குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை.. யாரெல்லாம் தகுதியானவர்கள் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு
Author: Babu Lakshmanan27 March 2023, 2:33 pm
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் மிக முக்கியம் வாய்ந்த, இல்லத்தரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்போடு இருந்து மாதம் ரூ.1000 உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியானது.
அதில், தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில், தற்போது தகுதி வாய்ந்த மகளிருக்கு என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது :- ஆணின் உழைப்பிற்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. பெண்களின் அங்கீகாரமாகவே இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது.
யுனிவர்சல் பேசிக் இன்கம் என்ற பெயரில் சோதனை முறையில் பல்வேறு நாடுகளில் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் வறுமை பாதியாக குறைய வாய்ப்புள்ளது.
நடைபாதையில் கடை நடத்தும் மகளிர், சொற்ப ஊதியத்தில் பணியாற்றும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், மீனவ பெண்கள் உள்ளிட்ட 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு வங்கி கணக்குகளில் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும். விரைவில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும், என அறிவித்துள்ளார்.