அமர்பிரசாத் ரெட்டி மீது புகார் கொடுத்த பெண் மீது மோசடி வழக்குப்பதிவு ; ஒன்னே கால் கோடி பணத்தை திருப்பி தராமல் மிரட்டுவதாக புகார்..!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2024, 8:44 pm

அமர்பிரசாத் ரெட்டி மீது புகார் கொடுத்த பெண் மீது மோசடி வழக்குப்பதிவு ; ஒன்னே கால் கோடி பணத்தை திருப்பி தராமல் மிரட்டுவதாக புகார்..!!

அரசு ஒப்பந்ததாரிடம் ஒன்னேகால் கோடி பண மோசடி செய்தததாக பெண் தொழிலதிபர் மற்றும் அவர் தாய் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் 19ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு ஆட்களை அழைத்து வருவதில் பாஜக பெண் நிர்வாகி ஆண்டாள் என்பவருக்கும், நிவேதா என்ற பெண்ணுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பான விவகாரத்தில் கடந்த 21ம் தேதி இரவு அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவியையும், தங்கை ஆண்டாளையும் தாக்கியதாகக் கூறப்பட்டது.

மேலும், பா.ஜ.க பெண் நிர்வாகியைத் தாக்கியதாக அமர்பிரசாத் ரெட்டி மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால்,இந்தக் குற்றச்சாட்டுக்களை அமர்பிரசாத் ரெட்டி தொடர்ந்து மறுத்து வந்தார். மேலும், தன் மீது வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியாக இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும் அவர் கூறி வந்தார். இதனிடையே, அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாகி இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றன. மேலும், அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்ததாகவும் சொல்லப்பட்டது.

இதனிடையே பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன் ஜாமின் கோரி அமர் பிரசாத் ரெட்டிக்கு சென்னை ஹைகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அமர்பிரசாத் ரெட்டி, தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு போலியானது என்பதை நிரூபிப்பேன் என சூளுரைத்திருந்தார்.

இந்த நிலையில், அமர்பிரசாத் ரெட்டியின் மீது புகார் அளித்திருந்த தேவி மற்றும் அவரது மகள் ஒன்னேகால் கோடி ரூபாய் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ஒன் ஸ்டிச் என்ற பெயரில் பொட்டிக் எனப்படும் நவீன நாகரீக துணி கடைகள் தியாகராய நகர், அண்ணா நகர், அடையாறு ஆகிய பகுதிகளில் கிளைகளை ஆரம்பித்து சோனியா ரவிக்குமார் என்பவர் நடத்தி வந்துள்ளார். இவர் ஜெகன் என்பவர் மூலமாக மணிகண்டனுக்கு அறிமுகமானதாகவும், தியாகராய நகரில் உள்ள கிளையை ஆரம்பிப்பதற்கு முதலீடு செய்ததாகவும், தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்டமாக ஏழரை லட்சம் பணம் கொடுத்ததாகவும் துணிகள் வாங்குவதற்காக 50 லட்சம் ரூபாயும் உட்கட்டமைப்பிற்காக 40 லட்ச ரூபாயும் இதர செலவிற்காக 8 லட்சம் என ஒண்ணேகால் கோடி ரூபாய் பணம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே அண்ணா நகரில் நடத்தி வரும் கிளைக்கு பல்வேறு உபகரணங்கள் வாங்கி கொடுத்ததாகவும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை தானே செலுத்தி வந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு பலமுறை தெரிவித்தும் சோனியா ரவிக்குமார் மறுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வற்புறுத்தும் பொழுது நீ யார் உன்னிடம் பணமே வாங்கவில்லை என நடித்ததாகவும், பலமுறை நள்ளிரவிலும் பல்வேறு நேரங்களிலும் குடித்துவிட்டு தகாத வார்த்தையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது சோனியா ரவிக்குமார் மற்றும் அவரது தாய் தேவி சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்

இந்த புகாரின் அடிப்படையில் சோனியா ரவிக்குமார் மற்றும் அவரது தாய் தேவி ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று பலரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் புகார் அளித்த தேவி மற்றும் அவரது மகள் மீது பண மோசடி வழக்கு சென்னை மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை தனது X தளத்தில் பகிர்ந்த அமர்பிரசாத் ரெட்டி, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பின்னணியாக இருக்கும் திமுகவின் மோசடி கும்பலை கடவுளாக அம்பலப்படுத்தி விட்டார். என் மீது ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர், எனது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்தது எதற்காக என்பது குறித்து மட்டுமல்லாமல், தன்னை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்தது ஏன்.? என்று தற்போது தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 278

    0

    0