சவுக்கு சங்கர் வழக்கில் அதிகாரமிக்க நபர் அழுத்தம்… தீர்ப்பை வாசித்த நீதிபதி பகீர்… மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்
Author: Babu Lakshmanan24 மே 2024, 6:23 மணி
சவுக்கு சங்கர் வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெண் போலீசார் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: கட்டு கட்டாக பழைய ரூ.500, ரூ.1000 செல்லாத நோட்டுகள்… ரூ.1 கோடி பறிமுதல் ; பிரபல ரவுடி கைது…!!!
குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் நேற்று தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அசல் ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், இறுதி விசாரணை இன்று நடைபெறும் என தெரிவித்தனர்.
அதன்படி , வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்ற போது, இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர். அதாவது, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமி நாதன் உத்தரவிட்டார். இந்த உததரவை பிறப்பித்த போது, அதிகாரமிக்க நபர்கள் என்னிடம் பேசியதால் தான் சவுக்கு சங்கர் வழக்கில் அவசர அவசரமாக இறுதி விசாரணை நடத்தியதாக நீதிபதி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, திமுக அரசை பற்றி விமர்சித்ததன் காரணமாக, சவுக்கு சங்கரும், அவரது சவுக்கு மீடியாவும் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர். மேலும், சிறையில் சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து என்றெல்லாம் அவர்கள் கூறி வரும் நிலையில், நீதிபதியின் இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டுள்ளனர்.
0
0