மகளிர் உரிமைத் தொகை : 63 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு? அதிரடி ஆய்வில் இறங்கும் அதிகாரிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan24 August 2023, 10:00 pm
மகளிர் உரிமைத் தொகை : 63 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு? அதிரடி ஆய்வில் இறங்கும் அதிகாரிகள்!!
செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் என அறிவித்தது. இதற்கு விண்ணப்பிக்கும் முகாம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. முதல் கட்ட முகாம் ஆகஸ்டு 4 ஆம் தேதி நிறைவடைந்தது.
அதன் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் 2 ஆம் கட்ட முகாம் நடைபெற்றது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 2 ஆம் கட்ட முகாம் நிறைவடைந்தது.
2 ஆம் கட்ட முகாமிலும் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆகஸ்டு 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தியது. இந்த 3 முகாம்களின் மூலமாக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்து உள்ளன.
ஆனால், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கிடையாது என்று அரசு அறிவித்தது.
அதேபோல், சொந்த பயன்பாட்டுக்கு 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள், மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிமைத் தொகை கோர முடியாது.
முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களும் உரிமைத் தொகையை பெற முடியாது என்று அரசு அறிவித்தது.
விண்ணப்பங்களில் சரியான தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளதா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது.
ஒரு கோடி பேருக்கே உரிமைத் தொகை என அரசு முடிவு செய்த நிலையில் கூடுதலாக இருக்கும் 63 லட்சம் பேரை வடிகட்டுவதற்காக வீடு வீடாக சென்று அரசு ஆய்வு மேற்கொண்டு தகுதியற்ற விண்ணப்பதாரர்களை நீக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.