செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி… 20வது முறையாக காவல் நீட்டிப்பு ; நாளை செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜர்…!!

Author: Babu Lakshmanan
15 February 2024, 5:48 pm

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, நீதிமன்ற காவல் 19 முறை நீட்டிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் வந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவரை நீக்காமல் பிடிவாதமாக இருந்து வந்தார். அதேவேளையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதினாலேயே அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது, அமைச்சர் பதவியில் இருந்த போது அதிகாரத்தை பயன்படுத்தி, சாட்சியங்களை கலைக்க நேரிடும் என்ற அமலாக்கத்துறையின் முறையீடு, தற்போது செல்லாததாகி விட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவோடு, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அல்லி, நாளைய தினம் வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

  • Simran Slams Actress Talked About Aunty Roles Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?