திமுக போடும் 2024 கணக்கு கைகொடுக்குமா?…கலக்கத்தில் காங். கம்யூனிஸ்டுகள்!!
Author: Udayachandran RadhaKrishnan22 September 2022, 10:22 pm
2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக தேசிய அளவில் பாஜக இப்போதே தயாராகி வருகிறது. 2019 தேர்தலில் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட144 தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு தீவிர பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல்!!
இம்முறை எப்படியும் 400 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றிவிடவேண்டும் என்பதை இலக்காக வைத்து ஏற்கனவே பல மாநிலங்களில் பாஜக தேர்தல் பணிகளை தொடங்கியும் விட்டது.
இதற்காக தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தம்பட்டம் அடிக்கும் எதிர்க்கட்சிகள்
அதேநேரம் எதிர் வரிசையில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா போன்ற கட்சிகள் 2024 தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் இதற்கான முன்னெடுப்புகள் எதுவும் இதுவரை தீவிரமாக மேற்கொள்ளப்படவில்லை. மம்தா, கெஜ்ரிவால், ஸ்டாலின், நிதிஷ் குமார் போன்ற சில முதலமைச்சர்கள் அவ்வப்போது எதிர்கட்சிகளின் ஒற்றுமை குறித்து ஆவேசமாக பேசினாலும் அதை மற்ற மாநில கட்சிகள் அவ்வளவாக கண்டு கொள்வது இல்லை.
இதற்குக் காரணம் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த தங்களை விட்டால் வேறு யாருமே கிடையாது என்பதுபோல அந்த கட்சித் தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதுதான்.
தனி ரூட்டில் ராகுல் காந்தி
எனினும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2024 தேர்தலைக் குறிவைத்து, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூர இந்திய ஒற்றுமை என்னும் பாத யாத்திரையை நடத்திவருகிறார்.
200 தொகுதிகளில் நேருக்கு நேர் பாஜகவுடன் மோதும் நிலை தங்கள் கட்சிக்கு மட்டுமே இருக்கிறது. அதனால் கடைசி நேரத்தில் அத்தனை எதிர்க்கட்சிகளும் காங்கிரசைத்தான் தேடிவரும். அப்போது பிரதமர் வேட்பாளர் போட்டியில் எதிர்க்கட்சிகள் சார்பில் தான் மட்டுமே பிரதானப்படுத்தப் படுவோம் என்பது ராகுலின் கணக்காக உள்ளது.
நாற்பதும் நமதே, நாடும் நமதே
இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு திமுக முப்பெரும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் “நாற்பதும் நமதே, நாடும் நமதே” என்ற புதிய முழக்கத்தை எழுப்பினார்.
அதாவது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றவேண்டும் என்பது அவருடைய ஆசையாக உள்ளது.
திமுகவின் புதிய வியூகம்
அதனால் தமிழகத்தில் பாஜகவுக்கு இணையாக, திமுகவும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து இப்போதே மிகுந்த கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது.
இதற்காக வலுவான கூட்டணி ஒன்றை அமைக்க திமுக தலைவர் ஸ்டாலின் விரும்புவதும் வெளிப்படையாக தெரிகிறது.
தங்கள் கூட்டணியில் பாமக,தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளை சேர்க்க, திமுக தலைமை திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதை மனதில் கொண்டுதான் அண்மையில் ஸ்டாலின் பேசும்போது, “2024 நாடாளுமன்ற தேர்தலில், தேசிய அளவில் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள, எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் முடியும். ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக சென்றால் அது நிச்சயம் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்’ என்றும் கூறியிருந்தார்.
இதன் மூலம் 2024 தேர்தலில், தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியை உருவாக்கிட திமுக தீவிர முனைப்பு காட்டுவது தெரிகிறது.
இதுதொடர்பாக, திமுக வட்டாரத்தில் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியை தவிர, மற்ற கட்சிகள் அப்படியே நீடிக்கின்றன. ஆனால், தொகுதி பங்கீட்டில் சில மாற்றங்களை செய்து, அணியை பலப்படுத்த, கூடுதலாக சில கட்சிகளையும் சேர்க்க கட்சி தலைமை திட்டமிட்டு இருக்கிறது.
பாமக, தேமுதிக, மநீம
கடந்த 2019 தேர்தலில், காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. அதில் தமிழகத்தில், 8 தொகுதிகளும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் வரும் தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 4 தொகுதிகளுடன், புதுச்சேரியும் சேர்த்து ஒதுக்கப் படலாம். பாமக, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளையும் சேர்த்து, அணியை பலப்படுத்த கட்சி மேலிடம் திட்டமிடுவதுதான் இதற்கு காரணம்.
பாமகவிற்கு தர்மபுரியும், பெரம்பலூரும் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியை பாமக கேட்டால், காங்கிரசுக்கு வேறு தொகுதியை ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மநீம, தேமுதிக கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்க கட்சி தலைமை விரும்புகிறது.
தமிழக காங்.,க்கு கல்தா
நடிகர் கமல் போட்டியிடும் வகையில் கோவை நாடாளுமன்றத் தொகுதி அவருக்கு ஒதுக்கப்படலாம். இப்படி 3 முக்கிய கட்சிகள் கூட்டணிக்குள் வருவதால்தான் காங்கிரசுக்கான தொகுதிகளை 5 ஆக குறைக்க முடிவு செய்து இருக்கிறோம்” என்று அவர்கள் கூறியதாகத் தெரிய வருகிறது.
“திமுக நிர்வாகிகள் சிலர் கூறுவதை வைத்து பார்க்கும்போது ஸ்டாலின் போடும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு அவர்களுக்கு வேண்டுமானால் சரியான கணிப்பாக தோன்றலாம். ஆனால் இதில் ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல்கள் உள்ளன” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளே பாதியாக குறையும்போது, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. அந்த கட்சிகளுக்கும் தொகுதிகள் சரிபாதியாக குறைக்கப்படும் நிலை உருவாகலாம்.
மேலும் காங்கிரசில் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட சீட் கிடைக்குமா? என்பதும் சந்தேகம்தான்.
விசிக, கம்யூ., நிலை என்ன?
மதிமுகவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒரு தொகுதி கூட ஒதுக்கவிட்டாலும் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டுவிடும். ஏனென்றால் திமுகவுடன் மதிமுக இணைந்து விட்டது போலத்தான் அரசியல் வட்டாரத்திலும், மக்களாலும் பார்க்கப்படுகிறது. அதனால் அக்கட்சிக்கு இது ஒரு பெரிய இழப்பாகவே இருக்காது.
விசிகவைப் பொறுத்தவரை திருமாவளவன், தனக்கு எம்பி சீட் கிடைத்தாலே போதும் என்று ஒதுங்கிக்கொண்டு விடலாம். ஆனால் பாமக கூட்டணிக்குள் வருவது அவருடைய கட்சிக்கு பெரும் நெருடலாக இருக்கும். அதேநேரம் கம்யூனிஸ்டுகளுக்குத்தான், சரி பாதி தொகுதிகள் குறைப்பு என்பது கௌரவப் பிரச்சனையாக மாறும்.
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டால் தேசிய கட்சியான தங்களுக்கு எதிர்கால அரசியலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கருத வாய்ப்புள்ளது. அதனால் திமுக அமைக்கப்போகும் மெகா கூட்டணி விஷயத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது.
மக்களுக்கு பயந்து திமுக பிளான்
இதையெல்லாம் விட இன்னொரு மிகப் பெரிய கேள்வியும் எழுகிறது. கடந்த 2019 தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தமிழகம் புதுச்சேரியை சேர்த்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39-ஐ கைப்பற்றியது. அப்படி இருக்கும்போது ஒரே ஒரு தொகுதியில் கூடுதலாக வெற்றி பெறுவதற்காக திமுக ஏன் மிகப்பெரிய கூட்டணி ஒன்றை 2024 தேர்தலில் அமைக்க விரும்புகிறது என்பதுதான் அந்தக் கேள்வி.
இதற்கு முக்கிய காரணம், திமுக அரசு மீது தமிழக மக்களுக்கு எழுந்துள்ள அதிருப்திதான் என்றே சொல்லவேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினாலும் சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு போன்றவற்றாலும் கொரோனாவாலும் அவர்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2024 தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அதன் காரணமாகவே திமுக தலைவர் ஸ்டாலின் தனது கூட்டணியை இன்னும் வலுப்படுத்த நினைக்கிறார், என கருதத் தோன்றுகிறது. ஏனென்றால் திமுக அரசு மீதுள்ள அதிருப்தியால் நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகள் கணிசமாக குறையும் போது கூட்டணி கட்சிகளின் வாக்குகள் வெற்றியைப் பெற்றுத் தந்து விடும் என்று அவர் கணக்கு போடுகிறார்.
வாக்கு சதவீதம்
அதேநேரம் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி கொண்ட கூட்டணி அமைந்தால் திமுக எதிர்பார்ப்பது போல 40 தொகுதிகளையும் கைப்பற்றுவது மிகக் கடினமாக அமையும். தற்போதைய நிலையில் இந்த கூட்டணி 25 இடங்கள் வரை கைப்பற்றி விட வாய்ப்பு உள்ளது. அதனால்தான் அதிமுக, பாஜக கூட்டணி வலுவடைந்து விடாமல் இருக்க பாமகவையும், தேமுதிகவையும் தன் பக்கம் இழுக்க திமுக முயற்சிக்கிறது.
தேசிய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணையவில்லை என்றாலும் கூட எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தமிழகத்தில் தங்கள் கூட்டணியின் வெற்றி சதவீதம் ஒருபோதும் குறைந்து விடக்கூடாது என்றும் திமுக கருதுகிறது” என அந்த அரசியல் ஆர்வலர்கள் திமுக அமைக்க திட்டமிடும் புதிய கூட்டணி குறித்து தங்களது மதிப்பீட்டை வெளிப்படுத்துகின்றனர்.