அடுத்த கோவை மேயர் யார்? போட்டி போடும் நிர்வாகிகள்.. சிக்னல் கொடுத்த திமுக : அறிவிக்கும் உதயநிதி!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2024, 4:59 pm
தமிழகத்தில் சென்னையை அடுத்த மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் அளித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை மாநகராட்சி, மேயர் கோவை மாநகராட்சியில், மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில், 97 பேர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும், மூன்று பேர் அ.தி.மு.க கவுன்சிலர்கள்.
கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க வைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி தேர்தலில் கோவையில், 19 ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளார்.
இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க வில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது.
இதற்கு அவரது கணவர் ஆனந்த குமாரின் தலையீடு மிக முக்கிய காரணம் என்று தி.மு.க வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. இதனால், தி.மு.க கவுன்சிலர்கள் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிதாக நம்பிக்கை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், தி.மு.க கட்சி கவுன்சிலர்களுக்கும் இவருக்கும் இடையில் உட்கட்சி பூசல் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து கட்சி தலைமை மேயர் பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது.
கடந்த 2 நாட்களாக மேயர் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக அதிகாரப்பூர்வ தகவலை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கோவையில் அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் திமுகவினர் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.
குறிப்பாக மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை, கிழக்கு மண்டலத் தலைவர் இளஞ்செல்வி, மத்திய மண்டலத் தலைவர் மீனா, நிலைக்குழு தலைவர்கள் மாலதி, சாந்தி ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே குறிப்பிட்ட சாதியினருக்குத்தான் பதவி வழங்குவதாக திமுக தலைமையிடம் நிர்வாகிகள் புகார் கூறியிருக்கின்றனர். இதனால் இம்முறை மாற்று சமுதாயத்தினருக்கு மேயர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இது குறித்து திமுகவினர் உதயநிதிக்கு தகவல் அனுப்பியுள்ளதால், இந்த முறை யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்பது குறித்து உதயநிதி விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.