2024 தேர்தலில் திமுகவுக்கு ‘நீட்’ கை கொடுக்குமா?… உதயநிதி போடும் புதுக்கணக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2023, 9:31 pm

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மட்டுமல்லாமல் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை திமுக தனது பிரதான தேர்தல் அஸ்திரங்களில் ஒன்றாக பயன்படுத்தியது.

நீட் தேர்வு ரகசியம்

குறிப்பாக 2021 தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததுமே முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதாகத்தான் இருக்கும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஊர் ஊராக சென்று தீவிர பிரசாரமும் செய்தார்.

அதிலும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேலி செய்யும் விதமாக, “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதை எப்படி ரத்து செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் அந்த ரகசியத்தை சொல்லுங்கள் என்று ஆட்சியாளர்கள் நம்மிடம் கேட்கிறார்கள். கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணையோடு மாநில உரிமைகள் பறி போகக்கூடாது என்று நினைத்தாலே போதும். அது இன்றைய ஆட்சியாளர்களிடம் கொஞ்சமும் கிடையாது. நமது தலைவருக்கு மட்டும்தான் அந்த ஆளுமை உண்டு”என்று அவர் மேடைகளில் ஆவேசமாகவும் பொங்கினார்.

இது தமிழக அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து வந்த மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதன் காரணமாக திமுகவுக்கு 15 லட்சம் ஓட்டுகள் வரை கூடுதலாக கிடைத்தது. இதுதான் திமுக ஆட்சியை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மூன்று முறை நீட் தேர்வு நடந்து முடிந்து விட்டது. இதனால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்துதான் என்றீர்களே, அது என்ன ஆனது?என்று முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்பி மூவரையும் நோக்கி அரசு பள்ளி பிளஸ் டூ மாணவர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்ப தொடங்கி விட்டனர்.

நீட் தேர்வால் 2 உயிர்கள் பலி!

இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வில் வெற்றி பெற்றபோதும் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரத்தை தாங்க முடியாத அவருடைய தந்தை செல்வசேகரும் மறுநாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவனின் தந்தை செல்வசேகரின் உடலுக்கு மரியாதை செய்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் உதயநிதியை மாணவர்கள் முற்றுகையிட்டு நீட் தேர்வு ரத்து செய்ய நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இனியும் இதுபோன்ற துயரங்கள் தொடரக்கூடாது என்று அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி திணறடித்தும் விட்டனர். அப்போது இதற்கு உதயநிதி நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை.

நீட் தேர்வு ரத்து என்னாச்சு?

மேலும் உதயநிதியிடம் இப்படி கேள்வி எழுப்பிய மாணவர்களில் ஒருவர் நீட் தேர்வில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குரிய கட் ஆப் மதிப்பெண்களை பெற முடியாமல் போய், 25 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்து இன்று, தான் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

அந்த மாணவர் 25 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்து படித்து வரும் கல்லூரி எது என்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டு உடைத்ததால் பரபரப்பு இன்னும் எகிறியுள்ளது.

உதயநிதிக்கு ஷாக் கொடுத்த மாணவி

அதேபோல ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தபோது உதயநிதியிடம் ஒரு மாணவி நீட் தேர்வு ரத்து ரகசியத்தை இப்போதாவது சொல்லக் கூடாதா?…என்று கேட்க அதற்கு, நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. அதற்காக சட்டபூர்வ நடவடிக்கைகளில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது” என்று அவரால் மழுப்பதாகத்தான் பதில் அளிக்க முடிந்தது.

இப்படி நீட் தொடர்பான கேள்விகள் தொடர்ந்து மாணவர்களாலும் அவர்களது பெற்றோர்களாலும் எழுப்பப்பட்டு விஸ்வரூபம் எடுத்துவிட்டதை உணர்ந்து கொண்டதால்தான் என்னவோ, அமைச்சர் உதயநிதி ஆகஸ்ட் 20ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது.

மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின்

அதேநேரம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து பற்றி கூறும்போது,” தற்கொலை எண்ணம் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். இன்னும் சில மாதங்களில் அரசியல் மாற்றம் நிகழும்போது நீட் தேர்வுக்கான தடைகள் அழிந்துவிடும். அப்போது, ​​‘கையொப்பமிட மாட்டேன்’ என்று சொல்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்” என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.

அதாவது “2024 தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றதும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும். மத்திய அரசு வசமுள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும். அப்போது நீட் தேர்வு ரத்துக்கு தடையாக உள்ள ஆளுநரும் பதவியில் இருக்க மாட்டார்”என்று ஸ்டாலின் மறைமுகமாக கூறுகிறார்.

2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக சமீபத்தில் வெளியான நான்கு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. இதனால் மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்து விட்டால் திமுக அரசுக்கு நீட் தேர்வு வாக்குறுதியை நிறைவேற்றுவது கானல் நீராகவே ஆகிவிடும்.

உச்சநீதிமன்றம் சென்றால் ரத்தாகுமா?

ஒருவேளை இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா என்பதும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர முடியுமா என்பதும் கேள்விக்குறியான விஷயம்தான்.

ஏனென்றால் நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு யாராவது சென்றால் நிலைமை சிக்கலாகும். இதற்கு காரணம் 2017ம் ஆண்டு நீட் தேர்வு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருப்பதுதான்.

இது ஒருபுறம் இருக்க நீட் தேர்வுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரத்தின், மனைவியான நளினி சிதம்பரம் தீர்ப்பு வெளியானவுடன் செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு தெரிவித்த சில தகவல்களை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்கள் கூறுவது இதுதான்.

“நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறவேண்டும் என்றால் இனி தமிழகம் கடவுளிடம்தான் மேல் முறையீடு செய்ய முடியும். நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாத 2007 முதல் 2016ம் ஆண்டு வரையிலான 10 வருடங்களில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் 250 பேருக்குத்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் கிடைத்தது. ஆனால் இதே காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 30 ஆயிரம் பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.

நீட் தேர்வு இல்லாமல் போனால் நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பிரபல தனியார் மெட்ரிக் பள்ளிகள்தான் அதிக பயன் அடையும். அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காது.

அதேபோல நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக சீட் கிடைக்கும். காரணம் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள்தான் பெரும்பாலும் முன்னணி மாணவர்களாக இருப்பார்கள் என்று நளினி சிதம்பரம் அப்போது குறிப்பிட்டார்.

இபிஎஸ் கொண்டு வந்த உள்ஒதுக்கீடு

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் மாநிலத்தில் உள்ள 38 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இதனால் பெரிய அளவில் பயன் பெறுவது நிச்சயம். ஏனென்றால் பண வசதி படைத்த மாணவர்களுக்கு எப்படியும் சீட் கிடைத்துவிடும். பணம் இல்லாத ஏழை, எளிய விளிம்பு நிலை மாணவர்கள் எவ்வளவுதான் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு மத்திய பாஜக அரசின் ஆதரவுடன் கொண்டுவந்த 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக, ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 550 முதல் 600 வரையிலான எம்பிபிஎஸ் சீட்டுகள் கிடைத்து வருகிறது. இது போன்றதொரு வாய்ப்பு நீட் தேர்வு ரத்தானால் கூட அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடைக்காது. அதை திமுக அரசு தொடர்வதில் என்ன சிரமம் இருக்கிறது?…

அதேநேரம் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதும் சாதாரண விஷயம் அல்ல.

I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாறுமா?

ஏனென்றால் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி 1976 ம் ஆண்டு நெருக்கடி நிலையின்போதே பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது. அதன்படி கடந்த
47 ஆண்டுகளாக உள்ள கல்விமுறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும்போது ஏராளமான சிக்கல்களும் உருவாகும். தவிர மத்தியில் எந்த அரசு இருந்தாலும் கல்வியை பொதுப்பட்டியலில் வைத்திருக்கவே விரும்பும். எளிதில் விட்டுக் கொடுக்க முன் வராது.

வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் 2007க்கு முன்பு தமிழகத்தில் மருத்துவர் மாணவர் சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடந்தது. அதில் பிளஸ் டூ அறிவியல் பாடங்களில் எடுத்த 150 மதிப்பெண்களையும், நுழைவுத் தேர்வில் எடுத்த 50 மதிப்பெண்களையும் சேர்த்து யார் யாரெல்லாம் மொத்தமாக அதிக மார்க்குகள் எடுத்தார்களோ அவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வகை செய்யப்பட்டது. அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் பாதிக்கப்படாத சூழலும் ஏற்படுத்தப்பட்டது. அது போன்றதொரு நடைமுறையை
நீட் தேர்வுக்கு பதிலாக கொண்டு வரலாம்.

டாக்டர் படிப்பு மட்டும் படிப்பல்ல

தமிழக மாணவர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்பதால் அவர்களை எத்தகைய போட்டித் தேர்வுக்கும் தயார் படுத்துவதுதான், மாநில அரசின் கடமையாக இருக்கவேண்டும். தவிர டாக்டர் கனவை மட்டுமே பிள்ளைகளிடம் திணிக்கும் போக்கை பெற்றோர்களும் கைவிட வேண்டும். ஏனென்றால் பிற படிப்புகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன, அதன் மூலமும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்தவேண்டும்.

நீட் தேர்வை அகற்றிவிட்டு மாணவர் சேர்க்கைக்கு மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாக வைத்தால் அதனால் முழுமையான பயனை பெறப்போவது குறிப்பிட்ட சில மாவட்டங்களின் தனியார் மெட்ரிக் பள்ளிகள்தான். அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கொள்ளை லாபம் சம்பாதித்து விடுவார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை. தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் செல்வாக்கு உள்ளவர்களால் நடத்தப்படுவது அனைவரும் அறிந்த உண்மை.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கும் திமுக தலைவர்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்” என்று அந்த கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 490

    0

    1