அழகு நிலையத்தில் கொள்ளை முயற்சி : மூன்றாவது கண் மூலம் சிக்கிய சிறை குற்றவாளி…
Author: kavin kumar2 February 2022, 5:23 pm
புதுச்சேரி : புதுச்சேரியில் அழகு நிலையத்தை உடைத்து திருட முயன்ற தமிழகத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் நகர் பகுதியான பாரதி விதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் அவரது கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளார். இது குறித்து குமார் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் தலையில் குல்லா மாட்டி கொண்டு கடையின் பூட்டை ஒருவர் உடைப்பது போன்று கேமிராவில் பதிவான உருவம் கடந்த 31 ஆம் தேதி ஒதியாஞ்சாலை போலீசாரால் குடி போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திருவாரூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பது தெரியவந்தது. அடுத்து சிறையில் இருந்த ராஜமாணிக்கத்தை போலீசார் காவலுக்கு எடுத்து விசாரணை நடத்தியதில், அவர் மீது திருவாருரில் வீட்டை உடைத்து கொள்ளை அடித்தது, பைக் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர்.