2024-ல் சட்டப்பேரவைத் தேர்தலா?…அதிரடி காட்டிய அண்ணாமலை!!
Author: Udayachandran RadhaKrishnan13 February 2022, 5:37 pm
தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் திமுக அரசின் 8 மாத ஆட்சி காலத்தில் ஊழல் பெருகிவிட்டது என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
திமுக மீது மக்கள் நீதி மய்யம் பாய்ச்சல்
தற்போது இதில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் சேர்ந்துள்ளது. “திமுக ஆட்சியில் திரும்பிய திசையெல்லாம் லஞ்ச நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையுமே நடப்பதில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட லஞ்சம் வாங்கும் தொகையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை ஊடகங்களில் வெளியான செய்திகளை தொகுத்தால் அதை எழுதுவதற்கு தாள்களும் போதாது, நாட்களும் பத்தாது” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் சிவ இளங்கோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் திமுக அரசை தாக்கியுள்ளார்.
2024ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல்?
இந்த நிலையில்தான் மிகச் சமீபத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசும்போது, “2024-ம் வருடம் சட்டப் பேரவைக்கும் தேர்தல் வரும். அதனால், இன்னும் 27 அமாவாசைக்குத்தான் இந்த ஆட்சி. பிறகு ஆட்சியும் மாறும். காட்சியும் மாறும். காவல்துறை நேர்மையாகச் செயல்பட வேண்டும். அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது எதற்காக?… மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே. ஆனால் இப்போதுள்ள அமைச்சர்கள் எப்படி கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது என்று ஆலோசிக்கிறார்கள். இதுதான் இவர்களது வேலையா? இதில் திறமை வாய்ந்தவர் கரூரில் உள்ளவர். செந்தில் பாலாஜி தலைமேல் கத்தி தொங்குகிறது’ என்று ஆவேசமாக குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது திமுக அரசு எந்த நிவாரண உதவிகளையும் மக்களுக்கு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில் கூறியது என்றாலும் கூட தற்போது மீண்டும் அதுபற்றி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் போட்ட குண்டு
அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் தன் பங்கிற்கு “திமுக ஆட்சி இன்னும் இரண்டு வருடங்களுக்குத்தான் இருக்கும்” என்ற குண்டை தூக்கிபோட்டு திமுகவுக்கு
அதிர்ச்சி அளித்திருக்கிறார்.
அண்மையில் திருச்சியில் அவர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசியபோது, “விளம்பர அரசியல் செய்து, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவினரின் முகத்திரையை கிழிக்க நல்ல வாய்ப்பு தான் இந்த தேர்தல். நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திமுகவினரின் முகத்திரையை கிழிக்கவேண்டும்.
திமுகவுக்கு மரண அடி?
இந்த தேர்தல் நூற்றுக்கு நூறு அதிமுக வெற்றி பெறும் தேர்தல். இதன் மூலம் திமுகவிற்கு மரண அடி கொடுக்கவேண்டும். 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அப்போது நாடாளுமன்றத் தேர்தலைப் போல தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலும் நடக்கும். அதற்கான அச்சாரமாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இருக்கும்” என்று ஒரு போடு போட்டார்.
இதுதான் தமிழக அரசியலில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் கொள்கை அடிப்படையில் 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி “திமுக ஆட்சி இத்தோடு காலி, விரைவில் தேர்தல் வரப்போகிறது” பேசுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் அவருடைய பாணியிலேயே ஓபிஎஸ்சும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கும் என்று ஆருடம் கூறியிருப்பது ஆச்சரியம் தருவதாக உள்ளது.
திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
அத்துடன் தற்போது மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும், திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் பேசும்போது, “குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னீங்களே எப்போ தருவீங்க? என்று உதயநிதியிடம் திமுகவின் பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்களே கேள்வி எழுப்ப அதற்கு உதயநிதி இன்னும் நான்கு வருடங்கள் ஆட்சி இருக்குல்ல என்று பதில் கூறியிருக்கிறார்.
நாலு வருஷம் உங்க ஆட்சி இருக்குமா? என்று எனக்கு தெரியாது. அது உங்க கையிலதான் இருக்கு.
ஆனால் தினமும் தமிழக ஆளுநர் ரவியையும், பிரதமர் மோடியையும் வம்புக்கு இழுத்து தரக்குறைவாக பேசுவதை திமுக இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஏன்னா நாங்க பழைய பாஜக இல்லை. புதுசு. அதனால வட்டியும் முதலுமா சேர்த்து கொடுப்போம் “என்று அதிரடி காட்டி இருக்கிறார்.
பதில் பேச மறுக்கும் திமுக அமைச்சர்கள்
திமுக அரசில் ஊழல் நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, டெல்லியில் அரசியல் விமர்சகர்கள், மூத்த செய்தியாளர்கள் இதை ஒரு விவாதப் பொருளாக பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “திமுக அரசில் இதுவரை நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல அமைச்சர்கள் மீது தகுந்த ஆதாரங்களுடன் பகிரங்க குற்றம்சாட்டுகளை முன் வைத்து இருக்கிறார். அதற்கு முன்புவரை தேவையின்றி வம்புக்கு இழுத்த அமைச்சர்கள் தற்போது அண்ணாமலை எழுப்பும் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்வதே கிடையாது.
தமிழகத்தில் தங்கள் கட்சி இன்னும் நல்ல வளர்ச்சி காணவேண்டுமென்கிற உத்வேகத்தில் இந்த குற்றச்சாட்டுகளை பாஜகவினர் ஆதாரத்துடன் வைப்பதால் அவர்களை திமுகவாலும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தமிழகத்தில் அதிகரிக்கும் மோடியின் செல்வாக்கு
அதனால்தான் உள்ளூர் பிரச்சினைகளுக்கெல்லாம் திமுகவினரும் அவர்களின் கூட்டணி கட்சியினரும் தேவையின்றி நாட்டின் பிரதமர் மோடியை அவதூறாக விமர்சிக்கும் நிலைமை உருவாகிவிட்டது.
இது தமிழகத்தில் மோடி மீதான செல்வாக்கை அதிகரிக்கவே செய்யும். தமிழக பாஜக தலைவர் எழுப்பும் கேள்விகளுக்கும் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் எதற்கெடுத்தாலும் மோடி மீது பாய்வது சரியல்ல என்று தமிழக மக்கள் கருதுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் பாஜக வலிமையுடன் திகழும்.
அதேநேரம் அந்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுடன், நாடு முழுவதும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தலை நடத்தி இரண்டுக்குமே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்கிற தனது திட்டத்தை பாஜக நிறைவேற்றுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டு விட்டால் இதுதொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றி அதை நிறைவேற்றவும் செய்யலாம்.
ஏனென்றால் சட்டப்பேரவைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தும்போது அதற்கான செலவீனங்கள், துணை ராணுவத்தின் பாதுகாப்பு தேவை என்று பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்வது அடியோடு தவிர்க்கப்படும். அதை மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இதனால்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற லட்சிய கொள்கையை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. அதை மனதில் வைத்துத்தான் அதிமுக தலைவர்கள் 2024-ல் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் என்று கூறிவருகின்றனர்.
திமுகவை சிக்க வைக்கும் அண்ணாமலை
ஆனால் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 2026 வரை, நீங்கள் தாக்குப்பிடிக்க மாட்டீர்கள் என்று திமுகவினருக்கு சவால் விடுத்து பேசுவது, திமுக அரசு எப்படியும் ஏதாவது ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் என்ற நம்பிக்கையில்தான்.
மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்குவதாக திமுக அளித்த வாக்குறுதி மீது உதயநிதி சொன்ன பதிலும், தற்போது திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி நிச்சயம் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று பேசியிருப்பதும் இதை நிறைவேற்றாவிட்டால் அடுத்து வரும் தேர்தல்களை சந்திக்க முடியாது என்ற பயம் திமுகவிடம் ஏற்பட்டு இருப்பதையே காட்டுகிறது.
அதனால்தான் முதலமைச்சர் ஸ்டாலினும் 2021 தேர்தலின்போது திமுக அளித்த அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று தற்போது கூறியிருக்கிறார்.
அதேநேரம் ஊழல் இல்லாத அளவிற்கு ஆட்சியை நடத்த வேண்டிய நிர்ப்பந்தமும் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த விஷயத்தில் தமிழக பாஜக மிகவும் கண்கொத்திப் பாம்பு போல செயல்படுகிறது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.