போலீசார் பறிமுதல் செய்யும் வாகனங்களை விற்பதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி: போலி பெண் போலீஸ் கைது..கணவருக்கு வலைவீச்சு..!!

Author: Rajesh
1 March 2022, 11:04 am

ராணிப்பேட்டை: காவல் துறையினர் பறிமுதல் செய்யும் வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த போலி பெண் உதவி காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகரை சேர்ந்தவர் வியாபாரி தினேஷ்குமார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் சுங்கவார் சத்திரத்தை சேர்ந்த ரோகினியோடு அறிமுகியுள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் ரோகினியிடம் பேசுகையில், நான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்ததாகவும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வேலூரில் ஒரு வேலை விஷயமாக தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காவலர் சீருடையில் இருக்கும் புகைப்படம், அடையாள அட்டையும் காண்பித்த அவர், காவல் துறையினரால் பல்வேறு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை விற்பனை செய்து வருகிறேன். எனவே வாகனங்கள் ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம். பிற இடங்களை விட குறைந்த விலையில் வாகனங்கள் தருகிறேன் என்று தினேஷ்குமாரிடம் கூறி உள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய அவர் முதற்கட்டமாக 2 கார்கள் தேவை என்று முன்பணமாக ரூ.2 லட்சத்தையும், மீதமுள்ள 12 லட்சத்தை ரோகிணியின் கணவர் சந்துருவின் வங்கிக்கணக்கில் சில நாட்களில் செலுத்தி உள்ளார். மேலும் இது குறித்து தினேஷ்குமார் தனது நண்பர்களிடம் தெரிவித்ததையடுத்து அதன்பேரில் 2 நண்பர்கள் 2 கார் தேவை என்று தலா ரூ.5 லட்சம் கொடுத்துள்ளனர்.

அதனையும் தினேஷ்குமார், சந்துருவின் வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். ஓரிரு வாரங்களில் 4 கார்களையும் கொடுப்பதாக ரோகினி கூறிய நிலையில் சில வாரங்கள் ஆகியும் கார்களை வழங்கவில்லை. இதையடுத்து தினேஷ்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதற்க்கு சரியான பதில் தெரிவிக்காமல் காலம் கடத்தி மோசடி செய்து வந்துள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் கடந்த 25ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணனிடம் புகார் அளித்துள்ளார். எஸ்பி உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், ரோகினி வேலூரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் நேற்று ரோகினியை கைது செய்து அவரிடமிருந்து போலியான சப்&இன்ஸ்பெக்டர் சீருடை, அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் ரோகினிக்கு உடந்தையாக இருந்த அவருடைய கணவர் சந்துருவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கடந்த 2012ம் ஆண்டு போலீஸ் சீருடையில் சுற்றித்திரிந்ததாக வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் ரோகினி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1535

    0

    0