தமிழகத்தை பாஜக குறி வைப்பது ஏன்?… PK போடும் தேர்தல் கணக்கு!
Author: Udayachandran RadhaKrishnan12 March 2024, 9:23 pm
தமிழகத்தை பாஜக குறி வைப்பது ஏன்?… PK போடும் தேர்தல் கணக்கு!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களை விட பிரதமர் மோடி தமிழகத்தை குறி வைத்து பிரசாரம் மேற்கொள்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. மத்திய அரசின் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பது, பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை தமிழகத்திற்கு மோடி நான்கு முறை வந்து சென்று விட்டார்.
சென்னை, திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி என்று அவருடைய மின்னல் வேக பயணம் அமைந்திருந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பாஜகவின் அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் அமித்ஷா தேர்தலுக்காக இதுவரை இன்னும் தமிழகம் வரவில்லை என்பதுதான்.
அடுத்ததாக பிரதமர் மோடி இந்த மாதத்திற்குள் மேலும் நான்கு நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதேபோல
தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரல் மாதமும் அவர் இன்னும் சில முறை தமிழகம் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று என்றே சொல்லவேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் இரண்டு மூன்று முறை தென் மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டால் பாஜக மேலும் நல்ல வளர்ச்சி காணும்.
இந்த நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநிலத்தில் வலுவான கூட்டணியை அமைக்க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அனைவருமே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
டிடிவி தினகரனின் அமமுக, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அணி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி உள்ளிட்ட பல கட்சிகளை தமிழக பாஜக தனது கூட்டணிக்குள் கொண்டு வந்தும் விட்டது.
அதேநேரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்காக அண்ணாமலை எடுத்து வரும் முயற்சிகளும் குறிப்பிடத்தக்க அளவில் பலனை கொடுத்திருக்கிறது.
குறிப்பாக இளைஞர்கள், நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார், அதனால் இரட்டை இலக்கத்தில் பாஜக குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். 3 முதல் 6 தொகுதிகள் வரை பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேசிய ஊடகங்கள் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்புகளிலும் தெரிய வந்துள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் தெரியவரும். அதேநேரம் என்னதான் வலுவான கூட்டணியை பாஜக அமைத்தாலும் தமிழகத்தில் அந்த அணியால் 12 சதவீத வாக்குகளுக்கு மேல் பெறுவது கடினம். வேண்டுமானால் ஒரு சில தொகுதிகளில் அதிக பட்சமாக 15 சதவீதம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற இன்னொரு வாதமும் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான்,பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களை குறி வைத்து பாஜக தீவிர அரசியலை முன்னெடுத்து வருவது பற்றி சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அதில் பாஜகவின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் அவர் கூறி உள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்துவது எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கணித்துள்ளபிரசாந்த் கிஷோர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டிதான் இது.
அவர் கூறும்போது, “பாஜக தனது வட இந்திய பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது. 15, 20 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகாவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட்டது. ஆனால் இன்றும் பாஜகவை வட இந்திய கட்சி, இந்தி பேசும் மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் கட்சி என்றுதான் பேசி வருகிறோம்.
வடக்கில்தான் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்கள். தெற்கில் அப்படி ஒன்றும் இல்லை என்று பேச வேண்டாம். சீட் கணக்கை தூக்கி ஓரமாக வைக்கலாம். கடந்த சில வாரங்களில் தமிழகத்திற்கு அதிக முறை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டதை பார்த்திருப்பீர்கள். இதற்கு முக்கிய காரணம் அரசியல் மற்றும் உளவியல் ரீதியாக தங்கள் செல்வாக்கை பலப்படுத்த பாஜக விரும்புகிறது, என்பதுதான். இதற்கு பலனாக வெறும் 1 அல்லது 2 சதவீத வாக்குகள் கிடைத்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கிறது. தமிழ்நாட்டில் கால் பதித்தே ஆக வேண்டும் என்று முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறார்கள்
அதற்கு காரணம் திமுக அல்லது அதிமுகவில் ஏதேனும் வெற்றிடம் உருவாகி இருக்கலாம். இல்லையெனில் உட்கட்சி பூசலில் தளர்ந்து போயிருக்கலாம். இதனுடன் தென்னிந்தியாவில் வளர வேண்டும் என்ற நோக்கமும் பாஜகவை மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. வடக்கில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமெனில் உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் இல்லாமல் எப்படி சாத்தியப்படாதோ, அதுபோல தெற்கில் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள் இன்றி அரசியல் செல்வாக்கு பெற முடியாது.
அதிலும் தமிழகம் தென்னிந்தியாவின் நரம்பியல் மையமாக செயல்பட்டு வருகிறது. இதை மெட்ராஸ் என்று ஒருகாலத்தில் அழைத்து வந்தனர். மெட்ராஸின் சித்தாந்தம் படிப்படியாக படர்ந்து தற்போது ஒடிசா வரை நீண்டிருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்தை பிடிக்கவேண்டும் என்ற ஆர்வம் எந்த கட்சிக்குத் தான் இருக்காது? நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.
ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை எப்போது வேண்டுமானாலும் தலைகீழாக கவிழ்த்து விடலாம் என்று பாஜக கருதுகிறது. ஒருவேளை உத்தரப் பிரதேசத்திலும், பீகாரிலும் ஆட்சியை இழந்தால் அதை ஈடுசெய்ய ஆந்திராவும், தமிழ்நாடும்தான் தேவைப்படுகிறது. ஏனெனில் பலம் வாய்ந்த மாநிலங்களுக்கு இணையாக அதே பலம் கொண்ட மாநிலங்கள் மீது தான் அரசியல் கட்சிகளின் கவனம் இருக்கும். அது அரசியல் சிந்தாந்தத்திலும் சரி, சீட் எண்ணிக்கையிலும் சரி” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
“பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ள கருத்துக்களை கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதோ ஒரு கட்சியில் வெற்றிடம் உருவாக வாய்ப்பு உள்ளது என்று கூறுவதில் ஓரளவு உண்மை இருக்கவே செய்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“பிரசாந்த் கிஷோர் 2021 தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வெற்றி பெற காரணமாகவும் அமைந்தவர். அவர் எதிர்பார்த்தது போலவே தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தாலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் இருந்த ஆளுமை ஸ்டாலினிடம் இல்லை. கட்சியும் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அவர் மறைமுகமாக சுட்டி காட்டுகிறார்.
அதேபோல அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை எழுந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட விவாகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப் போராட்டம் நடத்துவதிலேயே இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது கட்சியை ஓரளவிற்கு வலுப்படுத்தி விட்டார் என்றே சொல்லவேண்டும்.
ஒருவேளை ஓபிஎஸ் ஒற்றைத் தலைமைக்கு ஒப்புக் கொண்டிருந்தால் அதிமுக முழு வலிமையோடு திமுக அரசு மீதான எதிர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அது நடக்காமல் போய்விட்டது. இப்படி பாஜகவை தமிழகத்தில் வளர்க்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அண்ணாமலை, ஓ பன்னீர் செல்வத்துக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
பிரசாந்த் கிஷோர் கணித்திருப்பது போல் தமிழகத்தில் ஓரிரு சதவீத வாக்குகள்தான் பாஜகவுக்கு அதிகரித்திருக்கும் என்பது தவறான மதிப்பீடாகவே தோன்றுகிறது. அண்ணாமலையின் அதிரடி அரசியலால் தமிழகத்தில் மூன்று சதவீதத்தில் இருந்த பாஜகவின் வாக்கு வங்கி 6 முதல் 7 சதவீதம் வரை உயர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.
இதனால்தான் 27 சதவீதத்துக்கும் குறையாத வாக்கு வங்கியை கொண்ட அதிமுகவை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அக் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் டெல்லி பாஜக மேலிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அண்ணாமலையோ அதிமுகவினர் மிகுந்த மரியாதை வைத்திருக்கும் மறைந்த தலைவர் அண்ணாவையும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் கேலியாக விமர்சித்ததும், தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி பேசியதும்தான் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறுவதற்கு முக்கிய காரணமே என்கிறார்கள்.
இதனால் அதிமுகவை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழகத்தில் பாஜக அபார வளர்ச்சி கண்டுள்ளது என்று பெருமிதப் பட்டுக் கொள்ளும் அண்ணாமலைக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஒரு அக்னி பரீட்சையாகவே அமையும்.
இதில் எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிகமான ரிஸ்க் இருக்கிறது. ஏனென்றால் ஒரேநேரத்தில் மத்திய பாஜக அரசுக்கும், மாநில திமுக அரசுக்கும் எதிராக தனி ஒரு நபராக போராட வேண்டிய நெருக்கடியான நிலை அவருக்கு உள்ளது. இது தவிர குறிப்பிட்ட சில தமிழ் டிவி செய்தி சேனல்கள் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்வதையும் காண முடிகிறது. இதையும் அவர் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்
எது எப்படியோ வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளால் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என்பது மட்டும் உறுதி!
0
0