திமுக ஒதுக்கத் தயங்கும்5 தொகுதிகள்?… பங்கீடு முடிந்தும் திணறும் காங்.
Author: Udayachandran RadhaKrishnan14 March 2024, 10:12 am
திமுக கூட்டணியில் ஒரு வழியாக கடந்த வாரம் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக 21, காங்கிரஸ் 9, விசிக 2, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மதிமுக 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, முஸ்லிம் லீக் 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
திமுக கூட்டணியில் கடைசியாக கதவைத் திட்டிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனுக்கு 2025 ம் ஆண்டு, ஒரு ராஜ்ய சபா எம்பி பதவி தருவதாக உறுதியளித்து, அவரையும் தங்களது கூட்டணியில் திமுக தலைமை இழுத்துப் போட்டுக் கொண்டு விட்டது.
இதில் கொங்கு நாடு கட்சி திமுக சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் திமுக 22 இடத்தில் போட்டியிடுவதாகவே கணக்கில் கொள்ளப்படும்.
கடந்த முறை விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தனித் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் ஈரோட்டில் மதிமுக தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தியும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டார்.
ஆனால் இம் முறை விசிக விழுப்புரத்திலும், மதிமுக திருச்சியிலும் தங்களது கட்சி சின்னத்திலேயே களம் காண்பதால் சென்ற தேர்தலை விட ஒட்டு மொத்தமாக திமுக இரண்டு இடங்கள் குறைவாகத்தான் போட்டியிடுகிறது.
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, திருவண்ணாமலை, அரக்கோணம், கரூர், சேலம், தர்மபுரி, பெரம்பலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், பொள்ளாச்சி, கோவை, வேலூர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம்,தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய 21 தொகுதிகளில் திமுக களம் இறங்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில்தான் அறிவாலயத்திடம் போராடி ஏதோ ஒரு வழியாக எண்ணிக்கை குறையாமல் ஒன்பது தொகுதிகளை வாங்கி விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு குடைச்சலை கொடுக்கும் விதமாக திமுக ஒரு கிடுக்குப் பிடியை போட்டு இருக்கிறது.
குறிப்பாக, காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை பிரித்து கொடுப்பது என்பதில்தான் பெரும் சிக்கலே ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், சிவகங்கை, தேனி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய
9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
அப்போது காங்கிரஸ் ஜெயித்த கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகள் அக் கட்சிக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளது.ஆனால் கரூர், திருச்சி தொகுதிகளுக்கு பதிலாக ஈரோடு, மயிலாடுதுறை தொகுதிகளும் தரப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கு முக்கிய காரணம் திருச்சி, கரூர், ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி தொகுதிகளில் திமுக இளைஞரணி நடத்திய ரகசிய சர்வேயில் தற்போதைய காங்கிரஸ் எம்பிக்களின் செயல்பாடுகளால் மக்களிடம் கடும் அதிருப்தி காணப்படுகிறது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் வெற்றி பெறுவது கடினம். அது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துவிட வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சர்வே அறிக்கையை காங்கிரஸ் தலைவர்களிடம் கொடுத்து மாற்று வழியை ஆராயும்படி திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் பழைய தொகுதிகளை தர நாங்கள் தயார். ஆனால் வேட்பாளர்கள் புதிதாக இருக்கவேண்டும் என்று திமுக தலைமை நிபந்தனையும் விதித்துள்ளது, என்கிறார்கள். இதனால் தமிழக காங்கிரஸ் அதிர்ந்து போய் இருக்கிறது.
தற்போதைய எம்பிக்கள் டெல்லி மேலிடம் மூலம் அளிக்கும் நெருக்கடிகளால் ஏற்கனவே வென்றவர்களின் தொகுதியை விட்டுக் கொடுக்க முடியாமல் செல்வப் பெருந்தகை தவியாய் தவிக்கிறார்.
2019 தேர்தலில் திருச்சியில் 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், திருநாவுக்கரசர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை நியாயப்படுத்தும் மதிமுகவுக்கு அந்த தொகுதியை எப்படி எங்களால் தாரை வார்க்க முடியும்? என்று காங்கிரஸ் குமுறுகிறது.
ஆரணிக்கு பதிலாக கடலுாரை தருவதாக திமுக கூறுகிறது. ஆனால் காங்கிரசோ அரக்கோணத்தை கேட்டு மல்லுக் காட்டுகிறது. கரூருக்கு பதிலாக தென்காசியை கேட்க அதற்கும் திமுக சம்மதிக்கவில்லை.
அதேபோல் கரூர் தொகுதிக்கு பதிலாக ஈரோடு தொகுதியை கொடுக்க திமுக முன்வந்துள்ளது. இதனால் ஜோதிமணி எம்பி ஈரோட்டில் போட்டியிட மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை காங்கிரஸ் கேட்டது. ஆனால் அந்த தொகுதியை திமுக தற்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
இப்படி தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடந்த நான்கு நாட்களாக இழுபறி நீடித்து வருகிறது.
இதுகுறித்து மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “திமுக ஒதுக்கியவாறு
9 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டோம். ஆனாலும் அதில் ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றுங்கள் என்று திமுக ஏன் கூறுகிறது என்பதுதான் புரியவில்லை.
2019 தேர்தல் போலவே கூட்டணி மிக வலிமையாக உள்ளதால் நாம் 39 தொகுதிகளையும் எளிதில் கைப்பற்றி விட முடியும். தவிர அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அப்படி இருக்கும்போது ஒவ்வொரு தொகுதியிலும் முந்தைய தேர்தலை விட கூடுதலாக இன்னும் பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நம்மால் வெற்றி பெற்று விட இயலும்.
திருநாவுக்கரசர்,ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், டாக்டர் செல்லகுமார், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேர் மீதும் திமுக தலைமைக்கு ஏன் கடுமையான கோபம் என்பதுதான் தெரியவில்லை.
எங்களது கட்சியில் மூத்த தலைவர்கள் போட்டியிடும் விதமாக தொகுதிகளை ஒதுக்க மறுப்பதும், வேறு இடங்களை வழங்குவதும் ஏற்கக் கூடியது அல்ல. ஏனென்றால் இது திட்டமிட்டு நடத்தப்படுவது போல் இருக்கிறது.
அதைவிட மிகக் கொடுமை 2019 தேர்தலில் வென்றவர்களில் சிலர் மீண்டும் போட்டியிட்டால் அவர்கள் தோல்வி அடைவார்கள் என்ற காரணத்தை கூறி அந்த தொகுதியில் புதியவர்களை வேட்பாளர்களாக நிறுத்துங்கள் என்று திமுக தலைமை கூறுவது எங்களது கட்சியின் உள் விவகாரத்தில் தலையிடுவது
போல் ஆகும்” கொந்தளிக்கின்றனர்.
மூத்த அரசியல் நோக்கர்களோ, “காங்கிரஸ் என்னதான் கொந்தளித்தாலும் தொகுதி பங்கீட்டு பேச்சின்போது, திமுக ஒரு முக்கிய நிபந்தனை விதித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எக்காரணம் கொண்டும் டெல்லி மேலிடம் மூலம் இவர்களை நீங்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று எங்களுக்கு நெருக்கடி தரக்கூடாது என திமுக கூறி இருந்தது.
அதனால்தான் திருநாவுக்கரசர், விஷ்ணு பிரசாத், டாக்டர் செல்லகுமார், ஜெயக்குமார் போன்றவர்களை தேர்தலில் நிறுத்தாமல் மறுபரிசீலனை செய்யுங்கள் என்று திமுக தலைமை கறாராக கூறி இருக்கிறது. சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அழுத்தம் காரணமாக ஜோதி மணிக்கு கரூரை கொடுக்காமல் திமுக ஈரோட்டை ஒதுக்குகிறது. ஆனால் டெல்லி காங்கிரஸோ இந்த ஐந்து பேரையும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிறுத்தப்பட்டால் அங்கு திமுக சார்பில் வலிமையான வேட்பாளர் களம் காண வேண்டும் என்பதற்காகத்தான் மார்க்சிஸ்ட் வசம் இருந்த தொகுதியை தற்போது திமுக எடுத்துக் கொண்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியே இப்படி ஒரு தொகுதியில் தனது வேட்பாளரை
திமுகவுக்காக விட்டுக் கொடுத்து விட்டது.
அதனால் தமிழக காங்கிரஸுக்கும் வேறு வழி இல்லை. கடைசியில் திமுக சொல்படிதான் கேட்டு நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். எனவே முந்தைய தேர்தலில் ஜெயித்த திருநாவுக்கரசர், விஷ்ணு பிரசாத், டாக்டர் செல்லகுமார், ஜெயக்குமார் ஆகியோர் வரும் தேர்தலில் போட்டியிடாமல் ஓரம் கட்டப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்”என்கின்றனர்.
திமுகவுடன் தொகுதி பிரிப்பில் தடுமாறும் தமிழக காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!