தமிழக தலைவர் பதவி யாருக்கு?…உச்சகட்ட கோஷ்டி பூசலில் தவிக்கும் காங்.!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 9:12 pm

தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகிக்கும் கே எஸ் அழகிரிக்கு பதிலாக இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் வேறொருவரை, நியமிப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே எம்பிக்கள் ஜோதிமணி, டாக்டர் செல்லகுமார், மாணிக்கம் தாகூர் மற்றும் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகிய ஐவரும் போட்டிக்களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் சில நாட்களுக்கு முன்புசெய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக காங்கிரஸ் தலைவராக என்னை நியமித்தால் மிகுந்த சந்தோஷம் அடைவேன்” என்று தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப டெல்லியில் மேலிட தலைவர்களை சைலண்ட்டாக சந்தித்து, அதற்கான காய் நகர்த்தல்களை அவர் தொடங்கியும் விட்டார். குறிப்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை இரு தினங்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து இது தொடர்பாக வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன், தமிழக காங்கிரசின் முக்கியத் தலைவர்களை கார்த்தி சிதம்பரம் தரப்பினர் டெல்லிக்கு அழைத்துச் சென்று மேலிட மூத்த தலைவர்களையும், சோனியா குடும்பத்தினரையும் சந்திக்க வைத்தனர்.

அப்போது, அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மாற்றப்பட்டால், தங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவேண்டும். இல்லையென்றால் கார்த்தி சிதம்பரத்துக்கு அதை கொடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதில் துடிப்பாக இருக்கும் கார்த்தி சிதம்பரம் சோனியா குடும்பத்தினரை, அதற்கு சம்மதிக்க வைக்கும் பணியில் மீண்டும் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

இதற்காக கடந்த 11ம் தேதி டெல்லியில் பிரியங்காவை சந்தித்த அவர், அடுத்ததாக தன்னுடைய தந்தை சிதம்பரத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இது தொடர்பாக சந்தித்து பேசவும் வைத்தும் விட்டார். அவர் வாயிலாக ராகுலையும் தனக்கு ஆதரவாக திருப்பி இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

தெலுங்கானாவில் இளைஞர் ரேவந்த்ரெட்டியை காங்கிரஸ் தலைவராக நியமித்து, ஆட்சியைப் பிடித்தது போல, தமிழகத்திலும் இளைஞரான கார்த்தியை தலைவராக நியமிப்பதன் மூலம் கட்சி வேகமாக வளருவதோடு, தமிழகத்தில் காங்கிரஸ் புதிய எழுச்சியும் பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கேவிடம் அப்போது ப சிதம்பரம் விளக்கமாக கூறி இருக்கிறார்.

இதையடுத்து, ‘காங்கிரஸ் செயற்குழு இது குறித்து விவாதிக்கும்போது, கார்த்திக்கு ஆதரவாக ராகுலிடம் கருத்து தெரிவிப்பதாக மல்லிகார்ஜுன கார்கே சிதம்பரத்திடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விரைவில் புதியவர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற செய்தி காங்கிரஸ் வட்டாரத்தில் மீண்டும் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கிவிட்டது.

அதேநேரம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஒரு போதும் கார்த்தி சிதம்பரத்துக்கு சோனியாவும், ராகுலும் கொடுத்து விடக்கூடாது என்று ஈ வி கே எஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், கே வி தங்கபாலு, செல்வப் பெருந்தகை எம் எல் ஏ ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் கூறுவது இதுதான்: கார்த்தி சிதம்பரம் எம் பி யை, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு இணையாக கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் வலிமையான எதிர்க்கட்சியாக இருந்தது. சந்திரசேகர ராவ் ஆட்சியில் நடந்த ஊழல்களும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற சாதகமாக அமைந்தது. ரேவந்த் ரெட்டியும் கடுமையாக உழைத்தார். அதனால் பலன் கிடைத்தது.

ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற ஒரு சூழல் நிலவே இல்லை. இண்டியா கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள திமுகவின் ஆட்சிக்கு எதிரான அலை எதுவும் இங்கே வீசவில்லை.

மேலும் நடுநிலையோடு பேசுகிறேன் என்று கூறி கார்த்தி சிதம்பரம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை உருவாக்கி விடுவார். அது திமுகவுடன் நாம் அமைத்துள்ள கூட்டணியை வெகுவாக பாதிக்கும்.

மிக அண்மையில் கூட திமுக எம் பி தமிழச்சி தங்கபாண்டியனை தேவையின்றி வம்புக்கு இழுத்து இரு கட்சிகளுக்கும் இடையே மோதலை உருவாக்கப் பார்த்தார்.

எனவே அவரை நம்பி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஒப்படைத்தால் எந்த ஒரு பலனும் ஏற்படாது. வேண்டுமானால் அவருடைய தந்தையான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஏதாவது அனுகூலம் கிடைக்கலாம்.

இப்படி தமிழக காங்கிரசுக்குள்ளேயே கார்த்தி சிதம்பரத்துக்கு பலமான எதிர்ப்பு வலுத்திருக்கிறது.

“தமிழக காங்கிரசில் நிலவும் உச்சகட்ட கோஷ்டி பூசலை, மாநிலத் தலைவர் பதவி ஏற்படுத்தி விட்டிருந்தாலும் கூட கார்த்தி சிதம்பரம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அதனால் அப்பதவி அவருக்கே கிடைக்கும் என உறுதியாக சொல்லலாம்” என்று டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் சோனியா, ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுனா கார்கே நால்வரும் திமுகவிடம் 2024 தேர்தலில் 15 இடங்களுக்கு குறையாமல் கேட்டுப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் அவரோ இதை தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாரே தவிர, திமுக தலைமையின் காதுகளுக்கு கொண்டு சென்றதாக தெரியவில்லை. 2019 தேர்தலில் திமுக ஒதுக்கிய 9 தொகுதிகள் கிடைத்தாலே மிகப் பெரிய விஷயம் என்ற மனப்பான்மையில் அவர் இருந்து வருவதாக தெரிகிறது.

மேலும் தற்போது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே திமுகவை விட்டால் நமக்கு வேறு கதி கிடையாது என்ற நினைப்பில் இருப்பவர்கள்.

ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி, இரண்டு இளைஞர்கள் உள்ளே நுழைந்து வண்ண புகை குண்டுகளை வீசி எம்பிக்களை பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கிய நிகழ்வுக்கு பின்பு அதை மத்திய பாஜக அரசுக்கு எதிரான தேர்தல் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

ஆனால் இது இண்டியா கூட்டணிக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை இப்போதே உறுதியாக கூற இயலாது. என்ற போதிலும் இதையும் ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி திமுகவிடம் 15 தொகுதிகளை எப்படியும் பெற்று விடவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

ஆனால் ஈ வி கே எஸ் இளங்கோவன், கே வி தங்கபாலு, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், செல்வப் பெருந்தகை போன்றோர் திமுக கொடுக்கும் தொகுதிகளை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நல்லது, ஏழு தொகுதிகள் தந்தாலும் சரி அதை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறுகிறார்கள்.

ஆனால் திமுக உடனேயே தொடர்ந்து மென்மையான, சமரச போக்கை கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலை உருவாகி விடக் கூடும் என்று டெல்லி தலைமை அஞ்சுகிறது. அதனால் திமுக அரசு, என்ன செய்தாலும் அதை அப்படியே ஆதரித்து விடாமல், அதில் உள்ள நிறை குறைகளை சுட்டி காட்டினால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் எழுச்சி பெறும் நிலை உருவாகும் என்று சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் உறுதியாக நம்புகின்றனர்.

இதனால் நடுநிலையாக சிந்தித்து, துணிச்சலாக கருத்து தெரிவிக்கும் கார்த்தி சிதம்பரம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

தமிழக காங்கிரஸில் இனி அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 362

    0

    0