ஆட்சியர்களிடம் விசாரணை செய்யாமல் யாரிடம் செய்வது? அதிகாரிகளுக்கு பதட்டமோ? நாராயணன் திருப்பதி காட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 November 2023, 10:51 am
ஆட்சியர்களிடம் விசாரணை செய்யாமல் யாரிடம் செய்வது? அதிகாரிகளுக்கு பதட்டமோ? நாராயணன் திருப்பதி காட்டம்!!
பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறையை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருப்பது நகைப்புக்குரியது.
மணல் திருட்டில் கொள்ளையடித்த பணத்தை சட்ட விரோத பரிமாற்றம் செய்தது குறித்து தான் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. பூமியை சுரண்டி, சுரண்டி இயற்கை வளத்தை கொள்ளையடித்தவர்களின் செயல்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தான் தெளிவாக, புள்ளி விவரத்துடன் கூற முடியும். அவர்களிடம் விசாரணை செய்யாமல் வேறு யாரிடம் விசாரணை மேற்கொள்வது? சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கையாகவே அரசின் இந்த நகர்வு உணரப்படும்.
மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து விசாரணை செய்வது முறையல்ல என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறு. சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றால் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் விசாரிக்க பாராளுமன்றம் இயற்றிய சட்டப்படி அதிகாரம் உள்ளது.
சுரங்கம் மற்றும் கனிம பிரச்சினை மாநில அரசு சம்பந்தப்பட்டது, அதில் அமலாக்கத்துறையினர் தலையிட முடியாது என்ற வாதம் முற்றிலும் தவறு. விசாரணை சட்டவிரோத பணப்பரிமாற்றம் எப்படி, எங்கே, யாரால் நடைபெற்றது என்பதை கண்டறிய தொடர்பான அதிகாரிகளே சாட்சி. ஆகையால் இந்த விவகாரத்தில் ‘மாநில சுயாட்சி, மாநில உரிமை’ என்ற ஆயுதத்தை கொண்டு வருவது விழலுக்கிறைத்த நீர்.
அதிகார துஷ்பிரயோகத்தை செய்வதன் வாயிலாக, மாநில நிர்வாகத்தை சீர்குலைக்க அழுத்தம் கொடுக்கின்றனர் என்று புலம்புவது தேவையற்றது. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், குவாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததால் தான் கனிமவளக் கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதை தான் இந்த விசாரணை தெளிவுபடுத்தும்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பி, மணல் குவாரி பற்றிய தகவல்களை கேட்பது சட்டத்திற்கு முரணானது என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்திய ஆட்சி பணியில் (IAS) உள்ளவர்கள் என்பதை மறந்து விட்டு அவசரம் அவசரமாக அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பது அரசியல்வாதிகளின், தொடர்புடைய அதிகாரிகளின் பதட்டத்தையே உணர்த்துகிறது என நாராயணன் திருப்பதி கூறியள்ளார்.