லீலாவதி கொலையாளிகள் யார்?… தமிழக CPM VS புதுவை CPM!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 9:19 pm

லீலாவதி கொலையாளிகள் யார்?… தமிழக CPM VS புதுவை CPM!

கம்யூனிஸ்டுகளைப் பற்றிய பொது மக்களின் மதிப்பீடு 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் தற்போது இல்லை என்று கூறுவது உண்டு. அதனால்தான் மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் ஆட்சியை இழந்து தற்போது கேரளாவில் மட்டும் ஓரளவு மக்கள் ஆதரவுடன் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.

ஊருக்கு ஒரு கொள்கை, ஆளுக்கு ஒரு கூட்டணி என்ற நிலைப்பாட்டை பின்பற்றுவதால் கம்யூனிஸ்டுகளின் மதிப்பு அடியோடு சரிந்து வருகிறது என்பதும் உண்மை.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசும் இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் இதே அணியில்தான் இருக்கின்றன. ஆனால் பக்கத்து மாநிலமான கேரளாவில் எலியும், பூனையாக சண்டை போடுகின்றன. தமிழகத்தை போலவே மேற்கு வங்கத்திலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளன.

நமது இன்னொரு பக்கத்து மாநிலமான புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அந்த அணியில் காங்கிரசும் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, புதுவையில் தற்போது மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு தனது ஆட்டத்தை ஆடத் தொடங்கி இருக்கிறது.

சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 23ம் தேதி அன்று மதுரை மாநகராட்சியின் வில்லாபுரம் 59வது வார்டு கவுன்சிலரான 40 வயது லீலாவதி திமுகவினரால்
பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழக வரலாற்றிலேயே அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்ட முதல் பெண் கவுன்சிலர் என்ற வரிசையிலும் அவர் இடம் பிடித்தார்.

1996 அக்டோபரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலராக பதவியேற்றவுடன், லீலாவதி தனது வார்டுக்கு குழாய் மூலம் தண்ணீரைக் கொண்டு வர
தீவிர முயற்சி மேற்கொண்டார். அப்போது குடிநீர் மாபியாக்களால் அதிக விலைக்கு விற்கப்படும் லாரி தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மார்க்சிஸ்ட் கவுன்சிலரான அவர் தீர்மானித்து அதில் வெற்றியும் கண்டார். இந்த நிலையில்தான் இலவச குடிநீர் விநியோகத்தின் முறையான திறப்பு விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அதாவது 1997 ஏப்ரல் 23ம் தேதி லீலாவதி திமுகவினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படி ஏழை, விளிம்பு நிலை மக்களுக்காக திமுகவினரிடம் தனது இன்னுயிரை இழந்த லீலாவதியின் 26-வது நினைவஞ்சலி தினம் தான் தற்போது திமுக தலைமைக்கு குடைச்சலை கொடுக்கும் விவகாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

லீலாவதியின் நினைவு நாளையொட்டி தமிழக மார்க்சிஸ்ட் தனது எக்ஸ் வலைத்தள பதிவில், “தியாகிகள் புதைக்கபடுவதில்லை… விதைக்கப்படுகிறார்கள்… தோழர் லீலாவதியின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலும் ஆயிரம் ஆயிரமாய் லீலாவதிகள் உருவாகிக் கொண்டிருப்பார்கள். தியாக தீபம் தோழர் கே.லீலாவதி நினைவு தினம்!” என்று குறிப்பிட்டு இருந்தது.

அதேநேரம் புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “இந்த நினைவு நாளில், அர்ப்பணிப்புள்ள மதுரை CPM மாநகராட்சி கவுன்சிலரும், தமிழ்நாடு CPM இன் முக்கியத் தலைவருமான தோழர் K. லீலாவதியின் நினைவைப் போற்றுகிறோம். 1997 ஏப்ரல் 23ம் தேதி அன்று, தண்ணீர் டேங்கர் மாஃபியாவை எதிர்த்ததற்காக திமுக உறுப்பினர்களால் அவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்” என்று கூறப்பட்டிருந்தது.

தமிழக மார்க்சிஸ்ட் லீலாவதியின் கொலையை மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தாலும் கூட அதைச் செய்தவர்கள் யார் என்பதை துணிச்சலுடன் பதிவிடவில்லை.

இதனால் தமிழக மார்க்சிஸ்ட் கோழைத்தனமாக பதுங்கி விட்டது. ஒருவேளை அவர்கள் மௌன விரதம் மேற்கொள்கிறார்களோ? என்று சமூக ஊடகங்களில் கேலியாக விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

அதேநேரம் திமுக கூட்டணியில் புதுச்சேரி மார்க்சிஸ்ட் இடம் பெற்று இருந்தாலும் கூட இந்தக் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் திமுகவினர்தான் என்ற உண்மையை போட்டு உடைத்துவிட்டது. இதனால் புதுச்சேரியில் இருக்கும் தெம்பு, திராணி தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

“கடந்த ஏழு ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நீடித்து வரும் மார்க்சிஸ்ட் வர வர மதிமுக போல ஆகிவிட்டது. அக் கட்சியின் போராட்ட குணமே நீர்த்துப் போய்விட்டது. ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதெல்லாம் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான். ஆனால் ஆட்சிக்கு வந்து விட்டால் அப்படியே சரணாகதி ஆகிவிடுகிறார்கள்” என்று அரசியல் விமர்சகர்கள் தமிழக மார்க்சிஸ்ட் பற்றிய சந்தர்ப்பவாதத்தை சுட்டிக்காட்டுகிறார்கள்.

“இதற்கு பின்னணி காரணங்கள் பல உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியபோது அதற்கு முதலில் மார்க்சிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி மாதம் ஒருமுறை மின் அளவு கணக்கீடு எடுக்கும் முறையை உடனடியாக தொடங்கவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தது. ஆனால் மறுநாளே திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கடுமையாக சாடி ஒரு பக்க கட்டுரையை வெளியிட்டது.

அதன் பிறகு மின் கட்டண உயர்வு பற்றி தமிழகத்தில் மார்க்சிஸ்ட் வாயே திறப்பதில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு 40 கோடி ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 கோடி ரூபாய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும்,10 கோடி ரூபாய் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் கொடுத்திருக்கிறோம் என்ற தகவலை தெரிவித்து இருந்தது.

இதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவது போல எங்களிடமே தேர்தல் நிதி வாங்கிவிட்டு எங்கள் ஆட்சியையே குறை சொல்கிறீர்களா?…என்று பதிலடி கொடுப்பது போல முரசொலியில் திமுக தலைமை கண்டிப்பு காட்டியது, என்கிறார்கள்.

அதேபோல 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவிடமிருந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏதாவது நன்கொடை வாங்கினவா?…என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் போதுதான் தெரியவரும்.

இப்படி தமிழகத்தில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக கொடுக்கும் தேர்தல் நிதியை நம்பியே கட்சியை நடத்துவதால் 1997 ம் ஆண்டு மதுரை மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியை வெட்டிக்கொலை செய்தது, திமுகவினர்தான் என்பதை தமிழக மார்க்சிஸ்ட் எப்படி வெளிப்படையாக சொல்லும், என்று எதிர்பார்க்கலாம்?

குடிநீர் கிடைக்காமல் அல்லல்பட்டு வந்த தனது பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்காக போராடி உயிர் துறந்த கவுன்சிலர் லீலாவதியின்
நினைவஞ்சலி பதிவில் தமிழக மார்க்சிஸ்ட் “லீலாவதியின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலும் ஆயிரம் ஆயிரமாய் லீலாவதிகள் உருவாகிக் கொண்டிருப்பார்கள்” என்று குறிப்பிட்டு இருப்பதே மிகப் பெரிய விஷயம். அதேநேரம் எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து பேசும் மார்க்சிஸ்ட் இன்றைய இளைய தலைமுறையினருக்கு லீலாவதியின் கொலையாளிகள் யார் என்பது பற்றி எதுவும் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? என்பதுதான் புரியவில்லை.

முன்பெல்லாம் ரயில், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நின்று கொண்டு அப்பகுதியில் போவோர், வருவோர் எல்லோரிடமும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தோழர்கள் சிகப்பு நிற டப்பா உண்டியல் ஒன்றை வைத்துக்கொண்டு கட்சிக்காக நிதி திரட்டுவதை நிறைய பார்த்திருக்கலாம். தற்போது அது போன்ற காட்சிகள் மிகவும் அபூர்வமாகிவிட்டன. இதற்குக் காரணம் இப்போது புரிகிறதல்லவா?…திமுகவிடமிருந்து வஞ்சகம் இல்லாமல் போதிய தேர்தல் நிதி கிடைக்கும்போது நாங்கள் ஏன் யாரிடமும் கையேந்த வேண்டும்?… என்ற எண்ணம் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் எப்போதோ வந்துவிட்டது.

இனி ஒரு காலத்திலும் இந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறப்போவதில்லை என்பது நிச்சயம். ஒருவேளை மதிமுகவின் நிலையைப் போல நமது கட்சியும் ஆகி விடுமோ என்ற அச்சம் வந்தால் மட்டுமே திமுக கூட்டணியை விட்டு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இந்த லட்சணத்தில்தான் பிற கட்சிகளை பார்த்து சிலரின் அடிமைகளாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்று மார்க்சிஸ்ட் தோழர்கள் கிண்டலும், கேலியும் செய்கின்றனர். அதேபோல தங்களிடம் பல அடிமை கட்சிகளை வைத்துக்கொண்டு திமுகவும் இதை பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுவும் சிந்திக்க வைக்கும் விஷயமாகத்தான் உள்ளது!

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1517

    0

    0