மதுவுக்கு ஆதரவாக எம்எல்ஏ குரல் கொடுப்பதா?…காங். MLAவால் வெடித்த சர்ச்சை!
Author: Udayachandran RadhaKrishnan13 April 2023, 8:53 pm
தமிழக சட்டப்பேரவையில் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா வைத்த ஒரு கோரிக்கை அக்கட்சினரை மட்டுமின்றி சமூக நல ஆர்வலர்களையும் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
சபையில் அவர் பேசியது ஒரு சில நிமிடங்கள்தான் என்றாலும் கூட வைத்த கோரிக்கையோ குடும்பத் தலைவிகள் அனைவரையும் முகம் சுளிக்க வைப்பதாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
பரபரப்பை கிளப்பிய காங்., எம்எல்ஏ
அதுவும் மதுவுக்கு எதிராக தீவிரமாக போராடும் 138 ஆண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு இளம் எம்எல்ஏவா இப்படி பேசினார், இதை நம்ப முடியவில்லையே? என்று பலரையும் கொதிப்படைய வைக்கும் விதமாக அவருடைய பேச்சு அமைந்திருந்ததுதான் இதற்கு காரணம்.
சட்டப்பேரவையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா, திமுக அரசிடம் இதுவரை யாருமே வைக்காத ஒரு புதிய கோரிக்கையை வைத்தார்.
மதுவிற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்
“மாநிலத்தில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்கவேண்டும் என்றால் டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்கலாம்.
தமிழகத்தில் காற்றாலை, சூரிய ஒளி மூலமும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல கடல் அலைகள் மூலமும் மின் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாதம் தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைந்து செயல்படுத்த வேண்டும். மின் நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்களை விரைவாக வழங்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் வைத்தார்.
எரிசக்தி தொடர்பாக ஹசன் மௌலானாவின் பேச்சு மின் நுகர்வோரிடையே பாராட்டைப் பெற்றாலும் கூட அதை அப்படியே மறக்கடிக்கச் செய்யும் விதமாக டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை மேலும் ஒரு மணிநேரம் அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி பேசியதுதான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
500 மதுபானக் கடைகள் மூடப்படும்!!
ஏனென்றால் 2022-23-ம் ஆண்டு டாஸ்மாக் மூலமாக தமிழக அரசுக்கு 44,098 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த 2021 -2022-ம் ஆண்டு வருவாயான 36,050 கோடி ரூபாயை விட 8,047 கோடி அதிகம். டாஸ்மாக்கின் இந்த வருமானம் நடப்பு நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, தமிழகத்தில் தற்போது மொத்தம் 5329 டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் உள்ளன.இதில் இந்த ஆண்டு 500 கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய படிப்படியாக மதுபான கடைகளை குறைப்போம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்கிற அறிவிப்பாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த தகவல்களை வெளியிட்டு இருந்தாலும் கூட இன்னொரு பக்கம் ஹசன் மௌலானா வைத்த கோரிக்கையை திமுக அரசு ஏற்றுக்கொண்டு விடுமோ என்ற பீதியை சமூக நல ஆர்வலர்களிடமும், மதுவுக்கு எதிராக போராடும் மகளிர் அமைப்புகளிடமும் ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக நல ஆர்வலர்கள் வேதனை
“காங்கிரஸ் எம்எல்ஏவின் கோரிக்கை மிகுந்த வேதனை அளிக்கிறது. கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை ஆவதை தடுக்க அவர் கூறும் யோசனை ஏற்புடையது அல்ல. அது தமிழகத்தில் மேலும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதைத்தான் ஊக்குவிக்கும்” என்று சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“இரவு 10 மணிக்கு டாஸ்மாக் மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடைகள் முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளில் பெண்கள் நடமாட முடியாத சூழலும் உள்ளது.
தற்போது மதியம் 12 மணி முதல் இரவு பத்து மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடக்கிறது. ஹசன் மௌலானா கோரிக்கையின்படி கூடுதலாக ஒரு மணி நேரத்தை அதிகரித்தால் மதியம் 12 மணிக்கு தொடங்கும் விற்பனை11 மணிக்கே ஆரம்பித்து விடும். அல்லது இரவில் விற்பனை முடிய 11 மணி ஆகும்.
காங்கிரஸ் கட்சியே ஏற்காது
இதுபோன்ற சூழலில் கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அதை கண்காணித்து தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஹசன் மௌலானா வைத்திருந்தால் அவரைப் பாராட்டி இருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லாமல் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கவேண்டும் என்று அவர் கூறியிருப்பதை அவரை சார்ந்தவர்களோ, பூரண மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியினரோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் உண்மை! மேலும் ஹசன் மௌலானா இதை ஏன் இந்த நேரத்தில் கூறவேண்டும் என்று அவரைச் சுற்றியுள்ளோர் சரமாரியாக கேள்விகளை எழுப்பும் தர்ம சங்கட நிலையையும் அவருக்கு உருவாக்கி விட்டுள்ளது.
ஏனென்றால் பூரண மதுவிலக்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலையாய கொள்கை. 1937-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால்கொண்டுவரப்பட்ட பூரண மதுவிலக்கு 1971ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது என்பதை ஹசன் மௌலானா அடியோடு மறந்துவிட்டார் போலிருக்கிறது.
கனிமொழி பேசியது ஞாபகம் வரவில்லையோ
இரண்டாவதாக மது எந்த அளவிற்கு குடும்பத்தை சீரழிக்கும் என்பதை யாரும் அவருக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமும் இல்லை.அதனால்தான் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் மிக அதிகம் இருக்கிறார்கள் என்று திமுக எம்பி கனிமொழியும் முன்பு வேதனை தெரிவித்திருந்தார்.
கூட்டணி கட்சியின் முக்கிய பெண் எம்பி ஒருவரே இப்படிக் கூறியது காங்கிரஸ் எம்எல்ஏவின் நினைவிற்கு வராமல் போனது ஆச்சரியம் தான்.
ஒருவேளை, திமுக தலைமையிடம், தான் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காக அவர் இப்படிச் சொன்னாரா என்பதும் தெரியவில்லை. ஆனாலும் இந்த கோரிக்கை அதிகப்படியானதுதான்.
இதனால் மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் போது செயல்பாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரத்தை அதிகரிக்க காங்கிரஸ் எம்எல்ஏவின் கோரிக்கையை திமுக அரசு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் டாஸ்மாக்கிற்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும் என்பதும் நிச்சயம்.
மௌலானா கோரிக்கை நியாயம்தான்
அதேநேரம் வீடுகளில் மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்களை விரைவில் பொருத்த வேண்டும். மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஹசன் மௌலானா கோரிக்கை வைத்து இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.
அதற்கேற்பத்தான் மூன்று கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் விரைவில் பொருத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் அறிவித்திருக்கிறார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி, ஏற்கனவே மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை எப்போது நடைமுறைப்படுத்தப்படும் மின்துறை அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கும் பணி முடிவடைந்த பின்பு அது அமலுக்கு வரும் என்று அவர் உறுதி கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
எனவே அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாதாந்திர மின்கட்டண முறை நடைமுறைக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் திமுக அரசின் 53 சதவீத மின் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ஓரளவு பணச்சுமை குறைய வாய்ப்பு உண்டு.
அதேநேரம் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அந்தப் பணத்தை வாங்க யார் யார் தகுதி உடையவர்கள்? என்று பல்வேறு நிபந்தனைகளை இப்போது விதிப்பதுபோல் மாதாந்திர மின்கட்டணம் செலுத்தும் முறையிலும் ஏதாவது கடும் நிபந்தனைகளை திமுக அரசு வைத்து விடக்கூடாது” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.