இது பழிவாங்கும் நடவடிக்கை… வாதத்தை கேட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்… உடனே அமர்பிரசாத் ரெட்டி பகிர்ந்த புகைப்படம்..!!
Author: Babu Lakshmanan7 February 2024, 8:51 pm
பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர்களில் முக்கியமானவர்களில் அமர்பிரசாத் ரெட்டி. இவர், பாஜக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில தலைவராக உள்ளார். மாநில தலைவர் அண்ணாமலையின் வலது கரம் என்றும் கூட கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸாரில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. அவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது இந்த பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், இது பொய் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்கு என்றும், அண்ணாமலையின் நடைபயணத்துக்கு உதவியாக இருந்த அமர் பிரசாத் ரெட்டிக்கு எதிராக உள்நோக்கத்தோடு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதாடினாரெ. எனவே, அமர்பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது, அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும், பெண் நிர்வாகியை, தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் அளித்த புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 10 நாள்களுக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன்
அமர்பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவ்வாறு ஆஜராகாவிட்டால் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி காவல்துறை மனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கிய சில நிமிடங்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகத்தோடு அவர் மேற்கொண்டிருக்கும் ஆன்மீகப் பயணத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். போலீசார் தேடி வந்த நிலையில், அவர் ரிஷேகேஷியில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்ததை அமர் பிரசாத் ரெட்டி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.