பெண் காவலர்கள் குறித்து அவதூறு… சவுக்கு சங்கரை தொடர்ந்து யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது!!
Author: Babu Lakshmanan11 May 2024, 10:42 am
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை தொடர்ந்து யூடியூபர் ஃபெலிக்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மே 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தவிர கஞ்சா கடத்தல் வழக்கு உள்பட 6 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளது. இதனிடையே, பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் அவரை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் ஃபெலிக்ஸ் ஜெரால்டையும் கைது செய்ய வேண்டும் என்று வீரலட்சுமி சென்னை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் முயற்சி.. பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!!!!
மேலும், சென்னை உயர்நீதிமன்றமும், யூடியூப் சேனல்களை ஒழுங்குபடுத்த இதுதான் சரியான நேரம் என்றும், பெண்கள் குறித்து அவதூறு பேசும் யூடியூப் சேனல் நிர்வாகியை முதல் குற்றவாளியாக சேர்க்கலாம் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில், ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் ஃபெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, 2022ல் கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது அரசியலில் இருக்கும் பெண்கள் குறித்து தவறாக பேசியதற்காக யூடியூபர் ஃபெலிக்ஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அந்த வழக்கிற்காக ஃபெலிக்ஸ் ஜாமின் பெற்றது குறிப்பிடத்தக்கது.