‘ஓசி பணத்துக்கு நிற்க மாட்டியா..? சேர் கேட்குதா..?’ மகளிர் உரிமைத் தொகைக்காக வந்த பெண்களை வசை பாடிய அதிகாரி..!!
Author: Babu Lakshmanan21 September 2023, 3:49 pm
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களை அதிகாரி ஒருவர் ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயை கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில், சுமார் 56 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இது பெரும் பேசு பொருளான நிலையில், உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத ஆயிரக்கணக்கான பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பத்தின் நிலை குறித்து பெண்களிடம் கூறப்பட்டு வருகிறது. கூட்டம் அதிகரித்து வருவதால் பெண்கள் முண்டியடித்துக் கொண்டு டோக்கன் வாங்க முயற்சி செய்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனால் போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் கூட வழங்க முடியாமல் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முயற்சித்த போதும், பெண்கள் கூட்டம் அலைமோதியதால், நெருக்கடி ஏற்பட்டு சில முதியவர்கள் மயக்கம் அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், டோக்கன் வழங்க பெண்களை ஒரு அறைக்குள் அமர வைக்கப்பட்டதால், அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் பெண்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி கட்டுக்கடங்காமல் இருந்த பெண்களை பார்த்து ஆவேசத்தில் வசைபாடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அதிகாரி எருமை மாடுகளா, அறிவு இல்லையா, சோத்தை தானே திங்குறீங்க. ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா, உக்கார சேர் கேக்குதா? என்று பேசினார்.
இதனை அருகில் இருந்த நபர் தனது செல்போனில் படம் பிடிக்கத் தொடங்கியதும். நான் பேசியது தவறு தான் என்று வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, இலவசப் பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களை ஓசியில் தானே போறீங்க என அமைச்சர் பொன்முடி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களை ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா..? என்று தரம்தாழ்ந்து அதிகாரி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.