இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்..? முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த முற்றுப்புள்ளியால் சலசலப்பு!
Author: Babu Lakshmanan5 May 2022, 7:47 pm
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் புகழ்ந்து போற்றுகின்றனர்.
ஸ்டாலினும் கூட 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருந்தால் செய்யக்கூடிய பல மடங்கு சாதனைகளை இந்த ஓராண்டு காலத்தில் செய்து இருக்கிறோம்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.
கோவில் கோபுரம்
ஆனாலும் மக்கள் மத்தியில், குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளிடம் ஸ்டாலின் மீது ஒரு மன வருத்தம் இருப்பதை வெளிப்படையாகவே உணர முடிகிறது. அதுபற்றி முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினிடமே கேள்வியாகவும் எழுப்பப்பட்டு விட்டது. அது ஒரு கிடுக்குப்பிடி கேள்வி போலவும் அமைந்துவிட்டதுதான் இதில் ஹைலைட்!
அதுவும் கருணாநிதியின் நினைவிடத்தில், கோவில் கோபுரம் போன்ற அலங்காரத்துடன் இந்து சமய அறநிலையத்துறை என்று குறிப்பிடப்பட்டிருந்த வீடியோ
சமூக ஊடங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்தான் அந்த கேள்வி எழுப்பப்பட்டது.
கேள்வி
தமிழக சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் நத்தம் விசுவநாதன் “தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதலமைச்சர் பொதுவானவர். எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர், எல்லா மத பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லும்போது தீபாவளிக்கு மட்டும் ஏன் வாழ்த்து சொல்வது இல்லை?”என்று கேள்வி எழுப்பினார்.
அதைக்கேட்டதும் திமுக எம்எல்ஏக்கள் சற்று அதிர்ந்துதான் போனார்கள்.
இதைத்தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
விளக்கம்
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “தனிப்பட்ட ஒருவருடைய விருப்பத்தை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. எம்மதமும் சம்மதம் என முதலமைச்சர் செயல்படுகிறார். இதுவரை இந்துக்களை பற்றி எந்த கருத்தையும் தவறாக சொல்லவில்லை” என்றார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, “இது அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் கூறிவிட்டார். எனவே இது குறித்து யாரையும் கட்டாயப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டார்.
தப்பில்லையே
அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக உறுப்பினர் பேசியதில் தவறு ஏதும் இல்லை. அனைவருக்கும் பொதுவானவராக இருக்கக்கூடிய முதலமைச்சர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையே, ஏன் என்றுதான் கேள்வி எழுப்பினார். எனவே இதில் எந்த தவறும் இல்லை” என்று கூறினார்.
இதனால் சபையிலிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், பதில் கூற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
முதல்வர் விளக்கம்
அவர் விளக்கம் அளித்து பேசும்போது, “தமிழகத்தில் எங்களுடைய கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி. அந்த கூட்டணியின் மதச்சார்பற்ற அரசே தமிழகத்தில் நடந்து வருகிறது. இன்றைக்கு திட்டமிட்டே ஒரு சிலர் ஆன்மீகத்திற்கு எதிராக
திமுக இருப்பது போல் காட்ட முயற்சி செய்கிறார்கள். இது பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி. தலைவர் கருணாநிதி ஆட்சி. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்
இதுதான் திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் நாங்கள் ஒருபோதும் அடிபணிந்து போக மாட்டோம்” என ஆவேசமாக தெரிவித்தார்.
அவருடைய பதில் மூலம், மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார் என்பதை அனைத்துத் தரப்பினரும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் ஆன்மீகவாதிகளிடம் சில விஷயங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து இருக்கிறது.
வாழ்த்து வாபஸ்
அவர்கள் கூறும்போது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திருத்தணி கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட வெள்ளி வேல் ஒன்றை திமுக நிர்வாகிகள் பரிசாக அளித்தபோது அதை உற்சாகமாக பெற்றுக் கொண்டு ஸ்டாலின் போஸ் கொடுக்கவும் செய்தார். திமுகவில் 90 லட்சம் இந்துக்கள் உள்ளனர் என்றும் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பெருமைப்பட்டு பேசவும் செய்தார். இதுதவிர கேரள மக்கள் வாமன அவதாரத்தை போற்றும் விதமாக கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கிறார்.
அதனால் தற்போது சட்டப் பேரவையில் அவர் அளித்துள்ள பதில் எங்களுக்கு கவலையளிக்கும் விஷயமாகத்தான் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் கடவுள் நம்பிக்கை கொண்ட இந்துக்களில் பெரும்பான்மையானோர், அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர் என்பதும் நிஜம்.
காரணம், இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் ஏற்கனவே 2014-ம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். அப்போது அவர் தனது முகநூல் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி
வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதைத்தொடர்ந்து அந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்போது திமுக தலைமைக் கழகம் ஒரு செய்தி குறிப்பையும் வெளியிட்டது. அதில், “திமுக பொருளாளர் ஸ்டாலினின் பிரத்தியேக இணையதளத்தில், அவர் விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துகளை தெரிவித்ததாக வந்துள்ளது. அவருடைய இணையதளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப் போல ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர்.
இது ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று மறுப்பு கூறப்பட்டது. அப்போது திமுக தலைவர் கருணாநிதி உயிரோடு இருந்தார் என்பதும் நினைவு கூறத்தக்கது.
உதயநிதி
இதன்பின்பு 2020ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாள் இரவில் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுதியது. மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஒரு சிறுமி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருந்ததுதான் அதற்கு காரணம்.
அவருடைய இந்த பதிவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கிய உதயநிதி விளக்கம் அளித்து ஒரு பதிவையும் வெளியிட்டார்.
“எனக்கும் என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை.. ட்விட்டரில் போட்டது என் அம்மாவின் விநாயகர் சிலை. பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அந்த சிலையைப் பார்த்த என் மகள், இதை எப்படி செய்வார்கள் என்று என்னிடம் கேட்டார். நான் கூறியதும், ‘கரைப்பதற்கு முன் இந்த சிலையை வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொடுங்கள்’ என்று மகள் என்னிடம் கேட்டார். அவரின் விருப்பத்தின்பேரில் நான் தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த சிலையை அவர் விருப்பத்துக்காக என் ட்விட்டர் பக்கத்திலும் பதிந்தேன். அவ்வளவே” என்று கூறியிருந்தார்.
இந்த இரண்டு நிகழ்வுகள் மூலமே ஸ்டாலினும் அவருடைய மகன் உதயநிதியும் இந்து பண்டிகை விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பின்பு முதலமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பார் என்று நாங்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தோம். ஆனால் முதலமைச்சர் தற்போது
சட்டப் பேரவையில் தெரிவித்திருப்பதை முழுமையாக படித்துப் பார்த்தால்…” என்று வாக்கியத்தை முடிக்காமல் அதன் உள் அர்த்தத்தை ஆன்மீகவாதிகள் உணர வைக்கின்றனர்.
0
0