அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் திருட்டு… ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மோட்டார்களை அகற்றி அதிகாரிகள் அதிரடி..!!
Author: Babu Lakshmanan23 March 2022, 10:01 pm
அமராவதி ஆற்றில் ஆயில் இன்ஜின் மூலம் நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் மோட்டார்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் சூழலில் ஆறுகளிலேயே ஆயில் இன்ஜின் பொறுத்தப்பட்டு அதன் மூலம் மோட்டர்கள் கொண்டு நீரினை உறிஞ்சி குடிநீராக வேன் மற்றும் லாரிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சட்டவிரோத செயல்கள் கரூர் அமராவதி ஆறுகளில் ஆற்றின் கரையோரம் இருபகுதிகளிலும் நடைபெற்று வந்தன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர், மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேல்நடவடிக்கை எடுத்து ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அந்த மோட்டார்களை அகற்றியது.
இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவுப்படி கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர், மண்மங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 வட்டங்களில் நீர்நிலைகளில் பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாக அமராவதி ஆற்றங்கரைகளில் 269 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அதை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதில் மண்மங்கலம் வட்டம், தாளப்பட்டி கிராமத்தில் அமராவதி ஆற்றில் குழாய் பதித்து, ஆயில் இன்ஜின் வைத்து சட்டவிரோதமாக நீரை உறிஞ்சி எடுத்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மண்மங்கலம் தாசில்தார் ராதிகா மற்றும் அமராவதி வடிநில உபகோட்ட உதவி பொறியாளர் ராஜகோபால் தலைமையில் வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, காவல்துறை அதிகாரிகள் ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் மோட்டார்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தாளப்பட்டி கிராமத்தில் மட்டும் 15 இடங்களில் ஆயில் இன்ஜின் வைத்து, பைப் லைன் அமைத்து மோட்டார் மூலமாக ஆற்று நீரை சட்டவிரோதமாக உறிஞ்சுவது கண்டறியப்பட்டு ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டுள்ளது.
0
0