மகனுடன் அமைச்சர் பொன்முடி சிக்குவாரா?…ED காட்டும் அடுத்தடுத்த அதிரடி!
Author: Udayachandran RadhaKrishnan17 ஜூலை 2023, 9:40 மணி
ஆளும் திமுக அரசுக்கு இது சோதனையான காலம் போல் தெரிகிறது. ஏனென்றால் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கடந்த மாதம்
14ம் தேதி அவரை கைதும் செய்தது.
செந்தில்பாலாஜியால் சிக்கல்
அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் இதோ இன்னொரு ரெய்டும் வந்துவிட்டது. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தை பொறுத்தவரை மனைவி மேகலா அமலாக்க துறையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் கடந்த 14ம் தேதி அதை தள்ளுபடி செய்தார்.
இதனிடையே தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு நான்கு வாரங்கள் தொடர் சிகிச்சையும் எடுத்து தற்போது டிஸ்சார்ஜ் ஆகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாத இக்கட்டான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்.
இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாகவும், சவாலாகவும் அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.
அமலாக்கத்துறையில் சிக்கிய அடுத்த அமைச்சர்
செந்தில் பாலாஜியை தொடர்ந்து, திமுக அரசின் இன்னும் சில மூத்த அமைச்சர்களும் அமலாக்கத் துறையின் பிடியில் சிக்குவார்கள். அவர்களது வீடுகளிலும், அவர்களின் பினாமிகளாக செயல்படுபவர்களின் வீடுகளிலும் விரைவில் அதிரடி சோதனை நடத்தப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் திமுகவின் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான பொன் முடியும், அவருடைய மூத்த மகனான கௌதம சிகாமணி எம்பியும் அமலாக்கத் துறையின் அதிரடி சோதனையில் சிக்கிகொண்டு இருக்கிறார்கள்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனி, விழுப்புரம் சண்முகாபுரத்தில் உள்ள பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவருடைய மகன் கௌதம் சிகாமணியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள அவருடைய கல்வி குழுமத்திலும்
என 9 இடங்களில் 60-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் துணையோடு ஜூலை 17ம் தேதி காலை 7 மணி திடீர் சோதனையில் இறங்கினர்.
இந்த சோதனையின் பின்னணியில் இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2008ஆம் ஆண்டு வழக்கு
2008ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் 7.6 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளார் என்று கௌதம சிகாமணி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
வெளிநாடுகளில் கௌதம சிகாமணி செய்த முதலீடுகள் மற்றும் அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் ஈட்டிய தொகைகளுக்கு ஈடாக 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் முடக்கவும் செய்தது.
இந்த வழக்கில்தான் தற்போது அமலாக்கத்துறை கௌதம சிகாமணியை சுற்றி வளைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் பொன்முடி மகனுக்கும் சிக்கல்
அடுத்ததாக பொன்முடி 2007 முதல் 2011 வரை தமிழக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி செம்மண் குவாரி நடத்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உரிமம் வழங்கி அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இரண்டாவது முக்கிய குற்றவாளியாக கௌதம சிகாமணியின் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்தே அமலாக்கத்துறையினர்
அமைச்சர் பொன்முடி அவருடைய மகன் என இருவருடைய வீடுகளிலும் தீவிர சோதனையில் இறங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
முன்னதாக 1996 – 2001 காலகட்டத்தில் பொன்முடி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இந்த மாத தொடக்கத்தில்தான் விடுவிக்கப்பட்டார். இது நடந்து 10 நாட்களே ஆகியிருக்கும் நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீடுகளில் தீவிர சோதனையை மேற்கொண்டிருக்கின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கிண்டல்
அதேநேரம்,” தோல்வி பயத்தால் பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டதை திசை திருப்ப மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. அதன் விளைவுதான் அமலாக்கத்துறையின் இந்த
திடீர் சோதனை. இதைக் கண்டு திமுக பயப்படாது. எங்களுக்காக ஆளுநர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். தற்போது அமலாக்கத் துறையும் சேர்ந்துள்ளது. தேர்தலில் எங்களுக்கு வேலை சுலபமாக இருக்கும்” என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சோதனையை கண்டித்ததுடன் கிண்டலடித்தும் இருக்கிறார்.
ஆனால் டெல்லியில் உள்ள மூத்த அரசியல் நோக்கர்களின், பார்வையோ வேறு மாதிரியாக உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் சவால்
“அமைச்சர் செந்தில் பாலாஜியின் லஞ்ச வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அடுத்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடியும், அவருடைய மகன் கௌதம சிகாமணியும் அமலக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கிக் கொண்டிருப்பது, திமுகவுக்கு மட்டுமல்ல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பலத்த சவாலை ஏற்படுத்தி விட்டுள்ளது” என்று அவர்கள் கூறுகின்றனர்.
“அமலாக்கத்துறையை பொறுத்த வரை, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் ரெய்டில் இறங்குவது கிடையாது. குறிப்பாக அமைச்சர்கள் மீது பெரிய அளவில் உள்ள ஊழல் வழக்குகள், சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்தது போன்றவற்றை முழுமையாக ஆய்வு செய்து அதில் அவர்களுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்களும், குற்றம் புரிந்ததற்கான முகாந்திரமும் இருந்தால் மட்டுமே சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
சிக்கியது எப்படி?
அதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் அவர்களுடைய வீடுகள், அலுவலகங்களில் அதிரடி ரெய்டில் இறங்குவார்கள். அதுபோல்தான் செந்தில் பாலாஜி மாட்டிக்கொண்டார்.
ஏற்கனவே சில முறை அவர் அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தாலும் கூட சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்ததால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் இனி நாம் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை. அமலாக்கத் துறையினர் நம்மை கைது செய்தால் டெல்லிக்கு கொண்டு சென்று திகார் சிறையில் பல மாதங்கள் அடைத்து விடுவார்கள் என்று பயந்துதான் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை என்கிறார்கள். அதனால்தான் கடந்த ஜுன் 13ம் தேதி அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று பல மணி நேரம் விசாரணை நடத்தியும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதால்தான் மறுநாள் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.
இது 2011-2015ம் ஆண்டுகளுக்கு இடையே நடந்த லஞ்ச வழக்கு என்றாலும் கூட இதை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து எங்களுக்கு அறிக்கையை தாக்கல் செய்யுங்கள். இல்லாவிட்டால் நாங்களே சிறப்பு விசாரணை குழுவை அமைத்து இந்த வழக்கை விசாரிப்போம் என்று கடந்த மே 16-ம் தேதி உத்தரவு பிறப்பித்த பிறகுதான் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணையே நடத்தியது.
அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கௌதம சிகாமணி இருவர் தொடர்புடைய வழக்குகளும்15 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதால் அதை அமலாக்க துறையால் எளிதில் புறம் தள்ளி விட முடியாது. அவர்களுக்கு தகுந்த ஆதாரங்கள் கிடைத்து இருப்பதால் அதன் அடிப்படையில் இப்போது சோதனையில் இறங்கியுள்ளனர். அவ்வளவுதான்.
அதனால் எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இது அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக தெரியவில்லை.
திமுகவுக்கு சாதகமா? பாதகமா?
அதேநேரம் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஊழல் வழக்குகளில் சிக்கிய திமுகவின் மூத்த அமைச்சர்களில் மூவரும், கடந்த ஆண்டு தனது இல்லத் திருமண விழாவை மிக பிரமாண்டமாக நடத்திய ஒரு அமைச்சரும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பதையும் அமலாக்கத்துறை மோப்பம் பிடித்துள்ளது. இனி அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
சரி, இந்த தகவல் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு இன்னும் தெரியாமலா இருக்கும்? அதற்குள் அவர்கள் விழிப்படைந்து ஆதாரங்களை அழித்து விட மாட்டார்களா?…என்ற கேள்வி எழலாம்.
ஆனால் வங்கிகள் மூலம் சிறு சிறு அளவில் பலநூறு கோடி ரூபாயை தொடர்ந்து பத்து பதினைந்து ஆண்டுகள் பினாமிகள் வழியாக பண பரிமாற்றம் செய்ததை தீவிரமாக ஆய்வு நடத்தி அவற்றை ஆதாரங்களாகக் கொண்டுதான் அமலாக்கத்துறை சோதனையிலேயே இறங்கும். விதிவிலக்காக சில நேரங்களில் குறுகிய காலத்திலேயே ஆதாரங்கள் கிடைத்துவிட்டாலும் திடீர் ரெய்டு நடத்துவார்கள்.
அதனால் அமைச்சர் பொன் முடியும், அவருடைய மகன் கவுதம சிகாமணி எம் பியும் கைது நடவடிக்கையை கூட எதிர்கொள்ள நேரிடும்.
அதேநேரம், தகுந்த ஆதாரங்களின்றி திமுக அமைச்சர்களை மத்திய அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டால் எதிர்வரும் தேர்தல்கள் ஸ்டாலின் நினைப்பது போல் திமுகவுக்கு சாதகமாக அமையலாம்.
மாறாக திமுக அமைச்சர்கள் மீதான குற்றங்களை அமலாக்கத் துறை நிரூபித்து விட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலும் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதகமாகவே முடியும்.
ஏனென்றால் திமுக ஆட்சி என்றாலே ஒரே ஊழல்தான் என்ற முத்திரை குத்தப்பட்டு அது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்திவிடும்” என்று டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, திமுக அரசுக்கு இது சோதனை மேல் சோதனை போல்தான் அமைந்துள்ளது.
0
0