12 தொகுதிகளை திமுக கூட்டணி இழக்கிறதா?… சர்வே முடிவுகளில் திடுக்!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 9:23 pm

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் பொங்கல் பண்டிகைக்கு பிறகுதான் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பே விறுவிறுப்பாக தொடங்கி விட்டதை பார்க்க முடிகிறது.

சென்னை நகரில் சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 20 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுக யாருடனும் இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை என்றாலும் கூட இந்த 20 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

அதேநேரம் கூட்டணியில் கட்சிகள் இணைவதைப் பொறுத்து இதில் ஒரு சில தொகுதிகளை அதிமுக விட்டுக் கொடுக்கவும் செய்யலாம்.

தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, பொள்ளாச்சி, மதுரை, சிவகங்கை, கரூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய
20 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது.

இதில் முன்னாள் அமைச்சர்களில் அன்வர் ராஜா ராமநாதபுரத்திலும், எம் ஆர் விஜயபாஸ்கர் கரூரிலும், கே சி வீரமணி வேலூரிலும், கோகுல இந்திரா சிவகங்கையிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவது நிச்சயம் என்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென் சென்னையிலும், கே பி முனுசாமியின் மகன் சதீஷ் கிருஷ்ணகிரியிலும், அன்பழகனின் மகன் சந்திரமோகன் தர்மபுரியிலும், நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணன் திண்டுக்கல்லிலும் போட்டியிடுகிறார்கள். இது தவிர திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனுக்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களில் புது முகங்களாக கோவையில் ஷர்மிளா சந்திரசேகர், திருவண்ணாமலையில் ஜெயசுதா, வடசென்னையில் ராயபுரம் மனோ, பொள்ளாச்சியில் கல்யாணசுந்தரம் தஞ்சாவூரில் சேகரும் நிறுத்தப்படுகிறார்கள்.

இதுதவிர முன்னாள் எம்பிக்கள் சிலருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்களில் கோகுல இந்திரா, ஷர்மிளா சந்திரசேகர், ஜெயசுதா மூவரும் பெண்கள் ஆவர்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், என்னவென்றால் அதிமுகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் பொதுவெளியில் தெரிய வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின்படி முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தரப்பில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த இரண்டு ரகசிய சர்வேக்கள் பற்றிய தகவலும் வெளியானது.

ஆனால் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் இருந்து இந்த இரண்டு சர்வேக்களும் முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. ஏனென்றால் எத்தனை தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு அதன் அடிப்படையில் இந்த இரண்டு சர்வேக்களும் எடுக்கப்பட்டிருந்தன. திமுக இளைஞர் அணியினரின் முதல் சர்வே 2023 டிசம்பர் மாதத்துக்கு முந்தையது. இரண்டாவது சர்வே 2024ம் ஆண்டின் முதல் வாரத்தில் எடுக்கப்பட்டது, என்கிறார்கள்.

முதல் சர்வேயில் திமுக கூட்டணிக்கு அதிக பட்சமாக 32 தொகுதிகள் கிடைக்கும் என்றும், இரண்டாவது சர்வேயில் 27 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு எனவும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வேலூர், கடலூர், சிவகங்கை, நெல்லை, கோவை, திருச்சி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய 12 தொகுதிகளிலும் தற்போதைய எம்பிக்களே போட்டியிட்டால் வெற்றியை நினைத்துப் பார்க்க முடியாது என்ற அதிர்ச்சி தரும் தகவல் இரண்டாவது சர்வேயில் வெளிப்பட்டுள்ளதாம்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் திமுக பொருளாளரான டி ஆர் பாலு
கடந்த முறை ஸ்ரீபெரும்புதூரிலும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சியிலும் போட்டியிட்டு வென்றவர்கள் என்பதுதான். அதேபோல திருச்சியில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசரும், சிவகங்கையில் ஜெயித்த கார்த்தி சிதம்பரமும் காங்கிரசை சேர்ந்தவர்கள். ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக்கும், கோவையில் மார்க்சிஸ்ட்டும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் வடசென்னை, ஈரோடு, பெரம்பலூர், கரூர், கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 6 தொகுதிகளில் இழுபறி நிலைமை காணப்படுதாகவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சர்வே ரிப்போர்ட்டுகளை பார்த்து அமைச்சர் உதயநிதி அதிர்ந்து போனார் என்றும் அதனால்தான் திமுக கூட்டணி எம்பிக்களில் 15 பேருக்கு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்ற முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

“திமுக இளைஞரணி எடுத்துள்ளதாக கூறப்படும் சர்வேக்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது என்று நம்பலாம்” என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேசிய அளவில் ஒரு பிரபல நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு அதிகபட்சமாக 32 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 6 இடங்களிலும், பாஜகவுக்கு ஓரிடத்திலும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது.

ஆனால் தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதமும், இந்த மாதமும் 17 மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ள நிலையை திமுக அரசு சரிவர கையாளத் தவறிவிட்டது என்ற மனக்குமுறல் பாதிக்கப்பட்ட 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் உள்ளது. என்னதான் வெள்ள நிவாரணத் தொகையாக 6000 ரூபாயும், சில இடங்களில் ஆயிரம் ரூபாயும் திமுக அரசு கொடுத்தாலும் கூட பல லட்ச ரூபாய் உடமைகளை இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்தவர்களுக்கு இது மிக
மிக சொற்பம்தான்.

இதேபோல தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி நடத்திய போராட்டம்,
அரசு பேருந்து நடத்துனர்கள், ஓட்டுநர்கள் நிலுவையில் உள்ள 96 மாத அகவிலைப்படியை வழங்குவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிய வேலை நிறுத்தம், தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அமல்படுத்த
தொடர்ந்து கோருவது, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, சிறு குறு தொழில்கள் பாதிப்பு, மின் கட்டணம் மற்றும் சொத்து வரி கடும் உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு போன்றவையும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கலாம்.

என்னதான் அரசு சாதாரண டவுன் பஸ்களில் மகளிர்க்கு இலவச பயணம், ஒரு கோடியே 10 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்று ஒரு சில வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருந்தாலும் கூட திமுக ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் ஆளும் கட்சி மீது எப்போதுமே மக்களிடம் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவிற்கு அதிருப்தி ஏற்படுவது இயல்பான ஒன்று. அதனால் எந்த தேர்தல் யுக்திகளைக் கையாண்டாலும் திமுக கூட்டணியால் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்ற முடியுமா என்பது சந்தேகம்தான்.

திமுகவுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் ராமநாதபுரத்தில் அன்வர் ராஜாவையும், வேலூரில் கே.சி வீரமணியையும், சிவகங்கையில் கோகுல இந்திராவையும்,கரூரில் எம் ஆர் விஜயபாஸ்கரையும் அதிமுக நிறுத்த முடிவு செய்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

இதேபோல தமிழக பாஜகவும் கட்சியின் முக்கிய தலைவர்களை வேட்பாளர்களாக களம் இறக்கினால் திமுகவின் பாடு திண்டாட்டம்தான்.

திமுக கூட்டணி தோற்கும் என்று கருதப்படும் 12 தொகுதிகளில் ஒன்பது இடங்கள் வரை அதிமுகவுக்கும் பாஜகவுக்கு மூன்று இடங்களும் கிடைக்கலாம். இழுபறியாக உள்ள 6 தொகுதிகளில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் தலா மூன்று எம்பிக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இப்போதைய நிலையில் திமுக கூட்டணியால்
21 எம்பி சீட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடியும் என்பதுதான் எதார்த்தமான உண்மை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

கூட்டணி அமைவதைப் பொறுத்தும் வெற்றி வாய்ப்பு கூடவோ, குறைவோ செய்யலாம் என்பதால் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பே இது பற்றி முழுமையாக தெரியவரும். அதுவரை பொறுத்திருப்போம்.

  • Tamannaah marriage rumors கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
  • Views: - 438

    0

    0