ED அதிரடி வேகம் காட்டுவது ஏன்?… அசோக்குமாருக்கு வலைவிரிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan5 August 2023, 9:33 pm
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 64 லட்ச ரூபாய்
லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது, ஏனென்றால் முதல் 15 நாள் நீதிமன்ற காவலில் இருந்தபோதே கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட் வழங்கிய எட்டு நாள் கால அவகாசம் முடிந்துபோய் விட்டது என்ற செந்தில் பாலாஜியின் தரப்பு வாதத்தை சென்னை ஐகோர்ட்டின் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் ஏற்கவில்லை.
இதனால் மேல்முறையீட்டுக்காக சுப்ரீம் கோர்ட் சென்ற செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவுக்காக பிரபல வக்கீல்கள் கபில் சிபில், முகுல் ரோத்தகி இருவரும் ஆஜராகினர்.
10 நாளில் விசாரணையை முடித்த நீதிபதி
சென்னை ஐகோர்ட்டிலும் செந்தில் பாலாஜிக்காக இதே வக்கீல்கள்தான் ஆஜராகி தங்களது வாதங்களை மூன்றாவது நீதிபதி முன்பாக வைத்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், சுப்ரீம் கோர்ட் அளித்த 10 நாள் கால அவகாசத்திற்கு உள்ளாகவே விரைந்து விசாரணையை நடத்தி முடித்தார்.
அதுமட்டுமின்றி “செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை. மருத்துவ சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க EDக்கு உரிமை உண்டு. தன்னை குற்றமற்றவர் என சட்டத்தின் முன் செந்தில் பாலாஜிதான் நிரூபிக்க வேண்டும். அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல” என்று பரபரப்பு தீர்ப்பும் வழங்கியதுடன் மேகலா தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்தார்.
ஒரு மணி நேரத்தில் தீர்ப்பு
இதில் பாராட்டவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இருதரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதி கார்த்திகேயன் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தீர்ப்பை வாசித்து நீதித்துறையில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதுதான்.
அதேநேரம் இந்த வழக்கிற்கு சென்னை ஐகோர்ட்டின் மூன்றாவது நீதிபதி முன்னுரிமை அளித்து விசாரணை நடத்தி விரைவிலேயே தீர்ப்பை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட்டே இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கிற்கு 10 நாட்கள் வரை எடுத்துக்கொண்டதுடன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததும் சட்ட வல்லுனர்களால் வியப்பிற்குரியதொரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
மீண்டும் ED வைத்த செக்
இப்படி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நீடித்துக்கொண்டு போவதையும், இதனால் தீர்ப்பு தள்ளிப் போகும் வாய்ப்பு இருப்பதையும் முன்கூட்டியே உணர்ந்துகொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீண்டும் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் மூன்று நாட்கள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகியும், நிதி நிறுவன அதிபருமான சாமிநாதன், கோவை டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்து பாலன், கோவையில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் டயர் ஷோரூம் நடத்தி வரும் காளியப்பன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும்
அசோக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு பிரமாண்ட பங்களா கட்டித்தரும் கோவை கட்டுமான நிறுவனம், அந்த பங்களாவில் பதிக்கப்படுவதற்காக வெளிநாட்டில் இருந்து விலைமதிப்பு மிக்க மார்பில் கற்களை இறக்குமதி செய்த கரூர் நிறுவனம் போன்ற பத்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 18 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனையில் ஈடுபட்டனர். சில இடங்களில் 24 மணி நேரத்திற்கு மேலாகவும் ரெய்ட் நீடித்தது. இந்த மூன்று நாள் வேட்டையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது.
மேலும் சுமார் 250 கோடி ரூபாய் அளவிற்கு இதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதையும் ED அதிகாரிகள் கண்டுபிடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சோதனை நடத்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவர்களும் கைதாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சோதனைகளில் பல ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை ஈடுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாலா பக்கமும் விரித்த வலை
தங்களது காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளிக்கும் என்ற தீர்மானத்துடன் கூடுதல் ஆதாரங்களை திரட்டும் விதமாகவே அமலாக்கத்துறை இந்தத் திடீர் ரெய்டில் இறங்கியது என்கிறார்கள்.
அதாவது எந்த விதத்திலும் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி தப்பிக்க முடியாத அளவிற்கு அமலாக்கத்துறை நாலா பக்கமும் அவருக்கு வலை விரித்துள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியாத சூழல் ஏற்படலாம் என்பதால் அவரை சென்னை புழல் சிறையில் இருந்து, டெல்லி திகார் சிறைக்கு மாற்றும் கோரிக்கையை வைப்பதற்காகவும் வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் விதமாகவே தொடர்ந்து மூன்று நாட்கள் கரூர், நாமக்கல், கோவை, வேடசந்தூர் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது என்ற பேச்சும் அடிபடுகிறது. ஆனால் அரசியல் சட்ட வல்லுநர்களின் பார்வையோ வேறுவிதமாக உள்ளது.
3வது சோதனைதான் முக்கியம்
“மிக அண்மையில் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை நடத்திய சோதனைதான் மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ள நிலையில், அவருடைய தம்பி அசோக்குமாரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவருவதற்கான அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது” என்று அவர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் இதுவரை அமலாக்கத்துறை முன்பாக அசோக் குமார் ஆஜராகவில்லை. அவருக்கு அளித்த காலக்கெடு முடிந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது.
தவிர அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அதுகுறித்து மத்திய உளவுத்துறை தீவிர விசாரணையில் இறங்கி இருப்பதால் அதை எளிதில் கண்டுபிடித்து தங்களுக்கு தெரிவித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அமலாக்கத்துறை இந்த சோதனைகளில் இறங்கி இருக்கிறது.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய், சட்டவிரோத பார்களுக்கு நேரடி மது விநியோகம் மூலம் கிடைத்த முறைகேடான வருவாய் போன்றவை குறித்த ஆதாரங்களை திமுக நிர்வாகி சாமிநாதன், டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்து பாலன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் ஆகியோர் வீடுகளில் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் முழுமையாக கறந்து விட்டனர். கடந்த ஓராண்டில் மட்டும் இவர்கள் மூவர் மூலம் மட்டுமே ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதையும் அமலாக்கத்துறை உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆட்டம் காண வைத்த ஆடம்பர பங்களா
அதேநேரம் கரூரில் அசோக்குமார் தனது மனைவி பெயரில் கட்டி வரும் ஆடம்பர பங்களாவின் கட்டுமானத்துக்கு மட்டுமே குறுக்கு வழியில் சம்பாதித்த 250 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதுதான் அவருக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அண்ணன், தம்பி இருவரையுமே டெல்லிக்கு திகார் சிறைக்கு கொண்டு செல்ல அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக கூறப்படுவதும் உண்மைதான்.
ஒருவேளை செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும் கூட அதை எளிதில் கையாண்டு அவருக்கு மேலும் கடும் நெருக்கடி அளிக்க அமலாக்கத் துறை தயாராகவும் உள்ளது.
குறிப்பாக செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரமாண்ட வீடு மற்றும் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கியதில் நடந்த முறைகேடு,
வீடு கட்டுவதற்கு விலை உயர்ந்த கட்டுமானப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை ஆகியவற்றின் மூலம் செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக் வைக்கும் வகையில்தான் அமலாக்கத்துறை
இந்த புதிய ரெய்டுகளை நடத்தி இருப்பதாக தெரிகிறது.
சிக்கியது டாஸ்மாக் முறைகேடு?
அதில் அவர்களுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் ஆதாரங்களும் சிக்கியுள்ளன என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கட்டாய வசூல், அரசு அனுமதி பெறாத பார்களுக்கு மது விநியோகம் செய்ததில் முறைகேடு ஆகியவற்றின் மூலம் சுமார் ஐந்து ஆயிரம் கோடி ரூபாய் வரை சட்டவிரோரத பண பரிவர்த்தனை நடந்திருப்பதையும், அதில் மேலும் சில அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதையும் அமலாக்கத்துறை மோப்பம் பிடித்துள்ளது. அந்த அமைச்சர்களும் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள்.
எப்படி பார்த்தாலும் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் சிக்கி தண்டனை பெறுவது உறுதியான ஒன்றாகவே தெரிகிறது” என்று அந்த அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமலாக்கத்துறை போட்டுள்ள பிளான் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!