98% வடிகால் பணி முடிந்தது என கூறிய அமைச்சர்.. இப்போ 42% முடிந்ததாக சொல்கிறார்.. ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? அண்ணாமலை சுளீர்!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 4:49 pm

98% வடிகால் பணி முடிந்தது என கூறிய அமைச்சர்.. இப்போ 42% முடிந்ததாக சொல்கிறார்.. ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? அண்ணாமலை சுளீர்!

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த பெரும் மழையால் சென்னையே தண்ணீரில் தவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்படச் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவருகிறது. அதிகாரிகளும், பேரிடர் மீட்புக்குழுவினரும் தொடர்ந்து மழைநீரை வெளியேற்றுதல், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகின்றனர். அதேசமயம், `முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன.

அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், `சென்னை மாநகரில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக தி.மு.க அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நடந்து முடிந்த பணிகளின் பட்டியலை வெளியிட தி.மு.க அரசு தயாரா… பணி முடிந்த ஒவ்வோர் இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கைத் தரத் தயாரா… பணிகள் 100 சதவிதம் முடிந்த இடங்கள், தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை தி.மு.க அரசின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

ஏதாவது சொல்லி, ஏமாற்றித் தப்பித்துவிடலாம் என்று இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்கள் நினைத்தால், அதற்குண்டான பதிலைப் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் வெளிப்படுத்துவார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மாநகர நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி. ஆனால் இதுவரை ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. மீதமுள்ள 3,000 ரூபாய் கோடிக்கானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதைபற்றி விமர்சித்துள்ள அண்ணாமலை, தனது X தளப் பக்கத்தில், கடந்த மாதம் திமுக அமைச்சர் கே.என் நேரு, புயல் நீர் வடிகால் தொடர்பான 98% பணிகள் முடிந்துவிட்டதாகவும், ஒரு மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழையை வெளியேற்றும் திறன் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

ஆனால், இன்றைய செய்தியில், 42% மழைநீர் வடிகால் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக திரு கே.என்.நேரு உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் பதிவிட்ட அண்ணாமலை, சென்னை மக்களுக்கு பேரழிவு ஏற்படுத்திய இந்த வெள்ளத்திற்கு பிறகாவது ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையைப் பேசுமா? என பதிவிட்டுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!