அண்ணனும், தம்பியும் சிக்குவார்களா?…ED தீட்டிய நூதன பிளான்!
Author: Udayachandran RadhaKrishnan24 July 2023, 5:01 pm
சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் 16ம் தேதி பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே
64 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜுன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.
புழல் சிறையில் செந்தில்பாலாஜி
அப்போது ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சரியாக ஒரு வாரம் கழித்து இதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஜூலை 17ம் தேதி மாலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி கைதி என்பதை குறிக்கும் விதமாக 001440 என்ற நம்பரும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர் முதல் வகுப்பு கைதி என்பதால் கட்டில், மெத்தை, தலையணை, டிவி, நாற்காலி, மேஜை, நவீன கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
சிறையில் தாராள வசதி
சிறப்பு உணவாக காலையில், மிளகு வெண் பொங்கல், உப்புமா, கஞ்சி வழங்கப்படுகிறது. இட்லி அல்லது தோசை கேட்டாலும் செய்து கொடுக்கப்படும்.
மதியத்திற்கு சாதம், சாம்பார், கூட்டு அல்லது பொரியல் தரப்படும். வாரத்தில் 3 நாள் அசைவம் வழங்கப்படும். சைவம் வேண்டும் என்று கேட்டால் அதுவும் தரப்படும்.
இரவு நேரத்தில் அவருக்கு சப்பாத்தியும் வழங்கப்படுகிறது.
வெளியில் இருந்து உணவு கொண்டு வந்து வழங்குவதற்கு அனுமதி இல்லை. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் விரும்பினால் சிறப்பு அனுமதி பெற்று சமைத்து கொண்டு போய் கொடுக்கலாம்.
சிறையில் திரைமறைவு தில்லாலங்கடி
இந்த நிலையில்தான் புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராஜ உபசரிப்பு அளிக்கப்படுவதாக பிரதான எதிர்க் கட்சியான அதிமுக குற்றம்சாட்டியது. அதேபோல டிஐஜி ஒருவரும் சட்ட விதிகளை மீறி கைதி செந்தில் பாலாஜியை அவ்வப்போது சந்தித்து அவருக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்து தருவதாகவும் சில ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியானது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று அதை உடனடியாக மறுக்கவும் செய்தனர்.
அதேநேரம் செந்தில் பாலாஜிக்காக சிறையில் நடந்து வருவதாக கூறப்படும் திரைமறைவு தில்லாலங்கடி வேலைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
அமலாக்கத்துறை போட்ட பிளான்
குறிப்பாக சிறை விதிகளை மீறும் விதமாக வெளியில் இருந்து அவர் தனக்கு விரும்பிய உணவை ஆர்டர் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வருவதை அமலாக்கத்துறை கண்டு பிடித்துள்ளது, என்கிறார்கள். இதற்காக சிறைக் காவலர்கள் பயன்படுத்தும் பொது செல்போன் மூலம் காவலர் ஒருவருக்கு கடந்த 17ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி முடிய 15 நாட்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த குறிப்பிட்ட செல்போன் எண்ணுடன் சிறைக்காவலர் ஒருவரின் வங்கி கணக்கும் இணைக்கப்பட்டு ஒரு பிரபல ‘ஆப்’ வழியாக பணம் அனுப்புவது மற்றும் பெறுவதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. அந்த செல்போன் எண் நிரந்தரமாக
எந்த காவலரிடம் இருக்காது. பணியில் இருக்கும் காவலர்களில் ஒருவர்தான் அந்த போனை வைத்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தபோன் நம்பர் வாயிலாகத்தான் பணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளதும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்து இருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் தீவிரமாக விசாரித்து வருவதால் சிறைக்குள் இருந்தாலும் புதிய ரூபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கலும் முளைத்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.
அது மட்டுமல்லாமல் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் இது பெரிய தலைவலியாக உருவெடுக்கலாம்.
இப்படி சிறையில் இருக்கும் போதே சட்ட விதிகளை அமைச்சர் மீறுகிறார், தனக்குள்ள செல்வாக்கை வைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார், எனவே செந்தில் பாலாஜியை எங்களின் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்கிற வாதத்தை வரும் 26 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடக்க இருக்கும் விசாரணையில் அமலாக்கத்துறை வைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். அது தொடர்பாக தாங்கள் திரட்டியுள்ள ஆதாரங்களை கோர்ட்டில் அமலாக்கத்துறை சமர்ப்பித்தால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதிக்கவும் செய்யலாம்.
ED வலையில் சிக்கும் அசோக்குமார்
இதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், கடந்த இரண்டு மாதங்களாக அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகாமல் போக்கு காட்டி வருகிறார்.
அவருக்கு 4-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மன் மீதான கெடு
வரும் 27-ந்தேதியோடு முடிகிறது. அன்றும் அவர் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகாமல் அல்வா கொடுத்தால், அவரை தலைமறைவு மற்றும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே ஜூலை 27-ந்தேதி ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனுக்கு, நான் இதய நோய் சிகிச்சையில் இருந்து வருவதால், அச்சிகிச்சை முடிய சில மாதங்கள் வரை ஆகலாம். எனவே நேரில் ஆஜராக 6 மாத கால அவகாசம் வேண்டும் என கடிதம் மூலமாக அசோக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அந்த கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்து விட்டது.
இதனால் அசோக்குமார் பாடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சரி, இதுபற்றி டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் என்ன சொல்கிறார்கள்?….
வாயை திறக்காத திமுக
“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக 50, 60 லட்சம் ரூபாய் பீஸ் வாங்கும் பிரபல வழக்கறிஞர்களை வைத்து திமுக சட்ட ரீதியாக போராடிவரும் நிலையில், அவருடைய தம்பி அசோக்குமாரும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்காக அமலாக்கத்துறையின் விசாரணைக்குள் இருப்பவர்தான். ஆனால் அசோக்குமாரை பற்றி திமுக தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.
தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் அசோக் குமாரின் இருப்பிடத்தை மத்திய உளவுத்துறை கண்டறிந்து அமலாக்கத்துறைக்கு தெரியப்படுத்தியும் விட்டது. இதனால், 27-ந்தேதி அசோக்குமார் ஆஜராகாமல் தவிர்த்தால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விட்டு கைது செய்யும் அதிரடி நடவடிக்கையிலும் அமலாக்கத்துறை இறங்கும்.
அதேநேரம் 26ம் தேதி சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜியும், அவருடைய சகோதரர் அசோக்குமாரும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே திட்டமிட்டு நாடகத்தை நடத்துகின்றனர்.
மீண்டும் நெஞ்சு வலியா?
ஏற்கனவே நெஞ்சு வலிப்பதாக கூறி, செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு விட்டார். இப்போது அசோக்குமாரும் தனக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதாக கூறி விசாரணையை தவிர்க்க பார்க்கிறார்.
இப்படி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் அனைவருமே அமலாக்கத் துறையின் கைதை தவிர்ப்பதற்காக, மருத்துவ சிகிச்சையை காரணமாக கூறினால் அமலாக்கத்துறையால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போய் விடும். நாட்டில் சட்டவிரோதமாக பணம் சேர்ப்பவர்களையும், பரிமாற்றம் செய்பவர்களையும் தடுக்க இயலாத நிலையும் ஏற்பட்டு நாட்டுக்கு எதிரான அவர்களின் சட்ட விரோத செயல்களுக்கு அங்கீகாரமும், ஊக்கமும் அளிப்பதுபோல ஆகிவிடும்.
அதன் காரணமாக அமலாக்கத்துறை என்னும் சிறப்பு புலனாய்வு விசாரணை அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கமே அடிபட்டுப் போய்விடும் என்பன போன்ற வாதங்களும் முன் வைக்கப்படலாம்.
சொந்தக் காசில் சூனியம்
எப்படி பார்த்தாலும், செந்தில் பாலாஜியும் அவருடைய தம்பி அசோக்குமாரும் அமலாக்கத் துறையிடம் சிக்குவது உறுதி. தவிர, தங்களை விட அதி புத்திசாலிகள் வேறு யாருமே இல்லை என்ற அதீத நம்பிக்கையுடன் அவர்கள் இருவரும் செயல்படுவது, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல்தான் இருக்கிறது. இதற்கு அமலாக்கத்துறை நிச்சயம் முற்றுப்புள்ளி வைத்து விடும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
என்ன நடக்கப் போகிறது?… என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
0
0