மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்… யாரெல்லாம் தகுதியானவர்கள்…? விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு அறிவிப்பு!
Author: Babu Lakshmanan27 June 2022, 1:57 pm
சென்னை : உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார் எல்லாம் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளை கடந்து விட்ட நிலையில், பணம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற இன்னும் காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது. இதனால், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதனை எதிர்கொள்ள முடியாமல், அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களும் மலுப்பலான பதிலை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மாதத்தில் இருந்து கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஜுலை மாதம் முதல் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இந்த நிலையில், ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு வழிகாட்டு முறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது :- மாணவிகள் 6 முதல் 12 வரை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டிலேயே உயர்கல்வி பயில வேண்டும். தனியார் பள்ளியில் RTE-ன் கீழ் 6 முதல் 8 வரை பயின்ற பின் 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தாலும் திட்டத்தில் பயன்பெறலாம்.
தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. 2022-23ல் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயன்பெற முடியும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகள் பயன்பெற முடியாது. இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவம் பயிலும் அனைத்து மாணவிகளும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1
1