எல்லா பக்கமும் குடிநீர் இருக்கோ இல்லையோ டாஸ்மாக் இருக்கு.. திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது : அண்ணாமலை பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2023, 9:55 pm

எல்லா பக்கமும் குடிநீர் இருக்கோ இல்லையோ டாஸ்மாக்.. திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது : அண்ணாமலை விமர்சனம்!

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன் புதூரில் இருந்து பா.ஜ.,வின் என் மண் என் மக்கள் நடைபயணம் துவங்கி, ஆனைமலை முக்கோணம் பகுதியில் நிறைவடைந்தது.

வால்பாறை சட்டசபை தொகுதியை பொறுத்தவரை, 70 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தவர்கள், இங்குள்ள பிரச்னைகளை தீர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.சிறு பிரச்னை கூட விஸ்வரூபம் எடுத்து மக்களை சிரமப்படுத்துகிறது.

இயற்கை அழகு கொண்ட ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.சீதையை மீட்க ராமர் சென்ற போது அம்மனை வணங்கி சென்றார்.புகழ் பெற்ற ஆனைமலை அருகே வால்பாறைக்கு மாலை, 6:00 மணிக்கு மேல் செல்லக் கூடாது என செக் போஸ்ட் அமைத்துள்ளனர்.

அதை, வழக்கம் போல, 24மணி நேரமும் செயல்பட வேண்டும். வரும், 60 நாட்களுக்குள் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்படவில்லை என்றால் பா.ஜ., சார்பில் பெரிய அளவில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

காமராஜர் காலத்தில் தான் பி.ஏ.பி., திட்டம் செயல்படுத்தப்பட்டது.அவரது ஆட்சி காலத்தில் அணைகளை கட்டி எவ்வாறு விவசாயத்திற்கு நீரை கொண்டு வந்தாரோ அதே போல் தி.மு.க., மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தமிழகம் எங்கும் டாஸ்மாக் கொண்டுவந்தார்.

குடிக்க நீர் இருக்கோ இல்லையோ, எல்லா பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் உள்ளன. விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க., உள்ளது.கேரளா அரசு இடைமலையாறு அணை கட்டிய பின்பும் இதுவரை ஆனைமலையாறு – நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்த பேச்சு நடத்தப்படவில்லை. இத்தனைக்கும் தி.மு.க., அரசு கேரளா அரசுடன் இணக்கமாக உள்ளது.

ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்துக்கள் சொன்ன தமிழக முதல்வர், ஒருவார்த்தை அந்த மாநில முதல்வருடன் பேசி ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை செயல்படுத்த சொல்ல முடியாதா; விவசாயிகள் கஷ்டம் அவருக்கு தெரியாது. விளை நிலத்தில் கான்கிரீட் ரோடு போட்டு சென்று போஸ் கொடுத்தவர் தான் முதல்வர்.

தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவிற்கு விட்டு கொடுக்கிறார் தமிழக முதல்வர்.இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது என அவர் தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!