ரூ.1 லட்சம் கோடிக்கு எங்கே போகும்?…. வாயால் வடை சுடும் காங்கிரஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2023, 6:03 pm
Cong - Updatenews360
Quick Share

சனாதன தர்ம ஒழிப்பு விவகாரம் யாருக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறதோ, இல்லையோ? காங்கிரசை ரொம்பவே அலற வைத்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அதை ஹைதராபாத் நகரில் நடந்த மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் நிறைவு நாள் கூட்டத்தில் சோனியா, ராகுல் ஆகியோருடைய பேச்சுகள் மூலம் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

ராகுல் மறைமுக உத்தரவு

இக் கூட்டத்தில் ராகுல் பேசும்போது, “காங்கிரஸ்காரர்களுக்கு கொள்கையில் தெளிவு இருக்க வேண்டும். பாரத மாதாவின் குரலை கேளுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுப்புங்கள். பாஜகவின் பொறியில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவையெல்லாம் சாமானியர்களுக்கோ, பெண்களுக்கோ அல்லது நமக்கோ தொடர்புடைய பிரச்சினைகள் அல்ல” என்று கூறி இருப்பதன் மூலம் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் சிலர் சனாதன தர்ம ஒழிப்பு விவகாரத்தில் இருந்து விலகியே நிற்கவேண்டும் என்பதை மறைமுக உத்தரவாகவும் பிறப்பித்திருக்கிறார்.

சோனியாவோ இன்னும் ஒரு படி மேலே போய் “இது நாம் ஓய்வெடுப்பதற்கான நேரம் அல்ல, நமது ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த சர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்று படவேண்டும். மக்கள் மாற்று அரசியலை பார்க்கிறார்கள். கர்நாடக, இமாச்சலப் பிரதேச மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது இதை உறுதி செய்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே நமது இலக்காக இருக்கவேண்டும். அப்படி தோற்கடித்து மாற்று அரசு அமைக்க விடாமுயற்சியுடன் பணியாற்றுவோம். தெலுங்கானாவில் இருந்து நாம் புதிய வலிமையுடன் தெளிவான செய்தியுடனும் செல்கிறோம்” என்று ஆவேசமாக முழங்கியும் இருக்கிறார்.

வாக்குறுதிகளை அள்ளி வீசிய சோனியா

இதன் பின்பு ரங்கரெட்டி மாவட்டம் துக்குகூடா என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி, பல தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தார்.

அதில், இதற்கு முன்பு இமாசலப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் வீசிய பணப்பயன் வாக்குறுதிகளை விட இன்னும் பல மடங்கு அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. தவிர எந்தவொரு தேசிய அரசியல் கட்சியும் மாநிலத் தேர்தலுக்காக இவ்வளவு கவர்ச்சிகர வாக்குறுதிகளை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக வெளியிட்டதில்லை என்பதைப்போல் அவைகள் இருந்ததும் ஆச்சரியம்.

குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய், அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் 500 ரூபாய், வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், முதியவர்கள், கைம்பெண்கள், நெசவாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் 4 ஆயிரம் ரூபாய், ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெற 10 லட்ச ரூபாய் மதிப்பில் ராஜீவ் காப்பீட்டுத்தொகை, விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை அட்டை என்று 10க்கும் மேற்பட்ட கவர்ச்சி வாக்குறுதிகளை அடுக்கினார்.

காங்கிரசுக்கு கூடுதல் நிதிச்சுமை

இதன் மூலம் தெலுங்கானாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு இந்த வாக்குறுதிகளைப் போல இன்னும் பல மடங்கு கவர்ச்சி உறுதிகளை காங்கிரஸ் மேலிடம் அளிக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது.

கர்நாடகா, இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வாக்குறுதிகளை அளித்தார். இதிலும் ஏராளமான கவர்ச்சி வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்திருந்ததால் இமாச்சலப் பிரதேச மாநில காங்கிரஸ் அரசுக்கு தற்போது கூடுதலாக 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிச் சுமை ஏற்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலத்திலோ ஒன்றரைக் கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய்,பெண்களுக்கு மாநிலம் முழுவதும் இலவச பஸ் பயணம், 200 யூனிட் மின்சாரம் இலவசம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை போன்ற பல திட்டங்களால் ஆண்டொன்றுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஏற்கனவே பட்ஜெட்டில் 57ஆயிரம் கோடி ரூபாய் துண்டு விழுந்துள்ள நிலையில் 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதிச் சுமை அதிகரித்து
சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு விழி பிதுங்கி போய் உள்ளது.

திமுக மாடலை கையில் எடுக்கும் காங்கிரஸ்

தமிழகத்தில் திமுக அரசு மின் கட்டணம், சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டணம், பால் பொருட்கள், அத்தியாயவசிய கட்டுமான பொருட்களான சிமெண்ட், இரும்புக் கம்பி, செங்கல் போன்றவற்றின் விலையை கடுமையாக உயர்த்தியது போல நாமும் மீண்டும் ஒரு முறை சில மடங்கு அதிகரித்து ஈடு கட்டலாமா என்று கர்நாடகா யோசித்தும் வருகிறது. ஆனால் 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இன்னும் ஏழு, எட்டு மாதங்களுக்கு சமாளிப்போம். பிறகு கட்டணத்தை உயர்த்தினால் மக்களிடம் இருந்து பெரிய அளவிற்கு எதிர்ப்பு வராது என்று சித்தராமையா கருதுவதாக தெரிகிறது.

தெலுங்கானாவை பொறுத்தவரை அது சிறிய மாநிலம் என்றாலும் கூட அங்கு ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் இருக்கிறார்கள். ஒருவேளை
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்பட்டால் ஆண்டுக்கு இதற்காக மட்டுமே சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். அதேபோல் 200 யூனிட் இலவச மின்சாரம் மூலம் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் என்றால் அதன் வாயிலாக அரசுக்கு ஒரு ஆண்டுக்கு சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் இழப்பும், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மூலம் 2000 கோடி ரூபாய் வரையிலும் நஷ்டமும் ஏற்படலாம்.

பட்ஜெட்டை மீறும் வாக்குறுதி

சோனியா அறிவித்திருக்கும் இதர முக்கிய வாக்குறுதிகள் மூலம் மேலும் 25 முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை தெலுங்கானா அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக நிதி இழப்பு ஏற்படும். அதாவது சுமார் 95 ஆயிரம் கோடி ரூபாய் வரை அந்த மாநில அரசு கூடுதலாக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யவேண்டி வரும்.

ஏற்கனவே 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் திணறும் தெலுங்கானாவுக்கு சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டால் அந்த மாநிலத்தின் கதி என்னாவது? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் தெலுங்கானாவின் ஆண்டு பட்ஜெட்டே 2.9 லட்சம் கோடி ரூபாய் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தெலுங்கானாவில் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவது காங்கிரசுக்கு இயலாத ஒன்றாகவே உள்ளது. தற்போது அங்கு ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு வலுவான போட்டியாளராக பாஜக உருவெத்துவிட்டது. இதனால் காங்கிரஸுக்கு தோல்வி உறுதி என்பதை தெரிந்து கொண்டுதான் வந்தவரை லாபம் என்று சோனியா காந்தி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே ஏராளமான வாக்குறுதிகளை வாரி இறைத்திருக்கிறார்”என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

காங்கிரசுக்கு வாழ்வா? சாவா?

“:இமாச்சலப் பிரதேசத்திலும் கர்நாடகாவிலும் ஒரு டஜனுக்கும் மேலான கவர்ச்சிகர பணப் பயன் வாக்குறுதிகளை அளித்ததால்தான் காங்கிரசால் வெற்றி பெறவே முடிந்தது. ஆனால் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால்தான் இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று சோனியா பூசி மெழுகுகிறார்.

மேலும் தெலுங்கானாவில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு இப்போதே ஏன் பணப்பயன் அளிக்கும் ஏராளமான வாக்குறுதிகளை அளிக்கிறார். ஏனென்றால் இந்த மாநிலத்தில் மூன்றாவது இடம் கிடைத்தால் காங்கிரசை அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளே மதிக்காத நிலை ஏற்படும். அதனால் தான் மாநிலத்தின் வரவு செலவு எவ்வளவு என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தெலுங்கானாவில் சோனியா அள்ளி விடுகிறார்.

இப்படி மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றுவதற்கே கவர்ச்சி வாக்குறுதிகளை டஜன் கணக்கில் அடுக்கும் சோனியா நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு வாழ்வா? சாவா? என்ற நெருக்கடியில் ஏராளமாக அள்ளித் தெளித்து விடுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பாஜக

குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 3000 ரூபாய், ஏழை விவசாயிகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய், மின்சார ரயில்களில் பெண்களுக்கு இலவச பயணம், தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் மகளிர்க்கு 50 சதவீத கட்டணம், முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ஐந்தாயிரம் ரூபாய், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் ரத்து, நூறு நாள் வேலைத் திட்டம் 250 நாட்களாக அதிகரிப்பு, ஏழ்மை நிலை குடும்ப இளம் பெண்களின் திருமணத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் உதவித் தொகை என்று எக்கச் சக்க வாக்குறுதிகளை சோனியா அறிவிப்பார் என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு சிலர் பெருமையுடன் கூறும் அளவிற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது.

அரசியலில் கொள்கை, கோட்பாடுகள், நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம், என்று பார்த்தால் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்துவது மிகக் கடினம் என்பதை சோனியா நன்றாகவே உணர்ந்துள்ளார். அதனால்தான் எப்படியாவது வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றி விடவேண்டும் என்கிற எண்ணத்தில் இப்படி கவர்ச்சி வாக்குறுதிகளை அடுக்குகிறார். எனவே இதைப் புரிந்துகொண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய வியூகங்களை பாஜக தலைவர்கள் அமித்ஷா, ஜேபி நட்டா வகுத்தால் மட்டுமே பாஜகவால் ஹாட்ரிக் வெற்றியை பெற முடியும்!” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சோனியாவின் சமீப கால நடவடிக்கைகளை பார்த்தால் இது நம்பும்படிதான் இருக்கிறது!

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 256

    0

    0