ராஜ்யசபா எம்பி ஆகிறாரா, பிரேமலதா?… அதிர்ச்சியில் அதிமுக, பாஜக!…
Author: Udayachandran RadhaKrishnan5 November 2023, 7:14 pm
2024 தேர்தலில் தமிழகத்தில் கடுமையான மும்மனைப் போட்டி இருக்கும் என்பது உறுதியாகத் தெரிய வரும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்வதற்கு படாத பாடுபட்டு வருகிறது.
அதிமுகவோ பாமக, தேமுதிக கட்சிகளை தனது அணிக்குள் கொண்டு வருவதற்காக ரகசிய பேச்சிலும் ஈடுபட்டுள்ளது. தவிர திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவனின் விசிகவை வளைத்து போடவும் விடா முயற்சிகளை மேற்கொள்கிறது.
தமிழக பாஜகவோ டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவற்றுடன் ஏறக்குறைய கூட்டணியை உறுதி செய்து விட்டது. இதுவரை பிடி கொடுக்காமல் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றுடன் சமரச பேச்சு வார்த்தைகளிலும் இறங்கி உள்ளது.
ஆனால் இந்த சிறு, சிறு கட்சிகளின் பலத்தை மட்டுமே வைத்து வெற்றி பெறுவது மிகக் கடினம் என்பதால் அதிமுகவை போலவே பாமகவையும், தேமுதிகவையும் கூட்டணிக்குள் இழுத்துப் போட தமிழக பாஜக மறைமுக பேச்சு நடத்தியும் வருகிறது.
பாமகவை பொறுத்தவரை ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து பொங்கல் பண்டிகைக்கு பின்பு அக்கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இன்னொரு பக்கம் டாக்டர் அன்புமணி ராமதாஸோ திமுகவின் கதவு எப்போது திறக்கும்? என்றும் காத்துக் கொண்டிருக்கிறார். திமுக இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, ஒரு ராஜ்யசபா எம்பி சீட் கொடுத்தாலே போதும் அதனுடன் கூட்டணி அமைத்து விடலாம் என்றும் அவர் கணக்கு போடுகிறார்.
ஆனால் திமுக இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கை பாமகவிடம் சிறிது கூட இருப்பதாக தெரியவில்லை.
அதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு எந்த மாதிரியான சிக்கல்கள் பாமகவுக்கு முளைக்கும், அது தனது எதிர்கால அரசியலுக்கு முட்டுக்கட்டையாக அமையுமா? என்றெல்லாம் டாக்டர் அன்புமணி இப்போதே தன்னை குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருப்பதும் தெரிகிறது.
இதேபோன்ற நிலையில் உள்ள இன்னொரு கட்சிதான், தேமுதிக என்று சொன்னால் அது மிகையாகாது. திமுக தலைமை நடிகர் விஜயகாந்தின் கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து எந்த ஆர்வமும் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் அக்கட்சியை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
அதனால் தேமுதிகவுக்கு எஞ்சியுள்ள வாய்ப்புகள் இரண்டே இரண்டுதான். ஒன்று அதிமுக கூட்டணியில் இணையவேண்டும். அல்லது பாஜக தலைமையிலான அணிக்கு செல்ல வேண்டும்.
இந்த நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, தேமுதிகவின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா சந்தித்து கூட்டணியை உறுதி செய்யப் போவதாக கடந்த சில தினங்களாகவே சமூக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகி வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி அண்ணாமலையின் நடைபயண நிறைவு விழாவை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அந்த விழாவில் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் பாஜக கூட்டணி குறித்து தேமுதிக முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் மறுத்தார். கூட்டணி தொடர்பாக தேமுதிக விரைவில் முடிவெடுக்கும். யாரையும் சந்திக்க நாங்கள் இப்போது திட்டமிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனால் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக படு தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் வரும் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று முதல் முறையாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கால் பதித்து விடவேண்டும் என்ற முனைப்புடன் அக்கட்சி காய்களை நகர்த்தி வருகிறது.
அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா எம்பி பதவியை கேட்டு பெறுவது என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கூட்டணி பேச்சின் போது இதனை வலியுறுத்தி எந்த கட்சி ராஜ்ய சபா எம்பி பதவியை தர ஒப்புக்கொள்கிறதோ அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது என தேமுதிக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோடி தலைமையிலான பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும். அதனால் அந்தக் கட்சியுடன் இணக்கமாக சென்று ராஜ்ய சபா எம்பி பதவியை கேட்டு பெறலாம் என்று தேமுதிகவில் ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் அதிமுக கூட்டணிக்கு சென்றால்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும். எனவே எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்ப்பதே நல்லது என்று இன்னொரு பிரிவினர் கூறி வருகிறார்கள். இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதா? அல்லது பாஜக பக்கம் சாய்வதா? என்பது பற்றி தேமுதிக தீவிர ஆலோசனையில் மூழ்கி உள்ளது.
“2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல்களின்போது கூட்டணி அமைப்பதில் தடுமாற்றம் கண்டது, தயங்கியது போல் இந்த முறை நடந்து விடக்கூடாது என்று தேமுதிக கருதுகிறது. அதில் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த உறுதியாக இருப்பது போலவும் தெரிகிறது. எனவே டிசம்பர் மாத இறுதிக்குள் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக உறுதி செய்துவிடும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“2019 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே தேமுதிக திரை மறைவில் அறிவாலயத்தின் கதவுகளையும் தட்டியது. இதற்கு முக்கிய காரணம் 2016 சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் அமைந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகியவை திமுக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட்டுகளையும் உறுதி செய்துவிட்டன. அதனால் நமக்கும் திமுக கூட்டணியில் இடம் கிடைக்கும் என்று தேமுதிக அப்போது நம்பியது.
ஆனால் மக்கள் நலக் கூட்டணி கலைக்கப்பட்ட பிறகு 2017-ம் ஆண்டிலேயே தமாக தவிர மற்ற கட்சிகள் எல்லாம் திமுக பக்கம் சாய்ந்து விட்டன. ஆனால் தேமுதிகவோ 2019 தேர்தலின்போது கடைசி நேரத்தில்தான் திமுகவை நாடியது. அப்போது இரண்டு தொகுதிகளை திமுக ஒதுக்க முன் வந்ததை தேமுதிக ஏற்கவும் இல்லை. இதனால்தான் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து நான்கு தொகுதிகளில் போட்டியிட நேர்ந்தது.
எனினும் அக்கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
2021 தமிழக தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 சதவீத ஓட்டுகளை வாங்கியிருந்த தேமுதிகவின் வாக்கு வங்கி ஒரு சதவீதத்துக்கும் கீழாக குறைந்தும் போனது.
அதேநேரம் டிடிவி தினகரனின் அமமுக 160 இடங்களில் போட்டியிட்டு 2.47 ஓட்டுகளை வாங்கியது. இங்குதான் தேமுதிக, டிடிவி தினகரனை சந்தேகக்கண் கொண்டு பார்த்தது. தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அமமுகவினர் முழுமையாக வாக்களிக்கவில்லை, தேர்தல் வேலையும் செய்யவில்லை என்பதால்தான் தேமுதிகவின் ஓட்டு சதவீதம் பெரிதும் சரிந்து போனது என்று கருதிய பிரேமலதா அமமுக கூட்டணியில் இருந்து உடனடியாக வெளியேறவும் செய்தார். இப்போது பாஜக கூட்டணியில் சேர்ந்தால் அமமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டிய நெருக்கடியும் அக்கட்சிக்கு ஏற்படலாம்.
அதேநேரம் பாஜக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி பதவியை டெல்லி மேலிடத்திடம் கேட்டு பெற்று தருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதி அளிப்பாரா? என்ற கேள்வியையும் தேமுதிக எழுப்புகிறது. ஏனென்றால் தமிழகத்தில் நான்கு எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துள்ள பாஜகவால் எப்படி தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை தர முடியும்?… மத்திய அமைச்சரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவருமான எல் முருகனை தேர்வு செய்தது போல வேறு ஒரு மாநிலத்திலிருந்து எம்பி பதவிக்கு தேர்ந்தெடுக்க உதவி செய்வார்களா? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
அதுவும் இந்த முறை பிரேமலதாவே ராஜ்யசபா எம்பி ஆக விரும்புகிறார் என்று கூறப்படுவதால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தேமுதிக நிறையவே யோசிக்கிறது.
மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் ஐந்து தொகுதிகள்
வரை கிடைக்கலாம். ஆனால் அதை வெற்றியாக மாற்ற முடியுமா என்ற பெருத்த சந்தேகமும் தேமுதிகவுக்கு எழுந்துள்ளது. இதனால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பிரேமலதா விஜயகாந்த் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அதிமுக கூட்டணிக்கு போனால் மூன்று எம்பி சீட்டுகளும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் கிடைக்கலாம். ஆனால் ராஜ்ய சபா எம்பி சீட் தருவது பற்றி எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்கிறார்கள். ஏனென்றால் பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளுடன் ஒரு ராஜ்ய சபா எம்பி பதவியையும் எதிர்பார்க்கிறது.
இப்படி இருதரப்பினருமே ஒரே நேரத்தில் ராஜ்யசபா எம்பி சீட் ஒன்றை எதிர்பார்ப்பதால் அதிமுக குழப்பம் அடைந்துள்ளது. ஏனென்றால் அதிமுகவிடம் இப்போதுள்ள 62 எம்எல்ஏக்கள் மூலம் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை தேர்வு செய்து விட முடியும். ஆனால் கூட்டணி வைப்பதற்காக இந்த இரு எம்பி இடங்களையும் தியாகம் செய்தால் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கவேண்டி இருக்குமே என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
ராஜ்ய சபா எம்பி வேண்டும் என்ற நிபந்தனையை பாமகவை விட தேமுதிக தீவிரமாக வைப்பதுதான் அதிமுகவையும், பாஜகவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தேமுதிக போடும் இந்த கண்டிஷனால்தான், அந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லை என்பது உண்மை!
0
0