ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் வரலாற்று சாதனை : சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2024, 3:50 pm
வங்கதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ராவல்பிண்டியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கேப்டன் ஷான் மசூத், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் அரை சதம் கடந்தனர். ஷான் மசூத் 58 ரன்னிலும், சயீம் அயூப் 57 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, களமிறங்கிய வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியினர் துல்லியமாக பந்துவீசினர்.
இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து வங்கதேசம் திணறியது. அடுத்து இறங்கிய லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 138 ரன்னிலும், மெஹிதி ஹசன் 78 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 6 விக்கெட்டும், மீர் ஹம்சா, ஆகா சல்மான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 12 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகா சல்மான் 47 ரன்னும், முகமது ரிஸ்வான் 43 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டும், நஹித் ரானா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹசன், ஷட்மன் இஸ்லாம் ஜோடி நிதானமாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாகிர் ஹசன் 40 ரன்னில் வெளியேறினார். ஷட்மன் இஸ்லாம் 24 ரன்னிலும், கேப்டன் ஷண்டோ 38 ரன்னிலும், மொமினுல் ஹக் 34 ரன்னிலும் அவுட்டாகினர்.முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.