களைகட்டிய கிறிஸ்துமஸ்… வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கோலாகலம் ; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Author: Babu Lakshmanan
25 December 2023, 9:28 pm

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் ஏசு பிறப்பான கிறிஸ்துமஸ் விழா கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார்.

அதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை ஏசு பிறப்பின்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவை பேராலய நிர்வாகம் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்துள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழில் சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஹர்சிங் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!