கனமழையால் எந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு? தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறிய தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2024, 11:28 am

கனமழையால் எந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு? தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறிய தகவல்!

இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர், இன்று சென்னையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்த நிலையில், இன்று சென்னையில் மிகக் கனமழைக்குப் பதிலாகக் கனமழையே இருக்கும் என்று அவர் கணித்துள்ளார்

இது தொடர்பாக வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “சென்னையின் தெற்கே மகாபலிபுரம் பகுதிகள் வரை மழை மேகங்கள் உள்ளன. டெல்டா முதல் செங்கல்பட்டு வரை கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், சீர்காழி என டெல்டாவின் சில பகுதிகளில் 200 மிமீ தீவிர மழையும் பெய்துள்ளது. ஆனால், சென்னையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. சென்னையைப் பொறுத்தவரை இன்று கனமழைக்குப் பெய்ய மட்டுமே வாய்ப்புள்ளது.

மழை மேகங்கள் டெல்டா முதல் பாண்டி (புதுச்சேரி) பெல்ட் வரை உள்ளன. விழுப்புரம், புதுச்சேரி முதல் திருவண்ணாமலை வரையிலான பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும். தென் சென்னை புறநகர் முதல் கிழக்கு கடற்கரைச் சாலை வரையிலான பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இருப்பினும், நகர்ப் பகுதி மழை மேகங்களைத் தவறவிட்டது. டெல்டா பகுதியின் மேலே இருந்த மழை மேகங்கள் நகர்ந்து இப்போது விழுப்புரம் மாவட்டங்களைச் சூழ்ந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் இது செங்கல்பட்டு மற்றும் தென் சென்னை புறநகர்ப் பகுதிகளுக்குச் சிறிது சிறிதாக நகரக் கூடும்.

எனவே, சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை. . இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் வழக்கமான சமாளிக்கக்கூடிய கனமழை மட்டுமே பெய்யும். இங்கே மிக அதிக மழை பெய்யாமல் போகலாம். அதேநேரம் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகள். கள்ளக்குறிச்சி, கடலூரில் சில இடங்களில் இன்றும் கனமழை பெய்யும். இப்போது வரை திருவாரூர் மற்றும் சீர்காழியில் 200 மிமீ மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்திலும் சுமார் 150-200 மி.மீ மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மகாபலிபுரத்தில் 120 மி.மீ மழையும் அரியலூரில் 50-90 மி.மீ மழையும் பெய்துள்ளது.. சென்னையைப் பொறுத்தவரைத் தென் சென்னை பகுதிகளில் 50-70 மி.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரி விழுப்புரம் மற்றும் கடலூரில் இன்று நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…