நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இறக்கை கட்டி பறந்தது. ஆனால் சிலரோ அவர் கட்சி எல்லாம் தொடங்கி தேர்தலை சந்திக்க மாட்டார், ரஜினி போல
சும்மா பேசி விட்டு கடைசி நேரத்தில் ஒதுங்கி விடுவார் என்று கிண்டலாகவும் விமர்சித்தனர்.
இந்த வாதம் முற்றிலும் தவறானது, என்பதை உணர்த்தும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதியான இன்று வெளியிட்டு இருக்கிறார்.
அவருடைய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல்தான் பிரதான இலக்காக இருக்கும் என்பதை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் வெளிப்படையாக
குறிப்பிட்டு இருக்கிறார்.
1984ல் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய் சுமார் 30 ஆண்டுகளுக்கு கழித்து ஏறக்குறைய அதே பெயர் வரும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது கட்சிக்கு சூட்டியிருப்பதுதான்
இதில் ஆச்சரியமான விஷயம்.
அதே போல் 2009ல் ஜூன் 26ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நலனுக்காக விஜய் மக்கள் இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளையும், அவர்களது பெற்றோரையும் சென்னைக்கு வரவழைத்து பத்தாயிரம் ரூபாய் வரை பரிசுப் பொருட்களையும் வழங்கி அதிரடியும் காட்டினார்.
அதுமட்டுமின்றி, “நல்ல தலைவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் பெற்றோரிடம் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம் என சொல்லுங்கள். ஒரு தொகுதிக்கு இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்றால் எவ்வளவு சேமித்து வைத்திருப்பார்கள் என எண்ணிப் பாருங்கள்” என்று அட்வைசும் செய்தார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளை மனதில் வைத்துதான் தொகுதி வாரியாக பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் பரிசுகளை அள்ளி வழங்கினார் என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. .
மேலும் அவர் அரசியலுக்கு வருவதில் தீவிரமாகவும், மிக உறுதியாகவும் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளவும் முடிந்தது. அது இப்போது உண்மையாகவும் ஆகிவிட்டது.
அதேநேரம் நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு.
அதிலும் குறிப்பாக, “தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்துகொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்” என்று மறைமுகமாக சில அரசியல் கட்சிகளை போட்டு தாக்கியும் இருக்கிறார்.
அவர் எந்த கட்சிகளை சாடுகிறார் என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களுக்கும் நன்றாகவே தெரியும். அந்த கட்சிகள் அத்தனையும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றன.
சில டிவி செய்தி சேனல்கள் நடிகர் விஜய் அரசியலில் குதிக்கிறார் என்பதற்கு பதிலாக சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய் என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டன. GOAT என்ற படத்தில் நடித்து வரும் விஜய், இன்னொரு படத்திலும் நடிக்க உள்ளார். இத்தனைக்கும் அவர் தனது அறிக்கையில் கையில் இருக்கும் இரண்டு படங்களையும் இந்தாண்டுக்குள் முடித்து விடுவேன் என்பதையும் குறிப்பிட்டுத்தான் இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் சினிமாவிற்கு முழுக்கு போடுகிறார் என்று எப்படி கூறுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
தமிழகத்தில் தற்போதைய டிவி செய்தி சேனல்களில் பல எந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
நடிகர் விஜய் அரசியலில் குதித்து இருப்பது பற்றி அரசியல் நோக்கர்கள் கூறும் தகவல்கள் ஆழ்ந்து சிந்திக்க கூடியவை.
“தமிழகத்தில் கூட்டணி வைக்காமல் ஆட்சியை பிடிக்க முடியாதோ என சந்தேகம் விஜய்க்கு எழுந்திருக்கலாம். அதனால்தான் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய் அன்புமணி, திருமாவளவன், சீமான், ஆகியோரின் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து கூறியிருந்தார்.
அவரது அரசியல் வருகை இன்று தீர்மானிக்கப்பட்டது அல்ல பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தபோது அரசியல் வருகைக்கான வேலைகளை படிப்படியாக செய்வேன் என்று கூறியிருந்தார். அதிலிருந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அரசியல் பஞ்ச் வசனம் பேசி சமூக பிரச்சினைகளை சுட்டியும் காண்பித்தார். தலைவா படத்தின் போது TIME TO LEAD என்ற வாசகத்தால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக தலைமையால் நேரடியாக சீண்டப்பட்டார்.
தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்களில் இந்த படம் வெளியாகவில்லை. அவரது ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படம் பார்த்தனர். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இப்பிரச்சினையில் நீங்கள் நேரில் தலையிட்டு தீர்வு தர வேண்டும் என ஒரு கோரிக்கை வீடியோவை வெளியிட்டார். அதன் பிறகு அந்த படத்தில் சர்ச்சைக்குரிய சில வசனங்கள் நீக்கப்பட்டன.
பின்னர் நடித்த படங்களில் அரசியல் வசனம் பேசுவதை விஜய் குறைத்துக் கொண்டார். எனினும் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவிற்கு பிறகு விஜய்யின் படங்களில் அரசியல் வசனங்கள் மீண்டும் அதிகரித்தன.
2017ம் ஆண்டு ஜனவரியில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியபோது தமிழ் சினிமாவில் இருந்து முதல் ஆளாக குரல் கொடுத்து விஜய் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதோடு அவர் நிறுத்திவிடவில்லை. மெரினா கடற்கரைக்கு நேரடியாக சென்று முகத்தை மறைத்தபடி சிறிது நேரம் இளைஞர்களுடன் அமர்ந்திருந்தார்.
மெர்சல் படத்தில் மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளை நேரடியாக சாடினார். அப்போது அவரை பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா ஜோசப் விஜய் என கூறியது பெரும் சர்ச்சையானது.
அடுத்ததாக நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் பூதாகரம் ஆக்கப்பட்டபோது , மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது அண்ணனிடம் ஆறுதல் கூறினார். அண்மையில் தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டபோது நேரில் சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
இப்படி தனது அரசியல் கட்சிக்காக வலுவான கட்டமைப்பை நடிகர் விஜய் கடந்த 15 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ளார்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
2026 தேர்தலில் நடிகர் விஜய் குதிப்பதை உறுதி செய்து விட்டதால் அவருடைய தமிழக வெற்றி கழகம் எந்தக் கட்சிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள முழுமையாக இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்து இருக்கவேண்டும்.
அதுவரை சஸ்பென்ஸ் நிறைந்த இடைவேளைதான்!
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.