பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்புமனு தாக்கல்… மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை..!!
Author: Babu Lakshmanan25 March 2024, 4:34 pm
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று பவுர்ணமி என்பதால், அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேட்பு மனுவை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து தாக்கல் செய்தார். இதேபோல, தென்சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனும், விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷணனும், பாஜக சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியன் தென்காசியிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த வகையில், மத்திய சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் பி செல்வம், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
இது தொடர்பான வீடியோவை தனது X தளத்தில் பதிவிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தேன்.
மத்திய சென்னையின் மாற்றத்தை விரும்பி போட்டியிடும் எனக்கு மத்திய சென்னை தொகுதி மக்கள் ஆதரவளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.