இந்து மதத்தை இழிவுப்படுத்திய லியோனி மீது நடவடிக்கை எங்கே? ஆளுங்கட்சி எடுபிடியாக உள்ளது காவல்துறை : ஹெச்.ராஜா காட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2022, 8:47 am
இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வரும் லியோனியை தமிழ்நாடு பாடநுால் நிறுவன பொறுப்பிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என ஹெச் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க., அரசு தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து அவர்கள் மூலம் இந்து மதத்தை இழிவுபடுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. லியோனி போன்றவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இதை செய்தால் தான் முதல்வர் நாகரீகமானவர் என மக்கள் கருதுவர். தவறினால் அவர் கூறி தான் இதெல்லாம் நடப்பதாக மக்கள் நினைப்பர்.
தி.மு.க., இந்து விரோத கட்சி மட்டுமல்ல தேசவிரோத கட்சியும் கூட. இந்து முன்னணி நிர்வாகி கனல்கண்ணனை கைது செய்த தமிழக அரசு நடராஜபெருமானை அவதூறாக பேசிய யூடியூப் புரூட்டர்ஸ் மைனர் விஜயை ஏன் கைது செய்யவில்லை.
ஆளுங்கட்சி எடுபிடியாக போலீஸ் துறை செயல்படுகிறது. இந்து மதத்தை இழிவுபடுத்துபவரை போலீசார் கைது செய்வதில்லை. இதில் உள்நோக்கம் இருக்கிறதா என விசாரிக்க வேண்டும்.
வெளிநாட்டில் இரண்டு கம்பெனிகளை காலி செய்து விட்டு இங்கு வந்தவர் தான் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழகத்தை திவாலாக்க முடிவு செய்து 15 மாதங்களில் ரூ.1.80 கோடி கடன் வாங்கியுள்ளார். மின் துறையில் வேலையாட்களை காலி செய்து விட்டு மின் கணக்கீடுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்துள்ளனர்.
கணக்கெடுப்புக்கு செல்லாமல் கணக்கிடுகிறார்கள். கால்நடைகளுக்கான அனைத்து தீவனங்களும் விலை உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, விவசாயிகளின் விரோதியாக தி.மு.க., அரசு செயல்படுகிறது என்றார்.