அமைச்சராக யாரை நியமிக்க வேண்டும் என்பது எனது உரிமை… ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!!
Author: Babu Lakshmanan30 June 2023, 9:46 pm
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். மாநில அரசு மற்றும் முதல்-அமைச்சரின் பரிந்துரையின்றி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி நீக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரை நீக்குவதற்கு கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என கூறப்பட்டுள்ளது. கவர்னர் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.