CM ஸ்டாலின் திடீர் டென்ஷன் ஏன்? அமைச்சர்களுக்கு எச்சரிக்கை!….
Author: Udayachandran RadhaKrishnan6 August 2023, 6:21 pm
முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக மிக அண்மையில் நடத்திய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியது அமைச்சர்களின் வயிற்றிலும் புளியை கரைத்து விட்டு இருக்கிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகத்தான் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது என்றாலும் கூட கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் நடந்து வரும் மோதலை வெளிச்சம் போட்டு காட்டும் ஒன்றாகவே அது அமைந்தும் விட்டது.
முதலமைச்சரின் மனக்குமுறல்
ஸ்டாலின் திமுகவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இப்படி பேசி இருப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு சென்னையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்திலும் அவர் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்து இருந்தார்.
அப்போது ஸ்டாலின் பேசும்போது,‘‘ஒரு பக்கம் திமுக தலைவர்; இன்னொரு பக்கம்
தமிழக முதலமைச்சர் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப்போல் இருக்கிறது என்நிலைமை. இந்த சூழலில் இருக்கும் என்னை, மேலும் துன்பப்படுத்துவது போல் கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால், நான் என்ன சொல்வது?
அமைச்சர்களால் தூக்கம் வரவில்லை
நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்த புது பிரச்சினையையும் உருவாக்கிஇருக்கக்கூடாதே என்ற நினைப்புடன்தான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் ஆக்கி விடுகிறது. உங்கள் செயல்பாடுகள் கட்சிக்கும் உங்களுக்கும் பெருமை தேடித் தருவதுபோல் அமைய வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்துவதாக அமையக்கூடாது. பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும், ஏளனத்துக்கும் ஆளானது’’ என்று அப்போது தனது மன வேதனையை கொட்டித் தீர்த்து இருந்தார்.
இதற்கு முக்கிய காரணம் திமுக பொதுக்குழு கூடுவதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் பெண்களுக்கான இலவச பேருந்தை ‘ஓசி’ என்று அமைச்சர் பொன்முடி கிண்டலாக கூறியது, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த எம்பி ஒருவரை நிற்கவைத்து பேசியது மீதான விமர்சனம், இந்துக்கள் குறித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு, மூத்த அமைச்சர் துரைமுருகனின் நையாண்டி பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது.
ஆனால் கட்சியின் தலைவரான ஸ்டாலின் இதுபோல தனது ஆதங்கத்தை வெளிப்படையாக கூறி நொந்து கொண்டு முழுமையாக 10 மாதங்கள் கூட ஆகவில்லை.
அட்வைஸ் செய்தும் அத்துமீறும் திமுகவினர்
அதற்குள் திமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் அவரை இன்னொரு முறை பொங்கியெழ வைத்துவிட்டனர். ஏனென்றால் அவர் முதல் முறையாக மறைமுக எச்சரிக்கை விடுத்ததை திமுகவினர் யாருமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டது போலவே தெரியவில்லை.
இன்னும் சொல்லப் போனால் முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி அட்வைஸ் செய்தபின்புதான் அத்து மீறல் நடவடிக்கைகள் முன்பிருந்ததை விட பல மடங்கு
அதிகரித்து தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குறிப்பாக பெண்களிடம் திமுக நிர்வாகிகள் நடந்துகொள்ளும் விதம் அவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளன என்பதை உளவுத்துறை மூலம் ஸ்டாலின் தெரிந்து கொண்டும் இருப்பார்.
அதனால்தான் என்னவோ காணொலியில் பேசும்போது குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளை மட்டும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
கொந்தளித்த ஸ்டாலின்
ஸ்டாலின் பேசும்போது, “ஒரு சில மாவட்டங்களில் நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்ற தகவல் எனக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இது உங்களுக்கும் கட்சிக்கும் நல்லதில்லை. அதுவும் குறிப்பாக பொது மேடைகளில் சிலர் சண்டை போடும் காட்சிகளை நானே வாட்ஸ் அப்பில் பார்க்கிறேன்.
தென்காசியில், மாவட்டச் செயலாளருக்கும் ஒன்றியப் பெருந்தலைவருக்குமான மோதல்-எல்லா மீடியாக்களும் இருக்கும்போதே, ஆர்ப்பாட்ட மேடையிலேயே நடந்திருக்கிறது. அதன் பிறகுதான், மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டு இருக்கிறார்.
அமைச்சர் மஸ்தான் இருக்கும் மாவட்டத்தில், நேருக்கு நேராக மோதல் ஏற்பட்டு இருக்கிறது. தன்னைக் கேள்வி கேட்கிறவர்களுக்கு மைக்கை வைத்துக்கொண்டே அமைச்சர் பதில் சொல்கிறார். இதை எல்லா சேனல்களும் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி பதிவு செய்கிறார்கள் என்பதே சில அமைச்சர்களுக்கு தெரியவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
அவர் இப்படி பேசும்போது சில இடங்களில் பதற்றமாக இருந்ததையும் காண முடிந்தது.
தென்காசியில் பொதுமேடையில் மோதல்
அண்மையில் தென்காசியில் திமுக மகளிரணியினர் நடத்திய மணிப்பூர் கலவரங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சிவ பத்மநாபனுக்கும் மாவட்ட ஊராட்சித் தலைவரான தமிழ்ச்செல்விக்கும் இடையே நடந்த மோதல்தான் திமுகவின் இமேஜை டோட்டலாக காலி செய்வதுபோல இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சிவ பத்மநாதன் கண்டன உரையாற்றினார். அப்போது குறுக்கிட்ட தமிழ்செல்வி “தென்காசி திமுகவில் உங்களால் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. அதனால் மணிப்பூர் சம்பவம் குறித்து பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை” என மேடையிலேயே மைக்கில் கொந்தளித்தார்.
உடனடியாக மைக் பறிக்கப்பட்டு ஆர்ப்பாட்ட மேடையில் இருந்து தமிழ்ச்செல்வியும், அவருடைய ஆதரவாளர்களும் அகற்றப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அத்தனை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தேசிய அளவில் ஆங்கில டிவி சேனல்களிலும் பரபரப்பு செய்தியாக வீடியோ காட்சியுடன் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்தே சிவ பத்மநாதன்
மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். சரி, இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன?….
அரசியல் விமர்சகர்கள் கருத்து
“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உண்மைதான் என்பதை கூறும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி சென்னையில் கனிமொழி எம்பி பங்கேற்ற திமுக கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்த ஒரு பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினர் இரண்டு பேர் இந்தக் கொடூர நிகழ்வு நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மிக அண்மையில், அதாவது கடந்த 4-ம் தேதி இரவு சென்னை வளசரவாக்கம் திருவள்ளுவர் சாலையில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவின் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த பெண் போலீஸ்காரர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற அவலங்களுக்கு திமுக அரசு முதலில் முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி கூறியது போல தென்காசியில் மட்டுமல்ல, மாநில முழுவதும் இதுதான் நடக்கிறது என்ற எண்ணம்தான் தமிழக பெண்களிடம் ஏற்படும்.
அமைச்சர் செஞ்சி மஸ்தானால் தலைவலி
அமைச்சர் செஞ்சி மஸ்தானைப் பொறுத்தவரை கட்சி நிர்வாகியிடம் அவர் கார சாரமாக விவாதித்த விஷயமெல்லாம் சாதாரணமான ஒன்றுதான். அது பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மே மாதம் கள்ளச்சாராயத்துக்கு பலியான 14 பேர் விவகாரத்தில் திண்டிவனத்தை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவரும் மூன்று முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராய வியாபாரியுமான மரூர் ராஜாவுக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பு புகைப்படங்களுடன் வெளியுலகத்துக்கு தெரிய வந்து திமுகவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியது.
அந்த கள்ளச்சாராய வியாபாரிக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பிறந்தநாள், திருமண நாள் என்று பலர் என்னிடம் வாழ்த்துப் பெற வருவார்கள்.
அப்படி வந்தவர்களில் மரூர் ராஜாவும் ஒருவராக இருக்கலாம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் மறுப்பு தெரிவித்தார். அவர் இப்படி கூறியதும் பல்வேறு நிகழ்வுகளில் இருவரும் சந்தித்துக் கொண்ட காட்சிகளை திண்டிவனத்தை சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் உடனடியாக வெளியிட்டு அமைச்சரை மட்டுமின்றி, திமுக தலைமையையும் நிலைகுலைய வைத்தனர்.
தேர்தல் நேரத்தில் கவனம் தேவை
அப்போதே செஞ்சி மஸ்தானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவில் வலுத்தது. ஆனால் ஏற்கனவே ஆவடி நாசரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில் இவரையும் நீக்கினால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி முதலமைச்சர் ஸ்டாலின் அந்த முடிவை கைவிட்டு இருக்கலாம்.
இனியும் அதுபோல ஒரு வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே செஞ்சி மஸ்தான் பெயரை குறிப்பிட்டு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அவரை எச்சரித்து இருக்கலாம். இது திமுகவின் சீனியர் அமைச்சர்களுக்கும் பொருந்தும்.
என்னதான் மகளிர்க்கு மாநகர சாதாரண பேருந்துகளில் இலவச பயணம், ஒரு கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தேர்தலின்போது திமுகவுக்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்தலாம். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை
பற்றி சிந்திக்க முடியும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுவும் உண்மைதான்!