அதிக எம்.பி சீட் தருவீங்களா?… மாட்டீங்களா?… திமுகவை அதிர வைக்கும் காங்.!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2024, 9:36 pm

அதிக எம் பி சீட் தருவீங்களா?… மாட்டீங்களா?… திமுகவை அதிர வைக்கும் காங்.!!

நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எல்லா கட்சிகளிடமும் எழுந்துள்ள நிலையில் எந்தெந்த தொகுதியில் யார் யாரை நிறுத்தலாம் என்று வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் அளவிற்கு பெரும்பாலான கட்சிகள் தீவிரமாக இறங்கியும் விட்டன.

தமிழகத்தை பொறுத்தவரை இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவுக்கும், அதில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கும் இடையே பொங்கல் பண்டிகைக்கு பின்பு தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இண்டியா கூட்டணியில் இருக்கும் 28 கட்சிகளும் தொகுதி பங்கீட்டை விரைவில் நடத்தி முடிக்கவேண்டும் என்று கடந்த மாதம் 19ம் தேதி டெல்லியில் நடந்த இதன் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்தும் கேட்டார்.

மிக அண்மையில் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி, பொறுப்பாளர் அஜய்குமார், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்களை அவர் டெல்லிக்கு அழைத்து ஆலோசனையும் நடத்தினார்.

அப்போது கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள், வெற்றி பெற்ற தொகுதிகள், இந்த தேர்தலில் கேட்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, வெற்றி வாய்ப்புகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

2019 தேர்தலில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி என 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தேனியை தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் அக்கட்சி வென்றது.

எனவே கடந்த தேர்தலில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக ஐந்து தொகுதிகளை கேட்கவேண்டும். கூட்டணி கட்சிகளுக்காக திமுக விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் நமக்கு 12 தொகுதிகளுக்கு ஒன்று குறையக்கூடாது என்று கார்கே தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது.

ஆனால் டெல்லி மேலிடம் எதிர்பார்ப்பதுபோல 12 தொகுதிகள் ஒருபோதும் ஒதுக்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு தகவலை திமுக கார்கேவிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறது.

அதில் 2019 தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் முழுமையாக அப்படியே மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நாங்கள் சுழற்சி முறையில் தொகுதிகளை கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கையில்
எந்த மாற்றமும் கிடையாது. அதே நேரம் தொகுதிகள் மாறுபடும் என்று அறிவாலயம் குறிப்பிட்டு உள்ளது, என்கிறார்கள்.

அதனால் கடந்த முறை காங்கிரஸ் ஜெயித்த சில தொகுதிகளில் போட்டியிட திமுகவும், ஒரு சில கூட்டணி கட்சிகளும் விரும்புவது வெளிப்படையாகவே தெரிகிறது. குறிப்பாக கரூர், திருச்சி, விருதுநகர் போன்றவற்றில் திமுக போட்டியிடுவதில் மிகவும் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 32 தொகுதிகள் வரை இந்த மாற்றம் இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.

இதனால் காங்கிரசும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படலாம். அப்படியென்றால் மாற்று தொகுதிகளாக எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது? அதற்கு பதிலாக எந்த தொகுதியை கேட்பது? என்ற குழப்பம்தான் ஏற்படும்.

இந்த நிலையில்தான் கடைசி நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் ஏதாவது தொகுதிகளை பெற வேண்டிய சூழ்நிலையை தவிர்ப்பதற்காக காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து அந்த பட்டியலையும் தருமாறு காங்கிரஸ் மேலிடம் கே எஸ் அழகிரியிடம் கேட்டு இருக்கிறது.

இதையடுத்து புதிதாக 12 தொகுதிகள் பட்டியலை தமிழக காங்கிரஸ் தயாரித்துள்ளது. அதில் தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த தொகுதிகளை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தேர்வு செய்திருப்பதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே பல நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் இங்கே போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதுதான்.

இவற்றில் தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்றவை கடந்த தேர்தலில் திமுக வென்ற தொகுதிகள் ஆகும்.
தாங்கள் ஜெயித்த இடங்களை திமுக கேட்பதால் அதற்கு போட்டியாக காங்கிரஸ் இப்படி கேட்பது போல் தெரிகிறது.

“12 தொகுதிகளுக்கு குறையாமல் எங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் வைத்திருப்பதால் திமுகவின் தேர்தல் பணிக்குழுவில் உள்ள தலைவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் இருக்கின்றனர். இது எதில் போய் முடியும் என்பதுதான் தெரியவில்லை” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“இதற்கு காரணம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதுதான். தொகுதி பங்கீடு சிக்கலில் திமுகவும், காங்கிரசும் மோதிக் கொள்ளலாம் என்று அதிமுக கருதுவதால் காங்கிரசை தங்கள் பக்கம் இழுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி
14 தொகுதிகள் வரை அக்கட்சிக்கு ஒதுக்க தயாராக இருக்கிறார், என்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்ட திமுக தலைமை காங்கிரசுக்கு 9 தொகுதிகளும்,
ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் வழங்குவதாக உறுதியளித்து உள்ளதாக தெரிகிறது. ஆனால் காங்கிரஸோ எங்களுக்கு அதிமுக குறைந்தபட்சம் 12 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் தருவதாக கூறியிருக்கிறார்கள். எனவே சென்ற தேர்தலை விட எங்களுக்கு இரண்டு தொகுதிகளாவது நீங்கள் கூடுதலாக தரவேண்டும் என்று பேரம் பேசிக் கொண்டிருக்கிறது.

அதேநேரம் காங்கிரசுக்கு எவ்வளவு தொகுதிகளை திமுக அதிகமாக ஒதுக்குகிறதோ அந்த அளவிற்கு நமக்கு லாபம் என்று அதிமுக கருதுகிறது. ஏனென்றால் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினால் திமுக, அதிமுக, பாஜக இடையே நிலவும் பலத்த மும்முனை போட்டியில் குறைந்தபட்சம் காங்கிரசுக்கு எதிராக ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்று அதிமுக தலைமை கணக்கு போடுகிறது.

அதேநேரம் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லாததை சுட்டிக் காண்பித்து திமுகவை டெல்லி மேலிட காங்கிரஸ் தலைமை அச்சுறுத்துவதும், காங்கிரசை தங்கள் பக்கம் இழுப்பதற்கு அதிமுக தொடர்ந்து முயற்சிப்பதும், பாமக எந்தக் கூட்டணியில் இடம் பெறும் என்பதே தெரியாத நிலையும் தமிழக அரசியல் களத்தில் சுவாரசியமான வேடிக்கை காட்சிகளாக உள்ளன” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, யார் யார் எந்தக் கூட்டணியில் சேருவார்கள் என்பது முடிவாகி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் வரை பிரதான கட்சிகளின் இதுபோன்ற தூண்டில் போடும் வேலைகளுக்கு பஞ்சமே இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 328

    0

    0