புது வரவால் விசிகவில் வெடித்த சர்ச்சை?… பொதுத்தொகுதி ரகசியம் அம்பலம்… தமிழக அரசியல் களம் பரபர!…

Author: Babu Lakshmanan
20 February 2024, 8:09 pm
Quick Share

விசிகவில் மிக அண்மையில் இணைந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் அக்கட்சியில் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

20, 22 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்தவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு புதிதாக கட்சியில் சேர்ந்தவருக்கு அதுவும் 15 நாட்களே கூட ஆகாத நிலையில் அவருக்கு எப்படி துணைப் பொது செயலாளர் என்கிற மிகப் பெரிய பொறுப்பை வழங்கலாம் என்ற கிடுக்குப்பிடி கேள்வி விசிக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் விஸ்வரூபம் எடுத்தது.

எம்பி சீட்டுக்காக பணம் கைமாறியதா என பகீர் குற்றச்சாட்டையும் சிலர் முன்வைத்தனர். சமூக ஊடகங்களிலும் இது விவாதப் பொருளாக மாறியது.

இதனால் சூடான திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது, ஆதவ் அர்ஜுன் அவர்கள் நமது கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதையடுத்து, நமது வளர்ச்சியை விரும்பாத கொள்கைப் பகை முனையத்திலிருந்து, விமர்சனங்கள் என்னும் பெயரில் ஒரு பொருட்டுமில்லாத உளறல்கள் சமூக ஊடகங்களை நிரப்பும் குப்பைக் கூளங்களாக வந்து குவிகின்றன. அவற்றுக்கு முகம் கொடுக்காமல் நமது கடமைகளை நோக்கி நாம் கடந்துபோவதே சாலச்சிறந்தது” என்று ஆதவ் அர்ஜுன் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வழக்கமாக தனது கட்சியைப் பற்றி இதுபோன்ற கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டால் திருமாவளவன் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார். ஆனால் ஆதவ் அர்ஜுன் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

என்னதான் இந்த விவகாரத்தில் தனது மனக்குமுறலை அவர் கொட்டித் தீர்த்திருந்தாலும் கூட அது இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஏனென்றால் ஆதவ் அர்ஜுனுக்கு எதற்காக விசிகவில் மிகுந்த முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்பதற்கான இன்னொரு காரணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.

அவர் விசிகவில் இணைந்ததே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிட வேண்டும் என்கிற ஆசையில்தான் என்று கூறப்படுகிறது. அதுவும் ஏதாவது ஒரு பொதுத் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று விட வேண்டும் என்பது அவருடைய ஒரே நோக்கமாகவும் உள்ளது.

ஏனென்றால் ஆதவ் அர்ஜுன் முற்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர் என்பதால், தனித் தொகுதியில் அவரால் போட்டியிட முடியாது. இதன் காரணமாகவே விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தனித்தொகுதிகளுடன் பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சி ஆகிய பொதுத் தொகுதிகளையும் திமுகவிடம் விசிக தொடர்ந்து கேட்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் இதை ஒப்புக் கொள்வது போல
சில கருத்துகளையும் தெரிவித்து இருக்கிறார்.

“திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்தியதற்கும், திமுகவிடம் நான்கு தொகுதிகள் கேட்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த மாநாட்டை நடத்தவில்லை என்றாலும் கூட நான்கு தொகுதிகளை நாங்கள் கேட்டிருப்போம்.

பொதுத் தொகுதிகளை விசிக கேட்பது ஒன்றும் புதிது அல்ல.
2001ல் கேட்டிருக்கிறோம். 2006லும் கேட்டுப் போட்டியிட்டிருக்கிறோம். முகையூர் சட்டப் பேரவை பொதுத் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் போட்டியிட்டு இருக்கிறார். அதன் பிறகும் கூட புவனகிரி, உளுந்தூர் பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு இருக்கிறோம். ஆகவே பொதுத் தொகுதி கேட்பது என்பது எங்களது புதிய அணுகுமுறை அல்ல.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தனித் தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்பது எங்களது ஆசை. நான்கு தொகுதிகளில் போட்டியிடுவதுதான் எங்களது நோக்கம். ஏனென்றால் சட்டப் பேரவை தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு ஏற்கனவே நான்கு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே சொந்த சின்னம் என்பதிலும் உறுதியாக உள்ளோம். அதில் துளி கூட ஊசலாட்டம் கிடையாது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதற்காக, வரும் 23ல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

எங்கள் கட்சியில் ஆதவ் அர்ஜுனுக்கு பதவி தரப்பட்டுள்ளது குறித்து பரப்பப்படும் அவதூறுகள் காலப்போக்கில் காணாமல் போய்விடும்” என்று குறிப்பிட்டார்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இப்பிரச்சனை சில நாட்களுக்கு முன்பு வெடித்தபோதே விசிகவின் துணைப் பொது செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசும் இதே போன்று கொந்தளித்து இருந்தார்.

இது பற்றி அவர் கூறுகையில், “திருமாவளவன் அவர்கள் ஒவ்வொரு முடிவுகளை அறிவிக்கும் போதும் உதிரிகளும், எதிரிகளும் வன்மத்தை கக்கி வருவதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக அறிவித்தவுடன் அந்த வன்மத்தர்கள் வழக்கத்தை விட அவதூறு பரப்பி வருகிறார்கள். அர்ஜுன் போன்ற பட்டியலினத்தவர் அல்லாத
இளைஞர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து கட்சியையும், தலைமையையும் வலிமைப்படுத்தி விடக்கூடாது என்பதே இதன் உள்நோக்கமாக உள்ளது” என கடுமையாக சாடி இருந்தார்.

இப்போது திருமாவளவன் இதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து இருக்கிறார். டெல்லியில் அரசியல் நோக்கர்கள் இது குறித்து கூறுவது என்ன?…

“பல்வேறு வழக்குகளில் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுன் முன்னாள் கூடைப்பந்து வீரர். தற்போது தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர், இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.

வாய்ஸ் ஆஃப் காமன் என்னும் அமைப்பை நடத்தி வரும் ஆதவ் அர்ஜூன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை ஒருங்கிணைத்து இருக்கிறார். கடந்த மாதம் திருச்சியில் லட்சக்கணக்கானோர் திரண்ட விசிக மாநாட்டையும் அவர்தான் ஒருங்கிணைத்தார்.
ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா மாநிலங்களில் திருமாவளவன் விசிகாவை வலிமையான கட்சியாக மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அவருடைய திறமை, துடிப்பான பொது நலச் சேவை எண்ணம் ஆகியவற்றின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் விசிகவில் இணைந்ததும், அவருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதும் தற்போது விசிக பொதுத் தொகுதி ஒன்றை திமுக தலைமையிடம் வற்புறுத்தி கேட்பதும்தான் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதிலொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளிடம் நாங்கள் பொதுத்தொகுதி கேட்டு போட்டியிடுவது புதிய விஷயம் அல்ல என்று திருமாவளவன் கூறுகிறார். அவர் சொல்வது உண்மைதான். அதேநேரம் இதுவரை அவர் பொதுத் தொகுதி கேட்டு போட்டியிட்டது எல்லாமே தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மட்டும்தான். இதை அவருடைய பேட்டியிலேயே தெரிந்துகொள்ள முடியும்.

நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் இதுவரை யாரிடமும் பொதுத் தொகுதி கேட்டதே இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இப்போதுதான் முதல் முறையாக அப்படி கேட்கிறார். அதுவும் யாருக்காக?… பல்வேறு வழக்குகளில் சிக்கித் தவிக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனும், இந்திய பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஆதவ் அர்ஜுனுக்காக?…

திமுக தலைமை விசிகவுக்கு வழக்கம்போல் விழுப்புரம், சிதம்பரம் தனித் தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வந்தால் கூடுதலாக ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை திருமாவளவன் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள். இதுதான் பணம் பாதாளம் வரை பாயும் என்கிற பழமொழியை நினைவூட்டுகிறது” என்று அந்த டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் வைக்கும் வாதத்திலும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது!

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 388

    0

    0