ராகுலுக்கு திமுக கைக்கொடுக்குமா? போட்டா போட்டியில் மம்தா, நிதிஷ்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 7:02 pm

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி கடந்த ஆண்டு ஜூலை மாதமே எழுந்துவிட்டாலும் கூட அதற்கு இதுவரை எந்த ஒரு தெளிவான விடையும் கிடைக்கவில்லை.

ராகுலை ஓரங்கட்டும் மம்தா, கெஜ்ரிவால்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு வலிமையான வேட்பாளரை ஒருங்கிணைந்து நிறுத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகரராவ், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஒரே நேரத்தில் வரிசைகட்டி நிற்கின்றனர்.

ராகுல் பரவலாக அறியப்பட்ட தலைவர்தான் என்றாலும் 2019 தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்து எந்த பயனும் இல்லாமல் போனது.
இதனால்தான் இந்த முறை காங்கிரசுக்கு மீண்டும் அந்த வாய்ப்பை கொடுத்து விடக்கூடாது என்பதில் மம்தா, கெஜ்ரிவால் இருவரும் மிக உறுதியாக இருக்கின்றனர்.

அடக்கி வாசிக்கும் தெலுங்கானா

இதனால் பல மாநிலங்களில் தங்களது கட்சியின் அமைப்பை தொடங்கி அதை வலுவாக்கிட இருவரும் தீவிர முயற்சி மேற்கொண்டும் வருகின்றனர்.

அதேநேரம் சந்திரசேகர ராவுக்கு,தெலுங்கானா மாநிலத்தை கடந்து வேறு எந்த மாநிலத்திலும் செல்வாக்கு இல்லை என்பது வெளிப்படையான உண்மை. இதை அவரும் புரிந்து கொண்டிருப்பதால் தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் அவர் அடக்கி வாசித்து வருகிறார்.

நிதிஷ்குமார் போட்ட பிளான்

இந்த நிலையில்தான் பாஜக ஆதரவுடன் பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிதிஷ்குமார் கடந்த 9-ம் தேதி திடீரென தனது கூட்டணியை மாற்றிக்கொண்டு, தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வருகிறார். அவருக்கு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தும் வருகின்றன.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ்குமாருக்கு, லாலு கட்சியின் ஆதரவு மட்டும் இருந்தாலே போதும், அவரால் முதலமைச்சர் பதவியில் தொடர முடியும். ஆனால் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் வலிய வந்து ஆதரவு தெரிவித்துள்ளன.

லாலுபிரசாத்தைப் பொறுத்தவரை, அவருடைய அரசியல் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது. தற்போது அவருடைய மகன் தேஜஸ்வி துணை முதலமைச்சராக உள்ளார். அவரை முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் லாலுவின் நோக்கம். அதற்காக இப்போதே நிதிஷ் குமாரை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்காக கொம்பு சீவி விட்டு வருகிறார்.

டெல்லிக்கு செல்லும் முதல்வர்

இதை ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் ஏற்றுக் கொண்டது போலவே தெரிகிறது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலன் சிங் கூறும் போது, “மற்ற கட்சிகள் விரும்பினால், 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் போட்டியிட வாய்ப்புள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்துவதே நிதிஷ்குமாரின் இலக்கு. பிரதமர் ஆகவேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. பீகார் சட்டப் பேரவையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை அடுத்த வாரம் முடித்த பின், நிதிஷ்குமார் டெல்லி செல்கிறார்.

எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியை அவர் தொடங்க இருக்கிறார். அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்தவேண்டும் என்பதே இப்போதைய நோக்கம். தேர்தலில் வென்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை நிதிஷ்குமார் பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்பினால் அதுபற்றி சிந்திக்க வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி

இப்படி மம்தா, கெஜ்ரிவால் இருவருக்கும் அடுத்ததாக எதிர்க்கட்சிகள் சார்பில் நிதிஷ்குமாரின் பெயரும் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இணைந்திருப்பது, டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மம்தாவையும், கெஜ்ரிவாலையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு குடைச்சல் தரும் விஷயமாகவும் இது அமைந்துள்ளது.

பாத யாத்திரை

2024 தேர்தலுக்குள் தன்னை புதுப்பித்துக் கொள்ள விரும்பும் காங்கிரஸ் கடந்த
மே மாத இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கட்சியின் சிந்தனை அமர்வு மாநாட்டில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ஐக்கிய இந்தியா யாத்திரை என்ற பெயரில் ஒரு நெடிய நடை பயணத்தை ராகுல் தலைமையில் நடத்தி மக்களை சந்திக்க முடிவு செய்தது. 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த பாத யாத்திரை 3,500 கிமீ தொலைவு கொண்டது.
150 நாட்களில் யாத்திரை நிறைவடையும்.

வாழ்வாதாரத்தை அழிக்கும் பொருளாதாரம், பெருகிவரும் வேலையின்மை, வளர்ந்து வரும் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு மாற்றாக இந்த பாத யாத்திரையில் பங்கேற்குமாறு, மாபெரும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் அனைவரையும் இதில் பங்கேற்கும்படி காங்கிரஸ் அழைப்பும் விடுத்துள்ளது.

திட்டத்தை மாற்றிய காங்கிரஸ்

இந்த பாத யாத்திரையை மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி அன்றுதான் முதலில் தொடங்குவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது.

ஆனால் நிதிஷ்குமாரும் பிரதமர் வேட்பாளர் களத்தில் குதிக்கலாம் என்பதையும் பீகாரில் பாஜக கூட்டணியை எந்த நேரமும் ஐக்கிய ஜனதாதளம் உதறி தள்ளலாம் என்பதையும் ஒரு மாதத்திற்கு முன்பே யூகித்து விட்ட காங்கிரஸ், ராகுலின் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை முன் கூட்டியே அதாவது செப்டம்பர் 7-ம் தேதியே தொடங்கிட முடிவு செய்தாக கூறப்படுகிறது.

தமிழகம் வரும் ராகுல் காந்தி

இது ஒருபுறமிருக்க, இந்த யாத்திரையை தொடவங்குவதற்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக, ராகுல், வரும் 7-ம் தேதி காலை சென்னை வருகிறார். அன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார். அங்கிருந்து இருந்து களியக்காவிளை வழியாக கேரளா செல்கிறார்.

இந்த பாதயாத்திரை பயணம் தொடர்பான ஏற்பாடுகள், ராகுல் பேசும் இடங்கள் குறித்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கன்னியாகுமரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தமிழக காங்கிரஸ் அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவர்டேக் செய்யுமா?

இப்படி சுறுசுறுப்பு காட்டுவதால் மம்தா, கெஜ்ரிவால், நிதிஷ்குமார் மூவரையும் ஒரே நேரத்தில் ஓவர்டேக் செய்துவிடமுடியும் என்று காங்கிரஸ் கருதுவதாக டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவிற்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் மூலம் மம்தாவை பிரதமர் வேட்பாளர் களத்திலிருந்து எளிதாக வெளியேற்றிவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அல்லது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழியாக இதற்கு ஒரு தீர்வு கண்டு விடலாம் என்று சோனியா நம்புகிறார்.

திமுக கொடுப்பதை ஏற்க காங்., தயார்

இதனால் தமிழகத்தில் 2024 தேர்தலில் காங்கிரசுக்கு திமுக ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் கூட அதை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் மேலிடம் தயாராகவே இருக்கும். ப.சிதம்பரம், கே எஸ் அழகிரி உள்ளிட்ட தமிழக தலைவர்களும் இதை ஆதரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான் ராகுலின் பாதயாத்திரைக்கு திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் காங்கிரஸ் அழைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

அதேபோல பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்பதால் அதை வைத்து பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிதிஷ் குமாரை தடுக்க முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

குடைச்சல் தரும் கெஜ்ரிவால்

எஞ்சி இருப்பவர் ஆம் ஆத்மியின் தலைவர் கெஜ்ரிவால் மட்டுமே. அவருக்கு டெல்லி, பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு இல்லை. அதனால் கடைசி நேரத்தில் அவரும் பிரதமர் வேட்பாளர் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்வார் என்று காங்கிரஸ் மேலிடம் கணக்குப் போடுகிறது.

அதற்காகத்தான் ஒரு மாதம் முன்பாகவே பாத யாத்திரையை தொடங்கி நாட்டு மக்களின் முழுக்கவனத்தையும் தன் மீது திருப்ப காங்கிரஸ் விரும்புவது தெரிகிறது. இந்த நடைப்பயணத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 23.3 கிலோ மீட்டர் தூரம் ராகுல் நடக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.அப்போதுதான் 150 நாட்களில் 3500 கிலோ மீட்டர்களை அவர் கடக்க முடியும்.

ராகுலால் நடக்க முடியுமா?

ஆனால் 52 வயதாகும் ராகுல் ஒரு நாளைக்கு சுமார் 24 கிலோமீட்டர் தூரம் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார் என்ற கருத்தும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
இது தவறான கணிப்பாக கூட இருக்கலாம்.

என்றபோதிலும் இன்னொரு பெருத்த சந்தேகமும் எழுகிறது. ராகுல் எப்போதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக டிசம்பர் மாத இறுதியில் ஏதாவது ஒரு நாட்டுக்கு ரகசிய பயணம் மேற்கொள்வது வழக்கம்.10 முதல் 12 நாட்கள் வரை அந்தப் பயணம் நீடிப்பதும் உண்டு.

செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரம் பாத யாத்திரை முடியலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2024 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவதற்காக தனது புத்தாண்டு ரகசிய பயணத்தை இந்த வருடம் ராகுல் தியாகம் செய்வாரா? என்னும் கேள்வியும் எழுகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் ராகுல் என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 591

    0

    0