கேலோ இந்தியாவுக்கு மோடியை அழைப்பதா?… குமுறும் திமுக கூட்டணி கட்சிகள்!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2024, 9:29 pm
பிரதமர் மோடியை டெல்லியில் அமைச்சர் உதயநிதி மிக அண்மையில் சந்தித்து தமிழகத்தில் வரும் 19ம் தேதி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்ததை அவரும் ஏற்றுக்கொண்டு அன்று சென்னை வர சம்மதித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஆளும் கட்சியான திமுகவே கூட எதிர்பார்த்திராத ஒன்று என்கிறார்கள்.
ஏன் இதை அமைச்சர் உதயநிதியே கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்றும் சொல்லலாம். ஏனென்றால் பிரதமரை கேலோ போட்டிகளை தொடங்கி வைக்கவோ அல்லது வரும் 31ம் தேதி நிறைவு விழாவை நடத்தி வைக்கவோ நான் அழைப்பு விடுக்கப் போகிறேன். இதில் பங்கேற்பதும், பங்கேற்காததும் அவருடைய விருப்பம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக உதயநிதி சந்தேகத்துடன்தான் கூறியிருந்தார்.
அதேநேரம் அவரை சந்தித்த பிறகு பிரதமர் சென்னையில் போட்டியை தொடங்கி வைக்க வருவதாக கூறி இருக்கிறார், என்று உதயநிதி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
5,000க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் கேலோ இந்தியா போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்படுகிறது.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பதாலும், விரைவில் துணை முதலமைச்சராகும் வாய்ப்பு தனக்கு வரலாம் என்று கருதியோ என்னவோ உதயநிதி கேலோ விளையாட்டுப் போட்டியில் மிகுந்த ஆர்வம் காட்டுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இதை தனக்கு கிடைக்கும் அரசியல் ரீதியானதொரு அங்கீகாரமாக கூட அவர் நினைக்க வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் பிரதமர் மோடியை மட்டுமே சந்தித்து அழைப்பு விடுத்தால் அதன் மீது கடுமையான விமர்சனங்கள் எழும் என்பதை புரிந்துகொண்டு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்து அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஆனாலும் கூட தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளிடம் அமைச்சர் உதயநிதி, பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுத்திருக்கக் கூடாது, அவர் நாட்டின் தலைவர் என்றாலும் கூட நமது கூட்டணியின் முக்கிய எதிரியாகவும் இருக்கிறார். அவரை எதிர்த்துதான் 2024 தேர்தலையே நாம் சந்திக்கிறோம். அதனால் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் தேசிய பாஜகவின் மூத்த தலைவரான அவரை உதயநிதி சந்தித்திருக்கவே கூடாது என்ற முணுமுணுப்பு சத்தம் பலமாக கேட்கிறது.
தவிர, இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளும் திமுக தலைமை மீது கடும் எரிச்சலில் இருப்பதாக தெரிகிறது.
விளையாட்டும், அரசியலும் வெவ்வேறானவை என்றாலும் கூட இண்டியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதை நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்தே பார்க்கின்றன.
ஏனென்றால் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கும் போது, தங்களது ஆட்சி காலத்தில் விளையாட்டுத்துறையில் நிகழ்த்திய சாதனைகள் பற்றி மோடி பேசுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அது அமைந்து விடும் என்றும் அந்த கட்சிகள் அஞ்சுகின்றன.
அதேபோல திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை வேறொரு நிகழ்வையும் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் கேலோ இந்தியா போட்டி நடத்தப்பட்டபோது அந்த மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் தொடக்க விழாவிலோ, நிறைவு விழாவிலோ நீங்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடியை அழைக்கவில்லை.
இத்தனைக்கும் சௌகான் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்.
அவரே மோடியை அழைக்காமல் போட்டியை நடத்தி முடித்து விட்டார் என்றால் பாஜகவை முதல் எதிரியாக கூறும் திமுக அமைச்சர் உதயநிதி மட்டும் எதற்காக மோடிக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.
அதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாபலிபுரத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு அனுமதி பெற்று கொடுத்த பிரதமர் மோடியின் படத்தை விளம்பரங்களில் தவிர்த்து விட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்தியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. உலகளாவிய ஒரு போட்டியை நாட்டின் பிரதமர் அனுமதியின்றி ஒரு மாநில அரசால் நடத்தி விட முடியுமா?.. என்ற கேள்வி எழுந்த பிறகுதான் திமுக அரசு விளம்பரங்களில் அப்போது மோடியின் புகைப்படத்தையே பயன்படுத்தியது.
அது போன்ற சர்ச்சைகள், கேலோ விளையாட்டுப் போட்டியிலும் எழுந்தால் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அச்சிட வேண்டிய நெருக்கடி திமுக அரசுக்கு ஏற்படலாம். தவிர இந்த போட்டி முழுக்க முழுக்க இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பாஜக அரசால் 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தால் அதனால் தமிழகத்திற்கு கிடைக்கும் பெருமையை பாஜகவினரும். பங்கு போடுவார்கள். எனவே பிரதமர் மோடியை அழைக்காமலேயே இந்த விளையாட்டு போட்டியை நடத்தி முடித்திருக்கலாம் என்பதும் திமுக கூட்டணி கட்சிகளின் வாதமாக உள்ளது.
இன்னொரு பக்கம், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகவும் ஜனவரி நான்காவது வாரத்தில் லண்டனுக்கு செல்ல இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் ஒரு தகவல் உலா வருகிறது.
கேலோ இந்தியா போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே கூட முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். லண்டனில் ஸ்டாலின் பத்து, பதினைந்து நாட்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள நேர்ந்தால் அப்போது பொறுப்பு முதலமைச்சர் பதவி உதயநிதியிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தனது உடல் நிலையை கருத்தில் கொண்டுதான் கடந்த ஆறு மாதங்களாக அமைச்சர் உதயநிதிக்கு தமிழக அரசின் அத்தனை செயல்பாடுகளிலும் மிகுந்த முன்னுரிமையை ஸ்டாலின், அளித்து வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.
முதலில் சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கு பின்பு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த மாநாடு மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டு விட்டதாலும், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் லண்டன் செல்ல வேண்டிய நிலைமை உருவாகி இருப்பதாலும் நேரடியாகவே பொறுப்பு முதலமைச்சர் பதவியை தற்காலிகமாக அவரிடம் ஒப்படைத்து விடலாம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்திருப்பதாக தெரிகிறது.
இதனால்தான் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு, உதயநிதி நேரில் சென்று அழைப்பு விடுத்ததை திமுக கூட்டணி கட்சிகளால் வெளிப்படையாக விமர்சிக்க முடியவில்லை என்பதும் நிஜம்!
என்ற போதிலும் இண்டியா கூட்டணியில் உள்ள பிற மாநில கட்சிகள் இதை ஜீரணித்துக் கொண்டதாக தெரியவில்லை.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட பல கட்சிகளை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்றவற்றை பயன்படுத்தி மத்திய பாஜக அரசு ஆட்டம் காண்பிக்கிறது என்ற குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில் அதில் சிக்கிக் கொண்டிருக்கும் திமுகவே பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது அந்தக் கட்சிகளுக்கு பெரும் நெருடலாக உள்ளது.
ஒருவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் முழுமையான வெற்றி கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டு பாஜக மட்டும் தனிப்பெரும் கட்சியாக 260, 265 எம்பி சீட்டுகளை வென்று அப்போது 15 தொகுதிகளை திமுக கைப்பற்றி இருந்தால்
மோடிக்கு ஆதரவான நிலைப்பாட்டை அறிவாலயம் எடுத்து விடுமோ என்ற கோணத்திலும் இண்டியா கூட்டணி கட்சிகள் இதை பார்க்கின்றன.
அதனால்தான் விளையாட்டையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்காமல் எதிர்க்கட்சிகள் இப்படி யெல்லாம் கணக்கு போடும் நிலை வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதை திமுக எப்படி சமாளிக்க போகிறது என்பதுதான்
மிகப்பெரிய கேள்வி!