ஊழல் குற்றச்சாட்டு உள்ள துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? தனிச்சலுகை அளிப்பது ஏன்? ராமதாஸ் கண்டனம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2024, 2:26 pm
ஊழல் குற்றச்சாட்டு உள்ள துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? தனிச்சலுகை அளிப்பது ஏன்? ராமதாஸ் கண்டனம்!!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தமது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும் கைது செய்யப்பட்டு, இடைக்கால பிணையில் வந்துள்ள அதன் துணைவேந்தர் ஜெகநாதன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.
முந்தைய காலங்களில் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த இராதாகிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரத்தில் மட்டும் அவருக்கு தனிச்சலுகை காட்டப்படுவது வியப்பளிக்கிறது.
மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்கான துணைவேந்தர் போன்ற உயர்பதவிகளில் அப்பழுக்கற்றவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
தலைமறைவாக உள்ள பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைவேந்தரும், பதிவாளரும் இல்லாத சூழலில் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.