‘பாலியல் தொல்லை… சாதி பெயரைச் சொல்லி திட்டினாரு’.. விசிக நிர்வாகி விக்ரமன் மீது இளம்பெண் வழக்கறிஞர் புகார்..!!!
Author: Babu Lakshmanan21 July 2023, 12:55 pm
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி விக்ரமன் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளராக இருப்பவர் ஆர்.விக்ரமன். இவர் அண்மை காலமாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. பெண்கள் மட்டுமல்லாது ஆண்களுக்கும் இவர் பல்வேறு வகையில் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், காதல் என்ற போர்வையில், பாலியல் சித்ரவதை செய்ததாகவும், தன்னிடம் பண மோசடி செய்ததாக இளம்பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான விக்ரமன் விக்ரமன் தன்னை காதலிப்பதாகக் கூறி நடித்து, தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியதுடன், பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதோடு, தன்னை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுடன், தற்போது வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விக்ரமன் மீது அவர் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடத்தில் புகார் அளித்தபோது, தன்னிடம் வாங்கிய 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில், 12 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும், ஆனால் கட்சி சார்பில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே, போலீசார் தலையிட்டு விக்ரமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் வழக்கறிஞர், சென்னை காவல் ஆணையரிடம் வலியுறுத்தியள்ளார்.