக போராளிகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா என தெரியவில்லை. எல்லோருமே திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இவ்வளவு உயிர்கள் பறிபோய் இருக்கிறது. எந்த சமூகப் போராளியும், நடிகரும் குரல் கொடுக்கவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளும் வாய்த் திறக்காமல் மௌனம் காக்கிறார்கள்.
இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.இவ்வளவு உயிர்கள் போயிருக்கிறது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சனையை எடுத்து சொல்வது தான் எதிர்க்கட்சியின் கடமை.
இதைக் கூட செய்ய முடியாத கட்சிகள் எல்லாம் இன்று தமிழகத்தில் இருக்கிறது. யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் சமம். எங்களை பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக சொல்லவில்லை.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் போதை விளிம்பில் இருக்கிறார்கள்.
2011-16 ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக, பணம் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கை விசாரிக்க, விசாரணை குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வந்தவன். மனதில் ஈரத்தோடு பேசுகிறேன். சாராய விற்பனை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இதை தடுக்க தவறிய அரசு உரிய பதில் தெரிவிக்க வேண்டும். பொறுத்தவரை விமர்சனங்களுக்கு உரிய பதில் கொடுப்போம். அந்த தெம்பு திராணி கிடையாது என்றார்.
0
0