எதிர்கட்சிகளை கவனம் பெறச் செய்த 200வது தொகுதி ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை ; டெல்லியில் இருந்து வந்த சிக்னல்…!!
Author: Babu Lakshmanan12 February 2024, 3:37 pm
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். சட்டமன்ற தொகுதி வாரியாக நடந்து வரும் இந்த யாத்திரையானது, 200வது தொகுதியில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் வடமாநில கலவரங்களை சுட்டிக்காட்டி, போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், பொதுகூட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
அதன்படி, துறைமுகம் தொகுதிக்குட்பட்ட தங்கசாலை பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாநில செயலாளரும், துறைமுகம் தொகுதி பொறுப்பாளருமான வினோஜ் பி செல்வம் முன்னின்று செய்தார். இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டார். அப்போது, மேடையில் ஜேபி நட்டாவுக்கு நினைவு பரிசை வினோஜ் பி செல்வம் வழங்கி கவுரவித்தார்.
என் மண் என் மக்கள் என்ற இந்த யாத்திரையில் 200வது தொகுதி அண்ணாமலைக்கு சிறப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. எதிர்கட்சியினரே புருவத்தை உயர்த்தும் அளவுக்கு நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது தான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தலைநகரமான சென்னையில் நடக்கும் பாஜகவின் பொதுக்கூட்டம் இது என்பதுதான்.
மேலும், ஜேபி நட்டா பங்கேற்றிருப்பதால் துறைமுகம் தொகுதியில் நடந்த இந்தக் கூட்டமானது டெல்லியில் கவனம் பெறும். எனவே, அண்ணாமலையின் படைத் தளபதி போல இருக்கும் வினோஜ் பி செல்வம் முன்னின்று இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கவனித்துள்ளார். அவருக்கு அண்ணாமலை உள்பட பாஜகவினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட வினோஜ் பி செல்வத்திற்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.