கோவையில் பிரபல மாலுக்கு ரூ.1 லட்சம் அபராதம்… மாநகராட்சி நிர்வாகம் அதிரடி ; குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை!!
Author: Babu Lakshmanan10 October 2023, 4:58 pm
சக்தி பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை Prozone மால் சேதப்படுத்தியதாகவும், அதற்கான அபராதத்தினை செலுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி வடக்கு மண்டல உதவி பொறியாளர் Prozone மாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது ;-“கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 21க்கு உட்பட்ட சக்தி பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலினை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுவனம் சேதப்படுத்தி உள்ளது.
இச்செயலுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதித்த பொழுது அதனை வாங்க மறுத்துள்ளது. எனவே சேதப்படுத்தப்பட்ட மழைநீர் வடிகாலினை சரி செய்யவும், மாநகராட்சி மூலம் விதிக்கப்பட்ட அபராதத்தினை உடனடியாக செலுத்தும் படியும் தவறும் பட்சத்தில் மாலுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், வணிக வளாகத்தில் செயல்படும் கடைகள் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Prozone மாலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.