பட்டியலினத்தவரை தவறாக பேசிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? அண்ணாமலை நறுக்!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2024, 10:42 am

நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை கைது செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

ஆனால் நேற்று மாலையே அவர் விடுவிக்ப்பட்டார். இந்த நிலையில் இது குறித்து அண்ணாமலை திமுக அரசுக்கு பல கேள்விகளை அடுக்கியுள்ளார்.

அவர் தனது X தளப் பதிவில், பல ஆண்டுகளுக்கு முன்பு யாரோ எழுதிய பாடலை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திரு. சாட்டை துரைமுருகன் அவர்கள் மேடையில் பாடினார் என்பதற்காக அவரைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அத்தோடு நில்லாமல், அந்தப் பாடலில் இடம் பெற்ற வார்த்தைக்காக, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள், அதே வார்த்தையைப் பலமுறை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போதெல்லாம் தவறாகத் தெரியாதது, தற்போது மட்டும் எப்படித் தவறானது என்பதை, வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாவது, தமிழக காவல்துறை ஆலோசித்திருக்கவேண்டும்.

தினமும் கொலை, கொள்ளை என, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தத்தளித்து வரும் தமிழகத்தை, சீரான பாதையில் கொண்டு செல்ல எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சமூக வலைத்தளங்களிலும், பொதுமேடைகளிலும் திமுகவினரை விமர்சிப்பவர்களை மட்டும் கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம்.

பட்டியல் சமுதாயத்தைத் தவறாகப் பேசினார் என்று திரு. சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியை, தகாத வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதோ, பட்டியல் சமுதாய மக்கள் பிரதிநிதி ஒருவரை, பொது மேடையில் வைத்து சமுதாயத்தை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீதோ, என்ன நடவடிக்கை எடுத்தது?

போலி சமூக நீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்காக பட்டியல் சமூக மக்களைப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், திரு. சாட்டை துரைமுருகன் மீது தொடர்ந்துள்ள போலி வழக்கைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

உண்மையாகவே முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களுக்கு, பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறை இருந்தால், மூச்சுக்கு முந்நூறு முறை, நான் கருணாநிதியின் மகன் என்று கூறிக்கொள்ளும் அவர், திரு. சாட்டை துரைமுருகன் பேசிய அதே வார்த்தையைப் பயன்படுத்திய அவரது தந்தை மறைந்த கருணாநிதி சார்பாக மன்னிப்பு கேட்பாரா? என பதிவிட்டுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 197

    0

    0