நளினி சிதம்பரத்திடம் திமுக கையெழுத்து வாங்குமா?….தேர்தலுக்காக நடத்தும் நாடகமா?

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 9:42 pm

2021 தமிழக தேர்தலின்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று, அதனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதாகத்தான் இருக்கும் என்று அளித்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறைவேற்ற முடியாமல் தடுமாறி வருவது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

ஏற்கனவே 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே வாக்குறுதியை திமுக அளித்து இருந்தாலும் கூட அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி படு தோல்வியை தழுவியது. அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுகவிடம் இதுபற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை.

ஆனால் இப்போதோ தமிழகத்தில் திமுக ஆட்சி நடப்பதால் நீட் விலக்கு வாக்குறுதி என்ன ஆச்சு? என்று அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவ்வப்போது கேள்விக்கணைகளை எழுப்புவதால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் அது தீராத தலைவலியை தருவதாக உள்ளது.

அதுவும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த வாக்குறுதியை எதிர்க்கட்சிகள் பிரதான ஆயுதமாக பயன்படுத்தினால் நிலைமை படுமோசமாகிவிடும் என்பதை திமுக நன்றாகவே உணர்ந்தும் உள்ளது.

பூதாகரமாக உருவெடுத்துள்ள இந்த விவகாரத்தை சமாளிக்கும் நோக்குடன்தான் கடந்த 21ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின்நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெறும் இயக்கத்தில் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.

அதேநேரம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக எங்களால் முடிந்த அளவிற்கு சட்டப் போராட்டங்களை கையில் எடுத்து இருக்கிறோம் என்று கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் 2021ம் ஆண்டு திமுக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு, தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழக மாணவர்களின் நலனை காத்திட வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அக்டோபர் 27ம் தேதியான இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இருக்கிறார்.

அதோடு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழக அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது என்பதையும் அப்போது குடியரசுத் தலைவர் முர்முவிடம் ஸ்டாலின் சுட்டிக் காட்டியும் உள்ளார்.

ஆனால் 2017ல் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு அளித்த நீட் தேர்வு செல்லும் என்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள மோடி அரசு திமுக அரசின் வேண்டுகோளை ஏற்குமா? என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.

அதேநேரம் இந்த நீட் தேர்வு தொடர்பாக இயல்பாகவே சில கேள்விகளும் எழுகின்றன.

ஏனென்றால் நீட் தேர்வு இல்லாத பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் 250 பேருக்குதான் மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தது. ஆனால் தனியார் பள்ளி மாணவர்களோ 30 ஆயிரம் பேர் வரை அதே கால கட்டத்தில் மருத்துவர் படிப்பில் சேர்ந்து விட்டனர் என்ற ஒரு வாதத்தை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வைத்த வாதத்தை நீதிபதிகள் அமர்வு அப்படியே ஏற்றுக் கொண்டது.

எனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு, மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்காமல் 2017ல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அல்லது தற்போது திமுக இணைந்துள்ள இண்டியா கூட்டணியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் திமுக தரப்பில் ஒரு முக்கிய நிபந்தனையாகவும் வைக்கலாம்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ளன. தற்போது 36 மருத்துவக் கல்லூரிகள் தனியார் வசம் இருக்கின்றன. இவற்றில் சில நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாகவும் செயல் படுகின்றன. இந்த மருத்துவ கல்லூரிகளில் 20க்கும் மேற்பட்டவை திமுகவினருக்கு சொந்தமானது, என்கிறார்கள்.

2017க்கு முன்பு வரை இந்தக் கல்லூரிகளும், தங்களது மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை நடத்தவே செய்தன. அதில் பண வசதி கொண்ட குடும்ப மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் இடங்களை பெற்றார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். இவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மிகவும் குறைவுதான்.

தற்போது நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் கூட இந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும் என்பதால் ஒவ்வொரு மாணவரும் கல்லூரியின் தரத்துக்கு ஏற்ப 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே!

எனவே நீட் தேர்வு இல்லாமல் போனால் அதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகப் போவது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய, விளிம்பு நிலை மாணவர்கள்தான். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் 50 முதல் 60 சீட்டுகள் வரை வேண்டுமானால் அவர்களுக்கு கிடைக்கலாம். மற்றபடி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத்தான் எஞ்சிய 6250 எம்பிபிஎஸ் இடங்களும் போய் சேரும்.

“நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளில் 22 பேர் வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே காரணம் காட்டி அத்தேர்வில் இருந்து திமுக அரசு விலக்கு கேட்பது சரியல்ல. அதுபோல விலக்கு கிடைத்து விட்டால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பதே எட்டாக்கனியாகி விடும்” என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் ஈரோடு, நாமக்கல், சேலம்,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் முன்பு தனியார் பள்ளிகளில் பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி படித்த பிளஸ்-2 மாணவர்களுக்கே மருத்துவ மாணவர் சேர்க்கையில் பெருமளவுக்கு இடம் கிடைத்தது. இதற்கு காரணம் அந்தப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கான வழிமுறையை மட்டுமே சொல்லித் தருவார்கள் என்பதுதான்.

அதேநேரம் அரசு பள்ளிகளிலோ குறைந்த அளவிலான மாணவர்களுக்குத்தான் நாம் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். இவர்களால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் எடுப்பதும் கடினம்.

முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 1200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி, மாணவ மாணவிகளுக்கு எம்பிபிஎஸ், பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. திமுக அரசு அதை 10 சதவீதமாக உயர்த்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதும்.

அதன் மூலமும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க முடியும். அதேநேரம் தமிழக மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வில் தேவையான கட் ஆப் மதிப்பெண்கள் பெறுவதற்கான பயிற்சியை திமுக அரசு கொடுத்தாலே தற்கொலை எண்ணத்தை தடுத்து விட இயலும்.

அதுமட்டுமின்றி மருத்துவம் தவிர வேலைவாய்ப்பு தரும் இதர படிப்புகளும் நிறைய இருக்கின்றன என்பதையும் பிளஸ் டூ அறிவியல் படிப்பு மாணவ மாணவர்களிடம் உணர்த்த வேண்டும்” என்று அந்த கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அரசியல் விமர்சகர்களின் பார்வையோ, இவ்விஷயத்தில்
வேறு மாதிரியாக உள்ளது.

“நீட் தேர்வில் இருந்து விலக்கு என்ற வாக்குறுதியை திமுக அளித்தது புலி வாலை பிடித்தவரின் கதைபோல் ஆகிப்போய்விட்டது. ஏனென்றால் 2021 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சுமார் 20 லட்சம் வாக்குகள் கூடுதலாக கிடைத்ததற்கு முக்கிய காரணம் இந்த வாக்குறுதிதான்.

ஆனால் அதை இன்றுவரை நிறைவேற்ற முடியவில்லை என்பதால் அதே அளவு வாக்குகள் திமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் கிடைக்காமல் போய்விடும்.
இது குறைந்தபட்சம் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பயந்துதான் அமைச்சர் உதயநிதி ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்க நாடகத்தை கையில் எடுத்திருக்கிறார்.

நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் பொதுவானது. அதை ஒழிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்ட பின்பும் கூட நீட் தேர்வில் இருந்து நாங்கள் விலக்கு பெறுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் எப்படி கூறுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இந்த இரண்டரை ஆண்டுகளில் பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் நீட் தேர்வு வாக்குறுதியை திமுக அரசால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்பதை நன்றாக புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் இனி என்ன வேஷம் போட்டாலும் அவர்களிடம் இது எடுபடாது.

மேலும் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்தை வாங்கிய பின்பு அதை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்து மீண்டும் ஒருமுறை தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திடுங்கள் என்ற கோரிக்கையைத் தான், முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் வைக்கப் போகிறார்கள். அதனால் எதுவும் நடந்து விடப் போவதில்லை. தவிர உண்மையிலேயே அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் மீது திமுக அரசுக்கு அக்கறை இருக்குமேயானால் நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து திட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியிடமும் அமைச்சர் உதயநிதி நேரில் சென்று கையெழுத்து பெறவேண்டும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இதுவும் நியாயமான கோரிக்கைதான்!

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 277

    0

    0